169
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
2016ம் ஆண்டிற்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி கொடையின் வேலைகளுக்கான நிதிசார் முன்னேற்றமானது 78 சதவீதமாக காணப்படும் அதேவேளை பௌதீக ரீதியான முன்னெற்றம் 90 சதவிதமாக காணப்படுகின்றது. என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்து உள்ளார்.
வடமாகாண சபையின் 70ஆவது அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போது முதலமைச்சர் 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட விவாதத்தில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
முதலமைச்சரின். அமைச்சானது நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, சமூகசேவை, புனர்வாழ்வளித்தல், மகளிர்விவகாரம், மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாணமும், தொழிற்றுறையும் தொழில் முனைவோர் மேம்பாடும், சுற்றுலா, உள்@ராட்சி மற்றும் மாகாண நிர்வாகம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
இதில் நிர்வாக ரீதியான செயற்பாடுகளின் இலகு தன்மையினைக் கருத்தில் கொண்டு பிரதம செயலாளர் செயலகத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள நிதியும் திட்டமிடலும், மாகாண நிர்வாகம் போன்றவற்றுடன் எமது அமைச்சின் கீழ் இயங்கும்; மகளீர் விவகாரம் புனர்வாழ்வு ஆகியவற்றைத் தவிர ஏனைய துறைகளுக்கும் சேர்த்து மொத்தமாக எமது அமைச்சிற்கு 2017 ஆம் ஆண்டிற்காக ரூபா 2,732.111 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் 2,430.611 மில்லியன் ரூபா மீண்டுவரும் செலவினத்திற்கும் 301.5 மில்லியன் ரூபா மூலதனச் செலவினத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
எமது அமைச்சின் கீழ் வரும் திணைக்களங்களைத் தவிர முதலமைச்சரின் அமைச்சிற்கு மட்டும் 2017ஆம் ஆண்டிற்கு 63.138 மில்லியன் ரூபா மீண்டெழும் செலவினத்திற்காகவும், பிரமாண அடிப்படையிலான கொடைக்கு ரூபா 8 மில்லியனும் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடைக்கு ரூபா 42 மில்லியனுமாக மொத்தமாக 113.138 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வீடமைப்பு.
இத்துறைக்கு 2016 ஆம் ஆண்டில் ரூபா 12.75 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட,வறுமைக் கோட்டின் கீழ் உள்ள மற்றும் அரசாங்கத்தின் ஏனைய வீட்டுத் திட்டங்களுள் உள்ளடக்கப்படாத மிகவும் பாதிக்கப்பட்டவர்களுள் 17 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு புதிய வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டு வருகின்றன.
ஒரு வீட்டினை நிர்மாணிப்பதற்காக எமது அமைச்சின் பங்களிப்பாக750,000ரூபா வழங்கப்படுகின்றது. இத்துடன் பயனாளியின் பங்களிப்பாக ரூபா 155,000ம் சேர்த்து மொத்தமாக மதிப்பிடப்பட்ட தொகை ரூபா 905,000இல் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. எனினும் பயனாளிகள் தமது பங்களிப்பினை சேர்த்து வீட்டினை கட்டி முடிப்பதில் அவர்களது வருமானம் போதாமல் உள்ள வறுமை நிலையானது பல இடர்பாடுகளை ஏற்படுத்தியதன் விளைவாக வீட்டினை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவு செய்வதில் காலதாமதங்கள் ஏற்பட்டன.
எனவே அடுத்த ஆண்டில் இத் தொகையினை அதிகரித்து வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம். சிலருக்குக் குறித்த தொகையானது எமது “உதவிப்பாலம்” திட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்டு வீடுகளை முடித்துக் கொடுத்துள்ளோம்.
வீடுகள் இல்லாது வாழ்ந்துவரும் பலர் எம்மிடம் வீட்டுத் திட்டத்திற்காக விண்ணப்பித்திருக்கிறார்கள். யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள், வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களுக்காக வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கான நிதி ஒதுக்கீடு போதாமல் உள்ள நிலையே காணப்படுகின்றது.
