குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
படைகளின் சேனாதிபதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவு இன்றி கடற்படைத் தளபதி அவ்வாறு செயற்பட்டிருக்க மாட்டார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தமக்கு தெரிந்த வகையில் தொழிலாளர் போராட்டமொன்றில் படைச் சேனாதிபதியின் உத்தரவு இன்றி படைத் தளபதியொருவர் அநாகரீகமாக செயற்படுவதற்கு வாய்ப்பு கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொழிற்சங்கப் போராட்டமொன்றை கட்டுப்படுத்த படைகளின் உதவி நாடப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவென அவர் குற்றம் சுமத்தியுள்ளார். கடற்படைத் தளபதி ரவிந்திர விஜேகுணவர்தன, யுத்தம் இடம்பெற்ற காலத்தில் மிகவும் சிறந்த முறையில் சேவையாற்றியவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடற்படையினர் மீதான மக்கள் நம்பிக்கையை சீர்குலைக்கும் நோக்கில் இவ்வாறான நடவடிக்கைகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.