202
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி அப்பகுதி மக்களால் திங்கட்கிழமை மாலை அஞ்சலி செலுத்தப்பட்டது. தென் பகுதியில் இருந்து யாழ்ப்பணத்திற்கு சுற்றுலா வந்திருந்த பெரும்பான்மை இனத்தை சேர்ந்த 11பேர் சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி அப்பகுதி மக்கள் விபத்து நடைபெற்ற பகுதியில் 11 மெழுகுதிரி ஏற்றி மலர் தூபி அஞ்சலி செலுத்தி இருந்தனர்.
இதேவேளை திங்கட் கிழமை காலை யாழ்ப்பாணம் காங்கேசன்துறை (769) வழித்தட பயணிகள் சிற்றூர்தி உரிமையாளர்களின் ,வரையறுக்கப்பட்ட கம்பனி ஊழியர்களால் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக கண்ணீர் அஞ்சலி துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
அதேவேளை அன்றைய தினம் விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை பெறுப்பு ஏற்க யாழ்ப்பாணம் வந்திருந்த உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கான உணவு தங்குமிட வசதிகள் என்பன யாழ்.போதனா வைத்திய சாலை நிர்வாகத்தினரால் செய்து கொடுக்கப்பட்டது.
சடலங்களை பெறுப்பு ஏற்ற பின்னர் , தமிழ் மக்கள் எம் மீது வெறுப்புடன் இருப்பார்கள் என நினைத்து இருந்தோம் ஆனால் அவர்கள் அவ்வாறு இல்லாமல் எமக்கு சகல வழிகளிலும் ஒத்துழைப்பு உதவிகள் புரிந்து இருந்தனர் அவர்களுக்கு எமது நன்றிகள் என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கூறி சென்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love