மணிப்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளின் பின்னர் அங்கு அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக ஆர்ப்பாட்டக்காரர்கள் இம்பாலின் பல்வேறு இடங்களில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கெனவே ஐக்கிய நாகா கவுன்சிலின் காலவரையற்ற பொருளாதாரத் தடையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வன்முறைகள் காரணமாக நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பதட்டமான சூழலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இம்பால் கிழக்கு மாவட்டத்தின் பொராம்பட் மற்றும் சவோம்பங் பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் ஊரடங்கை அமுல்படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதுடன் சமூக வலைதளங்களின் மூலம் மேலும் வதந்திகள் பரவுவதனை தடுக்கும் நோக்குடக் இணைய சேவைகளை முடக்கவும் அரசு முடிவெடுத்துள்ளது.