Home அரசியல் மதவாதமும் அரசாங்கமும் – செல்வரட்னம் சிறிதரன்

மதவாதமும் அரசாங்கமும் – செல்வரட்னம் சிறிதரன்

by admin

சகிப்புத் தன்மை, விட்டுக்கொடுத்து இணைந்து வாழ்தல், மற்றவர்களுடைய உரிமைகளை மதித்தல், சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டி, நீதியான செயற்பாடுகளை ஊக்குவித்தல், மனித உரிமைகளை மதித்துச் செயற்படுதல், நீதியை நிலை நாட்டுதல், இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு இழப்பீடு வழங்குதல் போன்ற பல விடயங்களில் இலங்கை அரசு  அரசியல் ரீதியாக இன்னும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற புத்த சாசன அமைச்சு தொடர்பிலான குழுநிலை விவாதம் இதனை வெளிப்படுத்தியிருக்கின்றது. இந்த அமர்வின்போது, கடும் வாதப் பிரதிவாதங்களும், கடும் போக்கிலான வார்த்தைப் பிரயோகங்களும் இடம்பெற்றிருந்தன.
ஒரு ஜனநாயக நாட்டின் நாடாளுமன்றத்தின் நாடாளுமன்றத்தில் கருத்துப் பரிமாறல்கள், விவாதங்கள் என்பன இடம்பெறுவது அவசியம். ஜனநாயக உரிமைகள் நிலைநாட்டப்படுவதற்கும், ஜனநாயகச் செயற்பாடுகள் மேம்படுவதற்கும் இத்தகைய செயற்பாடுகள் வழி சமைக்கும். ஊக்குவிப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
ஆயினும் இலங்கை நாடாளுமன்றத்தில் இந்தத் திகதியில் இடம்பெற்ற வாதப்பிரதிவாதங்களும் வார்த்தைப் பிரயோகங்களும் அவற்றைப் பார்த்தவர்களின் மனங்களில் அச்சத்தை ஊட்டுவதாக அமைந்திருந்தன.
பல இன மக்களும், பல மதங்களைச் சார்ந்தவர்களும் வாழ்கின்ற இந்த நாட்டில், இன ஒற்றுமை, மத ஒற்றுமை இனங்களுக்கிடையிலான நல்லிணக்க வாழ்க்கை முறை என்பவற்றுக்கு எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகின்றதோ என்ற எதிர்காலம் பற்றிய பீதியை நாடாளுமன்றத்தின் இந்த அமர்வு ஊட்டியிருப்பதையே காண முடிந்தது.
வடக்கில் பௌத்த விகாரைகளை அமைக்கக் கூடாது என்ற வடமாகாண சபையின் தீர்மானத்திற்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இனவாதத்தைத் தூண்டும் வகையிலேயே, அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அரச தரப்பில் கண்டனம் வெளியிடப்பட்டது. அந்தத் தீர்மானத்திற்கு சட்ட ரீதியான வலு கிடையாது என்றும் அங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
பௌத்த மதத்தைப் பின்பற்றுகின்ற பொதுமக்கள் இல்லாத இடங்களில் பௌத்த விகாரைகளை அமைக்கக் கூடாது. அத்தகைய இடங்களில் புத்தர் சிலைகள் நிறுவுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதே வடமாகாண சபையின் தீர்மானமாகும்.
பௌத்த மதத்தைச் சேர்ந்த சிங்கள மக்கள் இல்லாத இடங்களில் – பௌத்த மதம் அல்லாத வேறு மதங்களைப் பின்பற்றுபவர்களான தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற இடங்களில் விகாரைகளை அமைப்பதும், புத்தர் சிலைகளை அமைப்பதுவும், இன ரீதியான மத ரீதியான ஆக்கிரமிப்பு நடவடிக்கையாகும் என்பதையே வடமாகாண சபையின் தீர்மானம் சுட்டிக்காட்டியிருக்கின்றது.
இத்தகைய ஆக்கிரமிப்பு நடவடிக்கையானது மோசமான ஒரு யுத்தத்தின் பின்னர் இங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவதற்கு ஒரு போதும் உதவ மாட்டாது என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. ஆயினும் வடமாகாண சபை நிறைவேற்றியுள்ள தீர்மானத்தின் உண்மையான நோக்கத்தைப் புரிந்து கொள்ளாமல்தான், ஆளுந் தரப்பினர் அதற்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டார்கள் என்று கருதுவதற்கு இடமில்லை.
