ஹட்டன் லக்ஸபான நல்லதண்ணீர் பகுதியில் காணாமல் போனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். சிவனொளி பாத மலைக்கு யாத்திரைக்கு சென்றவர்களே இவ்வாறு வழி மாறிச் சென்று காட்டில் சிக்கியிருந்தனர்.
விமானப்படையினரின் உதவியுடன் காணாமல் போன ஐந்து பேரும் மீட்கப்பட்டுள்ளனர். மிக நீண்ட நேர போராட்டத்தின் பின்னர் இந்த ஐந்து பேரும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அனர்த்த முகாமைத்துவ நிறுவனமும் விமானப்படையினரும் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டிருந்தனர். காணாமல் போனவர்களில் நான்கு பேர் நுகோகொடை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் ஒருவர் லக்ஸபான தோட்டத் தொழிலாளி எனவும் தெரிவிக்கப்படுகிறது. பெல் 412 ரக ஹெலிகொப்டர் மூலம் தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டது.
நல்லத்தண்ணியில் காணாமல் போனவர்கள் சிக்கியுள்ள பகுதி கண்டுபிடிக்கப்பட்டது
Dec 14, 2016 @ 06:54
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நல்லத்தண்ணி – லக்ஷபான – ஹெமில்ட்டன் தோட்டத்தில் இருந்து சிவனொளிபாதமலை வனப்பகுதிக்கு சென்று காணாமல் போன ஐந்து பேர் எங்கு சிக்கியுள்ளனர் என்பதை சரியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தெரிவித்துள்ள விமானப்படை ஊடகப் பேச்சாளர் விங் கமாண்டர் கிஹான் செனேவிரத்ன இன்று காலை குறித்த பகுதிக்கு விமானப்படையினரின் குழு ஒன்று செல்லும் என குறிப்பிட்டுள்ளார்.
அவர்களை தேடும் பணியில் லக்ஷபான இராணுவ முகாமின் சிப்பாய்களுடன் இணைந்து நல்லத்தண்ணி காவற்துறையினரும் ஈடுப்பட்டு வந்தனர். லக்ஷபான தோட்ட முகாமையாளரது புதல்வர் மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் உட்பட்ட ஐந்து பேரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.