இந்நிலையில் வீடமைப்புக்காக 2017 ஆம் ஆண்டுக்கு 12 மில்லியன் ரூபா மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டிலும் பார்க்க .75 மில்லியன் குறைவாகவே கிடைத்துள்ளது.
2. சுற்றுலாத்துறை.
இலங்கையின் ஏனைய பகுதிகளை பொறுத்தவரையில் சுற்றுலாத்துறை ஆனது நீண்டகால அடிப்படையில் முன்னேற்றமடைத்துள்ளது.எனினும் வடமாகாணம் தற்பொழுது தான் இத்துறையில் கால் பதித்துள்ளதால் எம்மிடையே காணப்படும் அரிய வளங்கள் ,வனப்புக்கள்,வாய்ப்புக்கள் ஆகியவை பொக்கிஷங்களாகக் கருதப்பட்டு திறமான விதத்தில் முன்னெடுத்துச் செல்லப்படவேண்டியுள்ளது.
நீண்ட கால யுத்தத்தினால் எமது கலை கலாசார சின்னங்களும், வரலாற்று சின்னங்களும் பாரிய அழிவிற்கு உட்பட்டு இருக்கின்ற வேளையில் இவற்றை உள்ளடக்கியதான சுற்றுலாத்துறை அபிவிருத்தி என்பது வரலாற்று ரீதியாகவும் சமூக, கலாசாரரீதியாகவும் எமது அடையாளத்தை நிலைநாட்டி வெளிக்கொணர்வதற்கான ஓரு உபாயமாகவும்சுற்றுலாத்துறை முன்னெடுக்கப்படவேண்டும் .
மேலாண்மைத் திறன் கொண்ட சுற்றுலா அபிவிருத்தித் திட்டம் ஒன்றின் வரைவை நாம் உறுப்பினர்களுக்கு அண்மையில் அனுப்பியுள்ளோம். உறுப்பினர்களின் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம். அத் திட்டத்தை அடிப்படையாக வைத்து நீண்ட காலத் திட்டமொன்றைத் தீட்ட இருக்கின்றோம்.
ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா ஸ்தாபனத்தின் 2017ஆம் ஆண்டுக்கான மகுட வாசகமாகிய “நிலைபேறான சுற்றுலாத்துறை -அபிவிருத்திக்கான ஒரு கருவி” என்பதற்கு அமைவாக வட மாகாணத்திலும் பல அபிவிருத்தி செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பினைத் தேடிக்கொண்டிருக்கும் இளைஞர், யுவதிகளுக்கு தொழில்சார் திறனுள்ள பயிற்சிகளை வழங்குவதன் மூலம் அவர்களை சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் தேர்ச்சியுள்ளவர்களாக பயிற்றுவித்து அதனூடாக வட மாகாணத்தில், இத்துறையில் நிலவும் பாரிய தொழில் வெற்றிடங்களை நிரப்ப முடியும். தற்பொழுது பெரும்பாலும் ஏனைய மாகாணங்களில் இருந்தே ஆளணியினர் வருவிக்கப்படுகின்றனர்.
எமது மாகாணத்தில் காணப்படுகின்ற வளங்களை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்வதன் மூலம் அவற்றினை சுற்றுலாப்பயணிகளுக்குத் தோதான சுற்றுலா பிரதேசங்களாக அபிவிருத்தி செய்யலாம்.
இதற்குப் பாரியளவில் முதலீடுகள் அவசியம். எனினும் இவ்வாறான முதலீடுகளின் மூலம் வட மாகாணத்தில் சுற்றுலாத்துறையினை விருத்தி செய்து நலிவிற்குள்ளாகியுள்ள மக்களின் வாழ்வாதாரத்தினைக் கட்டியெழுப்ப முடியும். அதன் மூலம் மாகாணத்தின் மொத்த உற்பத்தியில் சுற்றுலாத்துறையும் முக்கிய பங்களிப்பினை வழங்க முடியும்.
