வார்தா புயல் மற்றும் மழை தொடர்பான விபத்துக்களில் உயிாிழந்தோா் எண்ணிக்கை 18 ஆக உயர்வடைந்துள்ளதாக இந்தியத் தகவல்கள் தொிவிக்கின்றன. வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ‘வார்தா’ புயல் நேற்று சென்னையில் கரையை கடந்தபோது சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததால் ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்ததோடு, வீடுகளின் கூரைகள் பறந்தன.
போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு ஸ்தம்பித்து விட்டது. புயல், மழை தொடர்பான விபத்துக்களில் சிக்கி பலர் பலியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் தலா 5 பேரும், காஞ்சிபுரம் மாவடட்த்தில் 4 பேரும், விழுப்புரம், நாகப்பட்டினம் மாவட்டங்களில் தலா ஒருவரும், திருவண்ணாலை மாவட்டத்தில் இருவரும் உயிரிழந்திருப்பதாகவும், பலர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வார்தா புயலுக்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 11 பேர் பலி:
Dec 13, 2016 @ 07:40
எதிர்பார்த்ததைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்திய வார்தா புயலுக்கு இதுவரை சென்னை, புறநகர் பகுதிகளில் 11 பேர் பலியாகி உள்ளனர். அத்துடன் வீடு இடிந்து விழுந்து, மரம் விழுந்து, மின்கம்பம் சரிந்து விழுந்து, வாகனங்களில் இருந்து விழுந்து என சுமார் 40 பேர் காயம் அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்து.
வார்தா புயல் காரணமாக உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபா நிவாரணம் வழங்குமாறு தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
வர்தா புயலால் ஒருநாள் நாள் முழுவதும் மூடப்பட்ட சென்னை விமான நிலையம் இன்று அதிகாலை முதல் இயங்கத் தொடங்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உட்பட புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று மாலைக்குள் சென்னையில் மின்சார விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என்று அத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.