தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை விவரங்களை வெளியிட வேண்டும் என மத்திய அரசு, தமிழக அரசுக்கு நெருக்கடியளிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில், 75 நாட்கள் கழித்து, டிசம்பர் 5ம் தேதி, இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. குறித்த கால கட்டத்தில் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை வழங்கும் போது எடுத்த புகைப்படம், ஒலி, ஒளிப்பதிவுகள் என எதுவுமே வெளியிடப்படாத நிலையில் இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதாவின் தோழியாக அறியப்படும் சசிகலா மட்டுமே அவருடன் மருத்துவமனையில் இருந்ததால், இதற்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பில் அவரே இருப்பதாக பல முனைகளில் இருந்தும் கோரிக்கை வெளியாகிக் கொண்டுள்ளது. அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகமும் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை குறித்து முழுமையாக தகவல்கள் வெளியிடாமல் உள்ளது மக்களிடையே சந்தேகத்தை அதிகரித்துள்ளது
இந்த நிலையில், அப்பல்லோ மருத்துவமனை, ஜெயலலிதாவுக்கு வழங்கிய சிகிச்சை குறித்த முழு விவரத்தையும் வெளியிட வேண்டும் என தமிழக அரசு சார்பில் உத்தரவு போயுள்ளதாகவும் இந்த உத்தரவு பின்னணியில் மத்திய அரசு உள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
பன்னீர்செல்வம் தலைமையிலான மாநில அரசுக்கு மத்திய அரசிடமிருந்து வந்த கட்டளை அடிப்படையில்தான், சிகிச்சை குறித்த விவரத்தை வெளியிட அப்பல்லோவிடம் மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோடி மற்றும் பன்னீர்செல்வம் அரசுகளின் இந்த திடீர் நடவடிக்கைகளால் சசிகலா தரப்பு சங்கடத்துக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.