இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள் பொஸிற்றிவ் பொன்னம்பலம்

வாறவை வந்து ஒழுங்கா நிண்டு திண்டு குடிச்சிட்டுப் போனால் எல்லாருக்கும் நல்லது….

சனி முழுக்கு 12  – பொஸிற்றிவ் பொன்னம்பலம்

நாங்கள் வடிவா ஆலோசிச்சுத்தான்  சிலதுகளைச் செய்ய வேணும் எண்டு சொல்லுறது உண்மைதான். மத்தியானம்போலை உவள்  பவளம் வடை வாழப்பழம், சர்க்கரைச் சாதம் எண்டு ஒரு சரையிலை கொண்டுவந்தவள்.“ என்ன விசேஷம்?” எண்டு கேட்டன். “நேத்திக் கடன் அண்ணை” எண்டாள். “என்னத்துக்கு ?” எண்டு கேட்டன். “உவன் தம்பிக்குத்தான்  நேத்தி வைச்சனான்” எண்டாள். “என்ன வேலை வெட்டிக்காகவோ? இல்லை சோதினை கீதினையோ?” எண்டு கேட்டதுதான் தாமதம் வெம்பி வெம்பி  அவள் அழுதாள். பாக்கப் பாவமாக் கிடந்திது. “அழாமல் விபரத்தைச் சொல்லடி” எண்டன். அவள் சொன்னதைக் கேக்க எனக்கும் விசராக்கிப் போவிட்டுது. வாறவை வந்து ஒழுங்கா நிண்டு திண்டு குடிச்சிட்டுப் போனால் எல்லாருக்கும் நல்லது. அது எல்லாருக்கும் சந்தோஷம். அதைவிட்டிட்டு விசர் வேலை பாத்தால்? பவளம் சொன்னதை அப்பிடியே சொல்லுறன். கேளுங்கோ.

போன நல்லூர் திருவிழாவுக்குள்ளை  என்ரை தம்பி வந்திட்டுப் போனவன் எல்லே? அவனைத் தம்பி எண்டு சொல்ல இப்ப அருவெருக்கிது. அந்தத் தறுதலைதான் எல்லாத்துக்கும் கால். அது வெளியிலை போனதுக்கு எங்களை “ஏன் நாயே?” எண்டு கூடக் கேக்கேல்லை. இஞ்சை வாறதுக்கு முன்னந்தான் ஒரு நாள்  ரெலிபோன் எடுத்து “ அக்கா! உன்னைப் பாக்க ஆசையாக் கிடக்கு. அடுத்த மாசம்  வாறன். வந்து கதைக்கிறன்” எண்டு உறவு கொண்டாடிப் போட்டு  இரண்டு மூண்டு கிழமைக்குள்ளை வந்திறங்கிச்சிது.  வந்தவன்ரை கோலத்தைக் கண்கொண்டு பாக்கேலாமைக் கிடந்திது. அப்பிடிக் கேவலம். ஒரே குடியும் கும்மாளமுமாத்தான் ஜேர்மனியிலை இருந்தது எங்களுக்குத் தெரியாமைப் போச்சுது. தெரிஞ்சிருந்தால் வந்தண்டே கலைச்சிருப்பன். வந்தாப்பிறகு பாத்தால்  பெட்டி பெட்டியாச் சிகரெட்டும், பெரிய விஷ்கிப் போத்தல் நாலைஞ்சும் அவற்றை சூட்கேசுக்கை கிடந்ததை என்ரை சின்னவள் அறையைக் கூட்டப் போகேக்கை கண்டிட்டு வந்து சொல்லிப்போட்டாள். கன நாளைக்குப் பிறகு வந்தவனை இடையிலை கலைக்கேலுமோ?

காலமை நேரத்துக்கு எழும்பான். பிறகு எழும்பி தேத்தண்ணியைக் குடிச்சிட்டு ரெலிபோன் அடிக்க ஒட்டோ வரும். அதிலை ஏறிக் குந்தினா எங்கை போறானோ, எங்கை வாறானோ தெரியாது.  கையிலை மரக்கறி, மீன் , முட்டை அல்லது இறைச்சியோடை வந்திறங்கி “அக்கா இந்தா. இதைச் சமை” எண்டு போடுவன். குறை சொல்லப்பிடாது  ஏராளமாத்தான் சாமான் சக்கட்டை வேண்டிக் கொண்டு வருவன். உண்மையைச் சொல்லப்போனால் அப்பிடித் திண்டு குடிக்க எங்களுக்கு ஏலாது. பிள்ளையளும் ஆசைப்படும். அப்ப கொஞ்ச நாள்  விரதம் எண்டும் பாராமல் வீட்டுக்கு வெளியிலை வைச்சுச் சமைச்சுப் போட்டன்.  என்ரை மனுசன் புறுபுறுத்தபடி. பின்னை அரியண்டம் வேண்டாம் எண்டிட்டு விரதம் இல்லாத நாளாப் பாத்து வேண்டிக்கொண்டு வா. இல்லாட்டிப் போய் எங்கையன் கடைவழியை உன்ரை அலுவலைப்பார் எண்டு கத்தினன். அதுக்குப் பிறகு உவன் யாழ்ப்பாணம் காணப் போய் வருவன். போயேக்கை சண்டாளன் என்ரை பெடியையும் எனக்குத் தெரியாமல் கூட்டிக் கொண்டு போகத் துவங்கிவிட்டான்.