ஏனெனில் வடக்கும் கிழக்கும் தமிழர்களின் பூர்வீக வாழ்விடங்கள், அவைகள் அவர்களுடைய தாயகப் பிரதேசம் என்ற கருத்து நீண்ட காலமாகவே அரசியல் அரங்குகளிலும், வேறு துறை சாhர்ந்த அரங்குகளிலும் ஒலித்து வந்திருக்கின்றது.
இதன் அடிப்படையிலேயே வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டும் என்றும், இணைந்து வாழ இணங்கி வராவிட்டால், தமிழ் மக்களுக்கென ஒரு தனிநாட்டை உருவாக்க வேண்டும் என்ற அரசியல் ரீதியான கோரிக்கை முன்வைக்கப்பட்டு, அதற்கான சாத்வீகப் போராட்டங்கள் அடக்கியொடுக்கப்பட்ட பின்னணியில் ஆயுதப் போராட்டம் தலையெடுக்க நேர்ந்திருந்தது.
உள் நோக்கம் கொண்ட செயற்பாடு
இப்போதுள்ள அரச தரப்பினர் இந்த அரசியல் பின்னணியையும் அதன் உண்மைத் தன்மையையும் அறியாதவர்களாக இருக்கின்றார்கள் என்று கூற முடியாது.
அதேபோன்று, வடமாகாண சபையினால் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தின் உண்மையான நோக்கம், அதன் பின்னணி, அதன் உண்மையான நிலைப்பாடு என்பவற்றை அரச தரப்பினர் அறிந்திருக்க மாட்டார்கள் என்று கருத முடியாது.
உயரிய சபையாகிய நாடாளுமன்றத்தில் ஒரு கருத்தை வெளியிடும்போது. அதுபற்றிய விபரங்களையும் உண்மைத் தன்மையையும் உணராமல் எவரும் உரையாற்றுவதில்லை. ஆகவே அரச தரப்பினருடைய செயற்பாடு உள்நோக்கம் கொண்டது என்று கருதுவதில் தவறு இருக்க முடியாது.
தமிழர்களின் தாயகப் பிரதேசத்தையும், தாயகப் பிரதேசத்திற்கான உரிமைக் குரலையும் இல்லாமற் செய்வதற்காகவும், அந்த அரசியல் கோரிக்கையை முறியடிப்பதற்காகவுமே வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களுடைய பூர்வீகப் பிரதேசங்களில் வலிந்து சிங்களக் குடியேற்றங்களை அரசுகள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்திருக்கின்றன.
இந்தச் செயற்பாட்டை அடியொட்டி, மத ரீதியாக ஆக்கிரமிப்பதன் மூலம் வன்முறை சார்ந்த எதிர்ப்பின்றி சிங்கள மக்களை தமிழ் பிரதேசங்களில் செறிந்து வாழச் செய்யலாம் என்பதற்காக புத்தர் சிலைகளும், பௌத்த விகாரைகளும் தமிழ் மக்களுடைய பிரதேசங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன என்பது தமிழர் தரப்பின் குற்றச்சாட்டாகும்.
ஆயினும் அரச தரப்பினர் இந்தக் குற்றச்சாட்டிற்கு நேரடியாக முகம் கொடுக்க ஒருபோதும் முனைவதில்லை. மாறாக இந்த நாடு பல இன மக்களுக்கும் சொந்தமானது. எவருக்கும் தனித்துவமான உரிமையுள்ள  பிரதேசம் என்று எதுவும் கிடையாது. எவரும் எங்கும் வாழலாம். வடக்கிலும் கிழக்கிலும் சென்று வாழ்வதற்கு குறிப்பாக சிங்கள மக்களுக்கு உரிமை இருக்கின்றது.
அதனை எவரும் தடுக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் ஆளுந்தரப்பினர் செயற்பட்டு வந்துள்ளனர்.
இந்தப் போக்கிலேயே நல்லாட்சிக்கான அரசாங்கமும் சென்று கொண்டிருக்கின்றது என்பதை, வடக்கில் எந்த இடத்திலும் பௌத்த விகாரைகளை அமைக்க முடியும். அதனை எவரும் தடுக்க முடியாது என்ற அரச தரப்பினருடைய டிம்பர் 8 ஆம் திகதிய நாடாளுமன்ற வாதம் நிலைநாட்டியிருக்கின்றது.