இவ்வருடம் (2016ம் ஆண்டு) ரூபா 50.250 மில்லியன் ஒதுக்கீட்டில் 5 மாவட்டங்களிலும் இனங்காணப்பட்ட வேலைத் திட்டங்கள் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எனினும் தொல் பொருள் திணைக்களம், கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம், வனவளப்பாதுகாப்புத் திணைக்களம் என்பவற்றிடமிருந்து உரிய அனுமதிகள் கிடைக்கப் பெறுவதில் உள்ள தாமதங்கள் தடங்கலை ஏற்படுத்தியுள்ளது.
2017 ஆம் ஆண்டிற்கு ரூபா 30 மில்லியன் நிதி மட்டுமே சுற்றுலாத்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிதியானது,சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடிய இடங்களை அழகு படுத்தல் மற்றும் அபிவிருத்தி செய்தல்.பாரம்பரிய சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்தல்,
இயற்கை சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்தல்,சமயம் சார்ந்த சுற்றுலாத்துறையை விருத்தி செய்தல், ஒருங்கிணைக்கப்பட்ட வசதிகள்ஃசௌகரியங்கள் உள்ளடங்கிய மையங்களை தனியார் துறையின் பங்களிப்புடன் உருவாக்குதல்,சுற்றுலாத் துறைக்கான தகவல்களை வெளியிடுதல் மற்றும் அத்துறை சார்ந்த ஊழியர்களுக்கான இயலுமை விருத்திப பயிற்சிகளை வழங்குதல்ஆகிய பிரிவுகளின் கீழ் அபிவிருத்தித் திட்டங்கள் தெரிவு செய்யப்பட்டு மேற்கொள்ளப்படவுள்ளன.
3. மகளிர் விவகாரம்.
மிகவும் முக்கியமான துறைகளில் ஒன்றாக காணப்படும் மகளிர் விவாகரத் துறையின் கீழ் போருக்குப் பின்னரான வட மாகாணத்தில் கடந்த காலப் போரினால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்ட மாற்று வலுவுடையவர்கள், முன்னாள் போராளிகள் மற்றும் போருக்குப் பின்னரான காலத்தில் இலகுவில் பாதிப்புக்குள்ளாகிய பெண்கள் என பலதரப்பட்டவர்களும் உள்ளனர். இவர்களது முன்னேற்றம் குறித்து மகளிர் விவகாரம் என்னும் நோக்கெல்லைக@டாக விசேட கவனம் செலுத்தி வருகின்றோம்.
அந்தவகையில் இத்துறைக்கு 2016 ஆம் ஆண்டு 10 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டு போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார மேம்பாட்டிற்கான சுயதொழில் ஊக்குவிப்புத் திட்டங்களான கோழி வளர்ப்பு , ஆடு வளர்ப்பு, நிலக்கடலை பயிர்ச்செய்கை, வீட்டுத்தோட்டம், தையல் தொழிலுக்கான தையல் இயந்திரம் வழங்கல், இறால் பிடித்தலுக்கான வள்ளம் வழங்கல், மற்றும் சுயதொழிலுக்கான பயிற்சி நெறிகள் என்பன வழங்கப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக 2017 ஆம் ஆண்டில்,பெண்களுக்கான தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தல்தொழிற் பயிற்சிகள் வழங்குதல்பெண்களின் இயல்தகைமைகளை முன்னேற்றக்கூடிய பயிற்சிநெறிகளை ஒழுங்குபடுத்தி வழங்குதல்போன்ற செயற்றிட்டங்களை முன்னெடுக்க உத்தேசித்துள்ளோம்.
சிறியளவிலான ஆடை உற்பத்தி நிலையங்களை நிறுவி அதன் மூலம் பெண்களுக்கான தொழல் வாய்ப்பினை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றையும் நடைமுறைப்படுத்துவதற்கு நிதி ஒதுக்கீடு அதிகமாக தேவைப்படுகின்றது. இந்நிதித் தேவையினை ஒதுக்கீடு செய்யப்படாது உள்ள சிறியளவு நிதியிலிருந்து பெற்றுக் கொடுக்க எண்ணியுள்ளோம்.
4. புனர்வாழ்வளித்தல்.
