குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கடற்படைத் தளபதி வைஸ் அடமிரால் ரவீந்திர விஜேகுணவர்தன ஊடகவியலாளரை தாக்கவில்லை என அமைச்சர் பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கடற்படைத் தளபதி, ஊடகவியலாளரை தாக்கவில்லை எனவும் தள்ளிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ள அவர் கடற்படைத் தளபதியின் ஆடைகள் குறித்து வெளியான தகவல்கள் பிழையானவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கப்பல் ஒன்றை பிடித்து வைத்திருக்கும் போது அதனை விடுவிக்கும் நடவடிக்கை பைலட்டிங் என அழைக்கப்படுகின்றது எனவும் துறைமுகத்தில் அதற்கு பொறுப்பாக இருந்தவர் அச்சம் காரணமாக நடவடிக்கை எடுக்காத காரணத்தினால், கடற்படைத் தளபதி பைலட்டிங் பணியை மேற்கொண்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பைலட்டிங் பணிக்காக நீல நிற டீ சர்ட்டும், கட்டை காற்சட்டையும் அணிவது வழமையானது எனவும் கடற்படைத் தளபதியின் ஆடைகள் பற்றி வெளியான தகவல்களில் உண்மையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போராட்டக்காரர்களிடமிருந்து துறைமுகத்தை விடுவிக்க எஸ்.பி.எஸ் எனும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் இதனை அனுமதியின்றி ஊடகவியாலாளர் கமராவில் பதிவு செய்த காரணத்தினால், கடற்படைத் தளபதி அவரை தள்ளிவிட்டதாகவும் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.