வெறுப்பூட்டும் பேச்சுக்களும் செயற்பாடுகளும்
வடக்கில் பௌத்த விகாரைகளை அமைப்பது மட்டுமல்லாமல், முஸ்லிம் மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் எதிரான வெறுப்பூட்டும் வகையில் பேசியும் செயற்படடும் வருகின்ற பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார தேரர் மற்றும் மட்டக்களப்பு சுமணரத்ன தேரர் ஆகியோர் பற்றி முஸ்லிம் மற்றும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் அன்றைய தினம் கருத்து வெளியிட்டிருந்தார்கள்.
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் கடந்த ஆட்சிக்காலத்தில் இருந்தே முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதப் பேச்சுக்களைப் பேசி வருகின்றார். அது மட்டுமல்லாமல் முன்னைய ஆட்சிக்காலத்தில் சில பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தூண்டி, அவர்கள் மீது மேசாமான தாக்குதல்கள்  இடம் பெறுவதற்குக் காரணமாக இருந்து செயற்பட்டிருந்தார்கள். இது எல்லோரும் அறிந்த இரகசியமாகும்.
ஆட்சி மாற்றத்தின் பின்னர் அவர் சிறிது அமைதியாக இருந்த போதிலும் மீண்டும் அவருடைய இனவாதப் பேச்சுக்களும் செயற்பாடுகளும் ஆரம்பித்துவிட்டன. எழுக தமிழ் பேரணிக்குத் தலைமை தாங்கிய வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக வவுனியாவில் இனவாத உணர்வுகளைக் கிளப்பிய எதிர்ப்புப் பேரணியை நடத்தியிருந்தார்.
அதில் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு உயிரச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான சுலோக அட்டை ஏந்திச் செல்லப்படுவதற்கும் வழி சமைத்திருந்தார். அத்துடன் கிழக்கு மாகாணத்தில் இனவாதச் செயற்பாடுகளில் ஈடுபடத் தொடங்கியுள்ள சுமணரத்ன தேரரின் செயற்பாடுகளுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக கிழக்கு மாகாணத்திற்குள்  தனது பரிவாரங்களுடன் பிரவேசிக்க முற்பட்டிருந்தார்.
அவருடைய முயற்சி நீதிமன்றத் தடையுத்தரவின் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டிருந்த போதிலும், அவரிடம் கையளிக்கப்பட்டிருந்த நீதிமன்றத் தடையுத்தரவைக் கிழிந்தெரிந்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டிருந்தார்;.அத்துடன் அவர் நிற்கவில்லை. இனவாதச் செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் அரச தரப்பினர் நடத்திய கலந்துரையாடலில் குறிப்பாக ஜனாநதியதியுடனான சந்திப்பில் கலந்து கொண்ட பின்னரும், அவர் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிராகவும் இஸ்லாம் மதத்தை நிந்தித்தும் பகிரங்கமாக கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றார்.
இந்தப் பின்னணியில் ஞானசார தேரர் மற்றும் சுமணரத்ன தேரர் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்பியிருந்தார்கள். ஆனால், அரச தரப்பினர் அந்தக் குரலில் தொனித்த நியாயத் தன்மையை உணர்ந்து கொள்ள முற்படவில்லை. மாறாக அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த வகையில் நியாயம் கேட்பதைத் தடுக்கின்ற போக்கிலேயே அரச தரப்பினர் நடந்து கொண்டனர்.
இதன் மூலம் இனவாத கருத்துக்களை வெளியிடுகின்ற பௌத்த பிக்குகளின் செயற்பாடுகளை ஒரு வகையில் நியாயப்படுத்துகின்ற வகையிலேயே அரச தரப்பினருடைய கருத்து வெளிப்பாடுகள் அமைந்திருந்தன.
அதேநேரம் இஸ்லாம் மதமும், குர் ஆனும் தொடர்ச்சியாக நிந்திக்கப்பட்டு வருகின்றது. இதனால் முஸ்லிம் இளைஞர்கள் ஆத்திரமுற்றிருக்கின்றார்கள். இதனால் அவர்கள் ஆயுதமேந்த நேரிடும் என்று இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா நாடாளுமன்றத்தில் இந்த விவாதத்தின்போது தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் அவர்கள் தமது ஆத்திரத்தை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள் . எனவே, இஸ்லாம் மதமும், குர் ஆனும் தொடர்ந்து நிந்திக்கப்பட்டால் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதைத் தடுக்க முடியாமல் போகும்.