புனர்வாழ்வளித்தல் எனும் நோக்கெல்லையூடாக ஏற்கனவே சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டிருந்த முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளிகளாக காணப்பட்ட 538 பயனாளிகளுக்கு மொத்தமாக ரூபா 65.63 மில்லியன் மதிப்பீட்டில் இருக்கை மலசலகூடங்களை அமைத்துக் கொடுக்கும் செயற்றிட்டத்தினை முன்னெடுத்திருந்தோம்.
இதில் அமைச்சின் பங்களிப்பாக ரூபா 122,000.00 மற்றும் பயனாளியின் பங்களிப்பாக ரூபா 40,000.00 இனையும் சேர்த்து 162,000.00 ரூபா ஒரு மலசலகூடத்திற்கு மதிப்பிடப்பட்டுள்ளது. இந் நோக்கத்திற்காக கடந்த வருடம் சுகாதார அமைச்சினால் ரூபா 20.34 மில்லியன் 538 பயனாளிகளுக்குமான ஆரம்ப கொடுப்பனவிற்காக செலவிடப்பட்டிருந்தது.
மேலும் இவ்வருடத்தில் கிடைக்கப்பெற்ற 25 மில்லியன் ரூபாவினையும் சேர்த்து தற்போது வரை 210 மாற்று வலுவுடையோருக்கான விசேட மலசலகூடத்தினை பூர்த்தி செய்துள்ளோம்.
ஏனையவை பகுதியளவில் பூர்த்தியடைத்த நிலையிலுள்ளன. இதனை முழுமையாக முடிவுறுத்துவதற்கு தேவையான 20 மில்லியன் ரூபா நிதி இவ்வருடத்தில் கிடைக்கப்பெறாததால் அதன் தொடர்ச்சியை 2017 ஆம் ஆண்டில் மேற்கொண்டு முடிவுறுத்த எதிர்பார்த்துள்ளோம்.
மேலும் போதிய நிதி மூலம் கிடைக்கப்பெறும் பட்சத்தில் இவர்களின் இருக்கை மலசலகூடத்திற்கான நீர்வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் எண்ணியுள்ளோம்.
அத்துடன் வட மாகாணத்தில் முக்கியமான துறைகளில் ஒன்றாக புனர்வாழ்வும் உள்ளது. ஆனால் 2017ம் ஆண்டிற்காக இத்துறைக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. எனவே ஒதுக்கீடு செய்யப்படாது உள்ள சிறியளவிலான நிதியிலிருந்து குறிப்பிட்ட அளவு நிதியினை இத்துறைக்கு ஒதுக்கீடு செய்து 2017ம் ஆண்டு இத்துறையின் கீழ் முக்கியமான திட்டங்களை நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளோம்.
5. சட்டமும் ஒழுங்கும்.
வட மாகாணத்தில் , சட்டமும் ஒழுங்கும் பேணப்படுவதற்கான சூழலை ஏற்படுத்துவதனை நோக்கமாக கொண்டு ஒன்றிணைந்த பொலிஸ் – சிவில் பாதுகாப்புகுழுவினை அமைப்பதற்கான முயற்சிகள் 2015 ம் ஆண்டிலிருந்து எடுக்கப்பட்டபோதும் 2016 ஆண்டிலேயே இம்முயற்சி நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்தக் குழுவினை அமைப்பதற்கான கருத்தாவணம் எம்மால் தயாரிக்கப்பட்டு பொலிஸ்மாஅதிபர் மற்றும் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மாஅதிபர் ஆகியோரினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதனடிப்படையிலேயே இக்குழுவின் முதலாவது கூட்டம் இவ்வருடம் வைகாசி மாதத்தில் நடைபெற்றது.
