குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
நாளைய தினம் அனுஷ்டிக்கப்படவுள்ள மாவீரர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம், 2009ஆம் ஆண்டு கிளிநொச்சி பகுதியை இராணுவத்தினர் கைப்பற்றிய பின்னர் இராணுவத்தினரால் சிதைக்கப்பட்டது. அத்துடன் 2013ஆம் ஆண்டு இப் பகுதியில் நுழைந்த இராணுவத்தினர் முகாமிட்டிருந்தனர்.
இந்த நிலையில் கடந்த வருடம் கனகபுரம் துயிலும் இல்லத்திலிருந்து இராணுவத்தினர் வெளியேறி இருந்தனர். இதனையடுத்து கடந்த மாவீரர் தினத்தின்போது மாவீரர் நாள் நிகழ்வுகளும் இங்கு இடம்பெற்றன.
இதேவேளை, இந்த வருடமும் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்படு நாளைய தினம் மாவீரர்களுக்கு விளக்கேற்ற கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் தயாராகி வருகின்றது.
.இந்த நிலையில் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிதைக்கப்பட்ட கல்லறைகளை ஒரிடத்தில் சேர்த்து நினைவிடம் ஒன்றை உருவாக்கும் பணியில் கிளிநொச்சி பகுதி மாவீரர் குடும்பினர் மற்றும் பொதுமக்கள் ஈடுபடுகின்றனர்.
சிதைக்கப்பட்ட கல்லறைகளின் நடுவில் இப் பணியில் போரில் கையை இழந்த இளைஞர் ஒருவரும் இணைந்துகொண்டிருக்கும் இக்காட்சி சொல்லும் செய்திகள் பல