அத்தகைய நிலைமை ஏற்பட்டால் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியதனால் ஏற்பட்ட பின்னடைவைப் போன்று, நாடு மேலும் 60 ஆண்டுகள் பின்னடைவைச் சந்திக்க நேரிடும் என்று இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா எச்சரிக்கை செய்திருக்கின்றார்.
மோசமான ஒரு யுத்தத்திற்கு முகம்கொடுத்து, இயல்பு நிலைமைக்குத் திரும்புவதற்காகத் தள்hளாடிக் கொண்டிருக்கின்ற நிலையில் இந்த எச்சரிக்கை வெளிப்பட்டிருக்கின்றது. இது நாட்டின் சுபிட்சமான ஓர் எதிர்காலத்திற்கு நல்ல அறிகுறியாகத் தென்படவில்லை.
அமைச்சர் ஹிஸ்புல்லா விடுத்துள்ள எச்சரிக்கையானது முஸ்லிம் மக்கள் சம்பந்தப்பட்டது. முஸ்லிம்கள் தொடர்பிலான தீவிரவாதம் என்பது பல்வேறு விபரீதமான விளைவுகளுக்கு வழிகோலக் கூடியது. இதனை உலக நாடுகள் பல அனுபவத்தில் கண்டு அல்லலுற்றிருக்கின்றன.
ஆக்கத்தை நோக்கிய பயணமே தேவை.
தமிழ் மக்களுக்கு எதிரான அரசியல் ரீதியான தீவிரவாதம் என்பது அரச பயங்கரவாதமாகப் பல வடிவங்களில் தலையெடுத்திருந்தன. இதன் காரணமாக காலத்துக்குக் காலம் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் நாட்டில் கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தன.
இத்தகைய போக்கே தமிழ் மக்களை ஆயுதமேந்த வேண்டிய நிலைமைக்குத் தள்ளியிருந்தது. தமது அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக மட்டுமல்லாமல், தமது தற்காப்புக்காகவும், தமிழ் இளைஞர்கள் ஆயுதங்களைக் கையில் எடுக்க வேண்டிய சூழல் உருவாக்கப்பட்டிருந்தது என்பதை மறுக்க முடியாது.
அத்தகைய ஒரு நிலைமை மீண்டும் நாட்டில் உருவாகுவதற்கு வழியேற்படுத்திவிடக் கூடாது. ஆயுதப் போராட்டத்தின் வலி என்ன அதன் பாதிப்புக்கள் என்ன என்பதை இந்த நாடு ஏற்கனவே ஒரு படிப்பினையாகப் பெற்றிருக்கின்றது.
முப்பது வருடங்களாகத் தொடர்ந்த யுத்தத்திற்கான காரணம் என்ன, அந்த இழப்புக்கள் அழிகளில் இருந்து எவ்வாறு மீள்வது என்பதுபற்றி தீவிரமாகச் சிந்தித்து நாட்டை வளமான பாதையில் இட்டுச் செல்வதற்கான முயற்சிகளும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.
இதற்கான வழிகாட்டல்களை ஐநா மனித உரிமைப் பேரவையும், சர்வதேச நாடுகளும் முன்னெடுத்திருக்கின்றன. அதன் அடிப்படையிலேயே யுத்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களுக்குப் பொறுப்பு கூறும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஐநாவும் சர்வதேசமும் வலியுறுத்தி வருகின்றன.
மோசமான யுத்தத்தினால் நாட்டின் தேசியத்திற்கும், அதன் ஒருமைப்பாட்டிற்கும் ஏற்பட்டிருக்கின்ற காயங்களை ஆற்றிக் கொண்டு முன்னேற்றப்பாதையில் அடியெடுத்து வைத்து முன்னோக்கிச் செல்ல வேண்டிய நிலையில் மீண்டும் ஒரு பின்னடைவை சந்திக்க நேர்வதை அனுமதிக்கக் கூடாது. முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனவாதச் செயற்பாடுகள் என்பது உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.
பௌத்த பிக்குகள் சம்பந்தப்பட்டிருக்கின்றார்கள் என்பதற்காக அரசாங்கம் இதுவிடயத்தில் கண்டும் காணாத வகையிலான ஒரு போக்கைக் கடைப்பிடிக்க முடியாது. அது நாளடைவில் கட்டுப்படுத்த முடியாத அளவில் மோசமான விளைவுகளுக்கு வழியேற்படுத்திவிடும்.