பொலிசாருடன் தொடர்பில் இருந்தாலும் அடுத்த கூட்டங்கள் பல காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்பட்டு வந்துள்ளன. விரைவில் வரும் வருடத்தில் இக்குழு கூடும். இக்குழுவின் இலக்குப் பரப்பினுள் சட்டம், மற்றும் சமாதானம் என்பனவற்றை செயற்படுத்துதற்கான பொதுவான விடயங்களும், மாகாணத்தில் எதிர்நோக்கப்படும் போதைப்பொருள் பாவனை, பெண்கள் மற்றும் சிறுவர் துஸ்பிரயோகம், களவு, கொள்ளை போன்றவற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராய்ந்து சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்துவதற்கான முன்னேற்றப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
குறைநிவர்த்தி நடமாடும் சேவைகள்.
எமது அமைச்சினால் இந்த வருடம் யாழ் மாவட்டத்தில் இரண்டு குறைநிவர்த்தி நடமாடும் சேவைகளும் வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் தலா ஒரு குறைநிவர்த்தி நடமாடும் சேவையும் நடாத்தப்பட்டன. மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு நடமாடும் சேவை நடாத்தப்படவுள்ளது. அத்துடன் மிகவும் பின்தங்கிய பிரதேசங்களுக்கு மக்கள் சந்திப்புக்கள் போன்ற சேவைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக ரூபா 2.5 மில்லியன் மீண்டுவரும் செலவீனத்தில் செலவிடப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டில் 5 குறைநிவர்த்தி நடமாடும் சேவைகள் நடாத்த தீர்மானித்துள்ளோம்.
6. உள்ளூராட்சித்திணைக்களம்.
உள்ளூராட்சித் திணைக்களத்தை பொறுத்த வரை ஒரு மாநகர சபை, 5 நகர சபைகள், 28 பிரதேச சபைகள் ஊடாக மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன.
உள்ளூராட்சி சபை வீதிகள், திண்மக்கழிவகற்றல், கிராமிய மாற்றீட்டு சக்தி, உள்ளூரதிகாரசபை சேவைகள் மற்றும் சனசமூக நீர் விநியோகம் ஆகிய துறைகளின் ஊடாக உள்ளூராட்சி சபைகளினால் மக்களுக்கான சேவைகளை வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.
இதற்காக 2017ஆம் ஆண்டில் மீண்டுவரும் செலவினத்திற்காகரூபா 1,840.162 மில்லியனும், பிரமாண அடிப்படையிலான கொடைக்கு ரூபா 4.5 மில்லியனும், மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடைக்கு ரூபா 198 மில்லியனுமாக மொத்தமாக 2042.662 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளன.
2016ம் ஆண்டு 35 கிராமிய வீதிகள் புனரமைக்கப்பட்டு வருவதுடன் திண்மக்கழிவு முகாமைத்துவத்தில் 19 வேலைத்திட்டங்களும் உள்ளூரதிகாரசபை சேவைகளினூடாக 23 வேலைத்திட்டங்களும் சனசமூக நீர் விநியோகத்தில் 24 வேலைத்திட்டங்களும் திறன்விருத்தியில் 02 வேலைத்திட்டங்களும் மற்றும் கிராமிய மின்சாரத்திட்டத்தில் 05 மாவட்டங்களிலும் உள்ள 34 உள்ளூராட்சியதிகாரசபைகளிலும் சூரிய சக்தியினால் இயங்குகின்ற மின்விளக்குகளைப் பொருத்துவதற்குமான108 வேலைகளுக்காக மொத்தமாக ரூபா 263.74 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அவற்றுள் 87 வேலைத்திட்டங்கள் ரூபா 203 மில்லியன் செலவில் இதுவரை பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அத்துடன் பின்தங்கியதும் தனிமைப்படுத்தப்பட்டதுமான கிராமங்களின் அபிவிருத்தியின் கீழ் 06 கிராமிய வீதிகளும் ரூபா 32.9 மில்லியன் செலவில் புனரமைக்கப்பட்டு வருகின்றன.
உள்ளூராட்சி சபைகளுக்கான வருமான மூலங்களை மேம்படுத்தும் முயற்சியாக 2015இல் உருவாக்கப்பட்ட மாகாண வருமான வரிகள் திணைக்களத்தின் மூலம் 2016 ஆம் ஆண்டின் ஒக்டோபர் மாதம் வரை திரட்டப்பட்ட முத்திரைத்தீர்வை ரூபா 298.5மில்லியனும், நீதி மன்றத் தண்டப்பணம் ரூபா 94.13மில்லியனும் திரட்டப்பட்டுள்ளன. இதில் முத்திரைத்தீர்வை வருமானம் 2017 இல் உள்ளூராட்சி சபைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.