அவனும் சோதினை எடுத்துப் போட்டு வேலை வெட்டி இல்லாமல் இருந்தவனெல்லே. அவனோடை போய் வாய்க்கு ருசியாத் திண்டு பழகிவிட்டான். அவன் போனப் பிறகுதான் பிள்ளையள் சொல்லிச்சிதுகள் அவற்றை வாயிலையும் இடை சுகம் மணத்ததாம்.“ஏனெடி அவன் நிக்கேக்கை சொல்லேல்லை?”  எண்டு கேட்டதுக்கு , “மாமாவைப் பேசிப்போடுவியள் எண்டு பயத்திலை சொல்லேல்லை”  எண்டுதுகள். எல்லாரையும் காசாலை மடக்கிப் போட்டான். முதல் புறு புறுத்த மனுசனும் பிறகு அவனை “கொஞ்ச நாளைக்கு நிண்டிட்டுப் போவன்” எண்டு சொல்லுற அளவுக்கு காசு விளையாடின கதை பிறகுதான் எனக்குத் தெரியும். அவருக்கு ஒரு புது சைக்கிள். தங்கச்சிக்கும் ஒரு லேடிஸ். பெடிக்கு ஒரு நுளம்பு.என்ன நடந்திதோ தெரியாது. இப்ப பெடி வீட்டிலை நிக்கிறேல்லை.  எங்கை போறானோ. ஆரோடை சேத்தியோ? ஒண்டும் தெரியிதில்லை . இரண்டொண்டு படலைக்குள்ளை வந்து நிண்டு “கோபு..கோபு…” எண்டு கத்திறதுதான் கேக்கும். உடனை இவர் நுளம்பை எடுத்து உளக்குவர். ஆளைக் காணக்கிடையாது. வாறதும் இரவிலை செண்டுதான். இப்ப வாள் வெட்டு,சண்டை சச்சரவு எண்டு கனக்க யாழ்ப்பாணத்திலை கூடிப் போச்சுதெல்லே? அதுதான் பயமாக் கிடக்கு. பெடியையும் பேச ஏலாமைக் கிடக்கு. “பேசினால் கயிற்றுத் துண்டோடை ஏறினால்…!”  எண்ட பயம். அதாலை தின்னவும் முடியாமல் கக்கவும் முடியாமல் மனசு கிடந்து வேகுது அண்ணை. அதாலைதான் நேத்தி வைச்சுப் பிள்ளையாரிட்டைச் சொல்லி அழுது போட்டு வாறன்.இவ்வளவும் பவளம் எனக்குச் சொல்லிக் கதறினது.

நீங்கள் நினைக்கிறியளே. பவளம் மட்டும் எண்டு. எத்தினை பவளங்கள் இப்ப யாழ்பாணத்திலை ஏங்கினபடி சீவிக்கினம் தெரியுமே? நிண்ட வெள்ளத்தை வந்த வெள்ளம் அள்ளிக் கொண்டு போன கதையாக் கன கதையள். மகாபாரதம், இராமாயணக் கதையள் மாதிரியும் சொல்லலாம். கன குடும்பம் மனத்தளவிலை உடைஞ்சு போச்சினம். வெளியிலை சொன்னால் மானக் கேடு எண்டது அவையின்ரை விளக்கம். ஆனால் உப்பிடிப் போய் ஏதேலுமொண்டிலை சிக்கி பொலிஸ் ஜீப்பு வந்து படலேக்கை நிண்டால்… கதை என்ன? அப்ப மானம் என்ன வீட்டுக்கை மரியாதையா நிக்குமோ? அப்ப காலா காலத்திலை பெடி பெட்டையளைக் கண்டிச்சு வளக்காட்டில் குற்றம் கடைசியிலை தாய் தேப்பனிலைதானே வந்து விழும். பிறகு வீட்டிலை உள்ளதுகளைக் கட்ட அந்த வாள் வெட்டுக் கொம்பனியிலை உள்ள ஒராள்தான் வருவன்.நல்லவன் பெரியவன் வரான். என்ன மனம் கடுக்கிதோ? கவனம்.

  • பொஸிற்றிவ் பொன்னம்பலம்

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.