பல்லின மக்களும் பல மதங்களைச் சேர்நத மக்களும் வாழ்கின்ற ஒரு நாட்டில் மக்கள் விட்டுக் கொடுப்புடனும், இணக்கப்பாட்டுடனும், நல்லுறவுடனும் வாழ வேண்டியது அவசியம். ஒருவரை ஒருவர் மதித்துச்  செயற்படத் தவறினால் இனங்களுக்கிடையில் மோதல்கள் ஏற்படுவதையும், நாடு அமைதியிழந்து அழிவுப் பாதையில் செல்வதையும் எவராலும் தடுத்து நிறுத்த முடியாமல் போய்விடும்.
இன நிந்தனை, மத நிந்தனை என்பவற்றை எந்தவொரு சூழலிலும் எந்தவொரு காரணத்திற்காகவும் அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு அனுமதிப்பதென்பது பாரபட்சமான ஆட்சி முறையாகிவிடும். பாதிக்கப்படுபவர்கள் பாரபட்சமான ஆட்சி நடத்தும் அரசாங்கத்தை மதிக்கமாட்டார்கள். அதற்கு எதிராகக் கிளர்ந்த எழவே முயற்சிப்பார்கள். இது நல்லாட்சிக்கு நல்லதல்ல.
முன்னைய அரசாங்கத்தின் யதேச்சதிகாரப் போக்கில் இருந்து மீட்டு, நாட்டையும் நாட்டு மக்களையும், ஒரு ஜனநாயக நல்லாட்சியின் வழி நடத்த வேண்டும் என்பதற்காகவே புதிய அரசாங்கம் நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. இதற்காகவே மக்கள் பேதங்களைக் கவனத்தில் கொள்ளாமல் புதிய தலைமையையும் புதிய ஆட்சியையும் உருவாக்குவதற்காக வாக்களித்தார்கள்.
ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்ட 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதிய ஜனாதிபதி தேர்தல் என்பது மிகுநத அச்சுறுத்தலான சூழலிலேயே நடத்தப்பட்டது. அப்போதைய அரசுக்கு எதிரான வேட்பாளர்களும்சரி, அரசுக்கு எதிராக வாக்களிக்க முனைந்திருந்த வாக்காளர்களான பொதுமக்களும் சரி மோசமான உயிரச்சுறுத்தல்களை எதிர்நோக்கியிருந்தார்கள். அப்போது, மிகவும் துணிகரமாக அவர்கள் செயற்பட்டிருந்தார்கள்.
எனவே எதேச்சதிகாரப் போக்கில் சென்ற நாட்டின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காகத் துணிந்து செயற்பட்ட மக்களின் இறைமையையும் அவர்களின் பொறுப்பையும் நல்லாட்சி அரசாங்கம் உதாசீனம் செய்துவிடக் கூடாது.
இனவாதத்தைக் கக்குபவர்களையும் இனவாதம் மதவாதத்தைத் தூண்டுபவர்களையும் சட்ட ரீதியாக அணுகி அவர்களின் அழிவுக்கு வழிகோலும் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளியிட அரசாங்கம் இறுக்கமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். பாரபட்சமான முறையில் பௌத்த பிக்குகளின் திட்டமிட்ட இனவாதச் செயற்பாடுகளுக்கு சட்டம் இடமளிக்கக் கூடாது. எவராக இருந்தாலும் சட்டமும் ஒழுங்கும் சரியான முறையில் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
இனவாதத்தைத் தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டார்கள் என்பதற்காக சிங்களம் மற்றும் முஸ்லிம் தரப்புக்களைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டார்கள். ஆனால் தொடர்ச்சியாக சட்டத்தையும் ஒழுங்கையும் மீறிச் செயற்படுகின்ற பௌத்த பிக்குகளை சட்டம் கண்டுகொள்ளாமல் இருப்பதுவும், அதற்கு ஆதரவாக அரசாங்கம் நடந்து கொள்வதும் நல்லாட்சி அரசாங்கத்திற்கு நல்லதல்ல.
இந்த அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைத் தொடர்ந்து பேணுவதற்கும், நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளை மேம்படுத்தி முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கும் நாட்டில் சட்டமும் ஒழுங்கும் சீராகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும். சட்டமும் ஒழுங்கும் சீராக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம்தான் நாட்டில் நிரந்தரமான அமைதியையும் நல்லிணக்கத்தையும், ஐக்கியத்தையும் நிலைநாட்ட முடியும்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More