2017 ஆம் ஆண்டில் முத்திரைத்தீர்வை வருமானம் 458 மில்லியன் ரூபாவும், நீதி மன்றத் தண்டப்பணமாக 65மில்லியன்ரூபாவும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் 24 வருமான பரிசோதகர்கள், 5 ஆய்வு உத்தியோகத்தர்களும் இவ்வருடம் உள்ளூராட்சி சபைகளுக்கு நியமிக்கப்பட்டு வருமான முகாமைத்துவம் மேம்படுத்தப்பட்டு வருகின்றது.
வடக்கு மாகாண இறைவரித் திணைக்களம் 08.07.2015இல் தனது தொழிற்பாடுகளை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்ததில் இருந்து 2016 நவம்பர் வரையிலான காலப்பகுதியில் 894 மில்லியன் ரூபாவை மொத்த அரசிறையாக சேகரித்துள்ளது.
இவ் வருடம் ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் 674.5 மில்லியன் ரூபா சேகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே 25 ஆண்டுகளாக செயற்பட்டு வரும் ஏனைய மாகாண இறைவரித் திணைக்களங்கள் சிலவற்றை பின்தள்ளி தற்போது இறைவரி சேகரிப்பில் மாகாண வரிசையில் ஆறாம் (6) இடத்தில் இருந்து தொடர்ந்து முன்னேறி வருகின்றமையானது இத் திணைக்களத்தின் செயற்றிறன் வாய்ந்த வரி நிர்வாகத்தை கோடிட்டுக் காட்டுகின்றது.
எமது திணக்களத்தால் இவ்வருடம் மொத்த அரசிறை சேகரிப்பாக ஏறத்தாழ ரூபா 750 மில்லியன் இலக்கிடப்பட்டுள்ளது. இது எதிர்பார்க்கப்பட்ட இலக்கை விட மும்மடங்கு அதிகமாகும். அடுத்த வருடம் ஏறத்தாழ ரூபா 1000 மில்லியன் என்ற இலக்கை நோக்கி எமது திணைக்களம் செயற்றிறனுடனும் அர்ப்பணிப்புடனும் ஈடுபடும்.
முத்திரைத்தீர்வை நிலுவை.
2011ம் ஆண்டில் இருந்து 2015 ஜுன் மாதம் வரைக்குமான 34 உள்@ராட்சி மன்றங்களின் முத்திரைத் தீர்வை நிலுவையாக 1202 மில்லியன் ரூபாவினை மத்திய திறைசேரி உள்ளூராட்சி மன்றங்களுக்கு மீளளிக்க வேண்டியுள்ளது.
தற்போது 2017ம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான நன்கொடையாக வழங்குவதென மத்திய அரசின் கௌரவ நிதி அமைச்சரினால் ஒப்புதலளிக்கப்பட்டுள்ளது. எனினும் 2017ம் ஆண்டிற்றகான மத்திய அரசினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட பாதீட்டில் இது உள்ளடக்கப்படவில்லை ஆதலால் தொடர் நடவடிக்கையினை மேற்கொண்டு உள்ளுராட்சி மன்றங்களினால் முன்மொழியப்பட்ட அபிவிருத்தித்திட்டங்களுக்கு பயன்படுத்தவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியுள்ளது.
நெல்சிப் திட்டம்.
2016ம் ஆண்டில் நெல்சிப் திட்டத்திற்காக 1145 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டு 2016ம் ஆண்டு கார்த்திகை மாதம் வரை 909 மில்லியன் ரூபா103 வேலைதிட்டங்களுக்காக செலவீடுசெய்யப்பட்டுள்ளது.
