கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது. திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது உலக வங்கியின் தெற்காசியாவுக்கான நடவடிக்கை அதிகாரி யரிஸ்ஸா லிங்டோஹ் சொம்மர் , உலக வங்கியின் நகர அபிவிருத்தி தொடர்பான நிபுணர் ஜெசிக்கா ரேசல் மற்றும் பொருாளதார பேராசிரியர் ப்ரையன் எச் ரொபர்ட்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அத்துடன் கிழக்கு மாகாண அமைச்சர்களாக எஸ் தண்டாயுதபானி, க,துரைராஜசிங்கம்,ஆரியவத்தி கலப்பத்தி ,மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இதன் போது அவுஸ்திரேலிய மற்றும் அமெரிக்க நிதியுதவியுடன் உலகவங்கியினூடாகா வடக்கு மற்றும் கிழக்கில் முன்னெடுக்கப்படும் நெல்சிப் திட்டத்தின் ஊடாக உள்ளூராட்சி மன்றங்களின் கீழுள்ள அடிப்படை வசதிகளை மேம்படுத்தல் தொடர்பாகவும் நெல்சிப் திட்டத்தினால் 25 உள்ளூராட்சி மன்றங்களின் பணிகள் நிறைவுற்றுள்ளமை தொடர்பிலும் மேலும் இந்தத் திட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் 41 வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் எடுத்துரைத்துள்ளதாக முதலமைச்சர் அலுவலக ஊடகக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது மாத்திரமன்றி உள்ளூராட்சி மன்றங்களை மேலும் வலுப்படுத்துவதற்காக வருமானங்களை பெற்றுக் கொள்வது தொடர்பிலும் அதனூடாக , உள்ளூராட்சி மன்றங்களின் ஆளணி தரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் தொடர்பிலும் கிழக்கு மாகாண முதலமைச்சர் இதன் போது உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கு எடுத்துரைத்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கிழக்கில் தொழிற்பேட்டைகளை அமைத்து அதனூடாகவும் பிராந்தியத்தின் அபிவிருத்திக்கான ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொள்வது தொடர்பான யோசனையொன்றையும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதன் போது முன்வைத்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய த்துறையின் மேம்பாட்டிற்காக முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்கள் தொடர்பாக விவசாய அமைச்சரினாலும் தற்போது கிழக்கு மாகாண கல்வித்துறையை மேம்படுத்த உலக வங்கியினால் முன்னெ்டுக்கப்படும் திட்டங்கள் அடுத்த ஆண்டுடன் நிறைவடையவுள்ள நிலையில் அவற்றை நீடிப்பதற்கான கோரிக்கையையும் கிழக்கு மாகாண கல்வியமைச்சர் முன்வைத்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாகாணங்களுக்கான அதிகாரப்பகிர்வு மற்றும் ,காணியதிகாரம் ஆகியவை வழங்கப்படாமையினால் பல மக்கள் நலத்தி்ட்டங்களை முன்னெடுக்கும் போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் உலக வங்கியும் அவுஸ்திரேலிய அரசாங்கமும் இணைந்து கிழக்கில் புதிய தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்த வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக் கொண்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.