177
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.மேல் நீதிமன்றத்தினால் இரட்டை கொலை குற்றவாளிகளாக இனம் காணப்பட்டு , சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இரண்டு குற்றவாளிகளும் , வெளிநாடுகளில் இருந்து , ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக அக் கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்து உள்ளார்.
யாழில் உள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் அலுவலகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
மேல் நீதிமன்றினால் குற்றவாளிகள் என இனம் காணப்பட்டவர்கள் குற்றவாளிகள் அல்ல.
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது தாக்குதல் நடாத்தினார்கள் இரட்டை படுகொலை செய்தார்கள் என குற்றம் சாட்டப்பட்டு யாழ்.மேல் நீதிமன்றினால் குற்றவாளிகள் என இனம் காணப்பட்டு இரட்டை மரண தண்டனை வழங்கப்பட்ட மூவரும் குற்றவாளிகள் அல்ல. அந்த தாக்குதல் சம்பவத்திற்கும் ஈழமக்கள் ஜனநாயக கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை.
அதில் குற்றம் சாட்டப்பட்டு குற்றவாளி என இனம் காணப்பட்ட மதனராஜா என்பவர் சம்பவ தினத்தன்று சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் எமது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு என் கண் முன்னே தான் இருந்தார்.
மற்றுமொரு குற்றவாளியாக காணப்பட்ட நெப்போலியன் என்பவர் இவ்வாறான செயலை செய்ய கூடிய நபர் அல்ல. அவருக்கு தீவகத்தில் மக்கள் செல்வாக்கு இருந்த காரணத்தால், அவரை அரசியல் நோக்குடன் இந்த வழக்கில் சிக்க வைத்தனர். குறித்த இரு நபர்களும் தற்போது வெளிநாட்டில் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்கள் வெளிநாடுகளில் எமது கட்சியின் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றார்கள்.
பிடித்தால் பிடித்து கொண்டு வரட்டும்.
அவர்களுக்கு எதிராக சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அவர்களை சர்வதேச பொலிசார் பிடித்தால் , பிடித்து இங்கே கொண்டு வரட்டும்.
சாட்சியம் அளிக்க அனுமதிக்கவில்லை.
அதேவேளை இந்த வழக்கு தொடர்பில் நான் எனது சாட்சியங்களை மேல் நீதிமன்றில் பதிவு செய்ய எனது சட்டத்தரணி ஊடாக அனுமதி கோரி இருந்தேன். அதற்கு மேல் நீதிமன்ற நீதிபதி அனுமதிக்க வில்லை.
மேல் முறையீடு செய்யப்பட்டு உள்ளது.
தற்போது மேல் நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து , மேல் முறையீடு செய்யபட்டு உள்ளது அதனால் மேற்கொண்டு அந்த வழக்கு தொடர்பில் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என தெரிவித்தார்.
சம்பவம்.
கடந்த 2001 ஆம் ஆண்டு தீவகத்திற்கு தேர்தல் பரப்புரைக்கு சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது ,துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு , வாளினால் வெட்டி , இரும்பு கம்பிகள் , கொட்டான்கள் என்பற்றினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அதில் இருவர் கொல்லபட்டு 18பேர் கடும் காயங்களுக்கு உள்ளாகி இருந்தனர்.
அந்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்றில் நடைபெற்று கடந்த 7ஆம் திகதி ஈழமக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த மூவர் குற்றவாளிகளாக இனம் காணப்பட்டு அவர்களுக்கு இரட்டை மரண தண்டனை வழங்கப்பட்டதுடன் , 20 வருட கடூழிய சிறை தண்டனையும் ஒரு இலட்சம் ரூபாய் தண்டப்பணம் அறவிட்டும் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்பளித்து இருந்தார்.
அதில் குற்றவாளிகளாக இனம் காணப்பட்ட இரு நபர்கள் வெளிநாட்டில் வசித்து வருவதனால் , அவர்களுக்கு எதிராக சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love