இதில் உள்ளடக்கப்படும் முக்கிய அபிவிருத்திவேலைகளாக
நெடுந்தீவுமக்களின் போக்குவரத்தினை இலகுபடுத்துவதற்காக 150 மில்லியன் ரூபா செலவில் நெடுந்தாரகை படகு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
11 பிரதேச சபைகளுக்கு அலுவலக கட்டிட நிர்மாண வேலைகள் நடைபெற்றுவருகின்றன. நெல்சிப் திட்டத்தின் கீழ் 2010 தொடக்கம் 2016 வரை 380 கிலோமீற்றர் தார் வீதியும், 8.5 கிலோமீற்றர் கொங்கிறீற் வீதியும், 47சந்தைகளும், 14 சிறுவர் பூங்காக்களும், 2 விளையாட்டுமைதானங்களும் மற்றும் மயானங்கள், இறைச்சிகடைகளும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி மத்திய சந்தையின் தீ அழிவு.
கிளிநொச்சி மத்திய சந்தையில் 16.09.2016 இல் தீ விபத்து ஏற்பட்டு சந்தை முற்றாக அழிவடைந்த நிலையில் கடைகளை நடத்தியவர்களின் வாழ்வாதாரப் பாதிப்பினை ஈடுசெய்வதற்காக 124 பயனாளிகளுக்கும் தலா 20,000.00 வீதம் உடனடியாக 2.48 மில்லியன் வழங்கப்பட்டது.
மேலும் அழிவுற்ற கடைகள் முழுவதும் பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியிலிருந்து 11.5 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டு 27.10.2016 இல் வேலைகள் முடிவுறுத்தப்பட்டு உரியவர்களிடம் கையளிக்கப்பட்டன.
எமது அலுவலர்களின் அயராத முயற்சினால் இக்கடின இலக்கு குறுகிய காலத்தில் சாத்தியமாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கான நட்டஈடு வழங்குவதற்கான கோரிக்கை மீள்குடியேற்ற அமைச்சின் கவனத்திற்கு கொண்டு செல்லப்;பட்டு ரூபா 74.5 மில்லியன் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு இவ்வருட முடிவிற்குள் நட்டஈடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ரூபா 150 மில்லியன் செலவில் சந்தைக் கட்டிடத்தொகுதி அமைப்பதற்கும் மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன் கரைச்சிப் பிரதேச சபையில் தீயணைப்புச் சேவை ஒன்றினை உருவாக்குவதற்கு ரூபா 100 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
7. காணி ஆணையாளர் திணைக்களம்.
காணி ஆணையாளர் திணைக்களத்தினூடாக எமது அரச காணிகள் தொடர்பில் நாம் ஒரு வரையறுக்கப்பட்ட அளவிலேயே எமது கட்டுப்பாட்டை பிரயோகிக்க முடிகிறது. பிரதேச மட்டத்தில் எமது மாகாண அலுவலர்கள் பிரதேச செயலாளர்களின் கீழ் பணிபுரிந்து வருகின்றனர்.
ஆயினும் பல தேவைகளின் பொருட்டு சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் எம்மால் மக்கள் நலன் கருதும் வகையிலேயே கையாளப்படுகின்றன. எனினும் காணி தொடர்பான விடயங்களை கையாளுதல் , சவால்மிகுந்த ஒன்றாகவே காணப்படுகின்றது.
அரச காணிகள் மட்டுமல்லாமல் , பெருமளவிலான தனியார் காணிகளும், படையினரின் கட்டுப்பாட்டினுள் கொண்டு வரப்பட்டு அவற்றை விடுவித்துக் கொள்ள முடியாத நிலைமையே காணப்படுகின்றது. அத்துடன்; அரசியல் தலையீடுகளினால் எமது கவனத்திற்கு கொண்டு வரப்படாமல் பெருமளவிலான அரசகாணிகள் அபகரிக்கப்பட்டு வருவதாகத் தெரியவருகின்றது.
இது ஒரு ஆரோக்கியமான செயலாகக் காணப்படவில்லை. இவ்விடயம் சம்பாந்தமாக நாம் மத்திய அரசிற்கு அடிக்கடி அழுத்தம் கொடுக்க வேண்டியள்ளது. ஓங்கி குரல் கொடுப்பதன் மூலம் முன்னிலைப்படுத்த வேண்டியுள்ளது.
