அலெப்போவிலிருந்து அதிகளவான மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிரியாவின் அலெப்போ நகரில் யுத்த நிறுத்தத்துக்கு இடையில் சுமார் 10 ஆயிரம் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக தெரியவந்துள்ளது. சிரியாவில் ஜனாதிபதி; பஷர் அல் ஆசாத்தை பதவியில் இருந்து நீக்குவதற்காக கடந்த ஆறாண்டுகளாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது.
அங்குள்ள கிழக்கு அலெப்போ நகரை போராளிகளிடமிருந்து மீட்பதற்காக கடுமையான யுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில் நகரின் பெரும்பான்மையான பகுதிகளை அரச படைகள் மீட்டுள்ளன.
இந்த நிலையில் அலெப்போவில் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், துருக்கியும், ரஷியாவும் மேற்கொண்ட முயற்சியின் பலனாக அங்கு யுத்தநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த உடன்பாட்டின்படி கிழக்கு அலெப்போ நகரில் இருந்து கிளர்ச்சியாளர்களும், பொதுமக்களும் வெளியேற விட வேண்டும் எனவும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்று ஒருநாளில் மட்டும் மூன்றாயிரத்துக்கும் அதிகமான மக்கள் வெளியேறியதாகவும், போர் நிறுத்தம் அமலுக்குவந்த கடந்த 72 மணி நேரத்தில் சுமார் பத்தாயிரம் மக்கள் வெளியேறியுள்ளதாகவும் அங்குள்ள போர் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், அங்கு இன்னும் சுமார் 50 ஆயிரம் மக்கள் சிக்கித் தவிப்பதாக ஐ.நா. மனிதநேய முகாமை கவலை தெரிவித்துள்ளது.