எனவே இதுபற்றி சகலரினதுங், கவனத்திற்கு கொண்டு வருதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். இதற்கு சகலரினதும் ஒத்துழைப்பு தேவைப்படுகின்றது.
2017 ஆம் ஆண்டுக்கு ரூபா 85.126 மில்லியன் மீண்டுவரும் செலவிற்கும் பிரமாண அடிப்படையிலான கொடைக்கு ரூபா 1 மில்லியனும், மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடைக்கு ரூபா 4 மில்லியனும் மாகாண காணி ஆணையாளர் திணைக்களத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ் ஒதுக்கீட்டில் இருந்து காணி தொடர்பான இலத்திரனியல் தகவல் முகாமைத்துவ முறைமை தரவுத் தளத்திற்கு வேண்டிய கணனி உபகரணங்கள், மாவட்ட அலுவலகங்களுக்குத் தேவையான நிழற்பிரதி இயந்திரங்கள், அரச காணிகளில் மரங்களை நாட்டுவதற்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
8. தொழிற்றுறைத் திணைக்களம்.
வடமாகாணத்தின் பொருளாதார வளர்ச்சியிலும் போருக்கு பின்னரான எமது மக்களின் வாழ்வதார முன்னேற்றங்களிலும் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்களின் பங்களிப்பானது முதுகெலும்பாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இத்துறையின் வளர்ச்சிக்கு உரிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டும்.
வடக்கு மாகாணத்தினை சமூக பொருளாதார ரீதியாக மீளக் கட்டியெழுப்பும் முயற்சியில் தனியார் துறையின் ஈடுபாடும் பங்களிப்பும் பெரிதும் வரவேற்கப்படும் நிலைமை தற்போது தோன்றியுள்ளது.
உள்ளூர் முயற்சியாளர் மட்டுமன்றி புலம்பெயர் உறவுகளின் ஈடுபாடும் இத்துறையை மென்மேலும் முன்னேற்றுவதற்கு உறுதுணையாக அமையும். எமது பிரதேசத்தில் காணப்படும் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்களுக்கான வளங்களையும் மற்றும் இத்துறைக்கான விற்பன்னர்களையும் அடையாளம் காண்பதற்கும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான தேவைகள், வாய்ப்புக்கள், சாத்தியப்பாடுகளை ஆராயவும் இத்துறைக்கான ஆலோசனைச் சபை ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.
தொழிற்துறை திணைக்களம் வடக்கு மாகாணத்தில் தொழிற்துறை அபிவிருத்தி மற்றும் வாழ்வாதார தொழில் முயற்சி அபிவிருத்திக்கான கொள்கைத் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தும் நிறுவனமாகும்.
தொழிற்துறை திணைக்களத்தின் கீழ் 24 கைத்தறி நெசவுப்பயிற்சி நிலையங்களும், 06 சிறுகைத்தொழில் பயிற்சி நிலையங்களும் 5 சந்தைவாய்ப்பு நிலையங்களும் 5 மாவட்டங்களிலும் இயங்குகின்றன. அத்துடன் தொழிற்துறை திணைக்களம் தேசிய அருங்கலைகள் பேரவை மற்றும் மத்திய புடவைக்கைத்தொழில் திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்தும் வடக்க மாகாணத்தில் திறன் அபிவிருத்திக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
தொழிற்துறைத் திணைக்களத்தினுடைய பிரதான நோக்கம் கைத்தொழில் துறையினுடைய மேம்பாடு மற்றும் அபிவிருத்தியுடன் வாழ்வாதார தொழில ;முயற்சிகளையும் அபிவிருத்தி செய்து வருதல்ஆகும்.
2016ம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட கைத்தொழிற்துறை செயற்பாடுகள் பின்வருமாறு –
நெசவுத்துறை.
2016ஆம் ஆண்டு தொழிற்துறை திணைக்களம் 107 யுவதிகளை கைத்தறி நெசவில் பயிற்றுவித்திருக்கின்றது. இதற்காக ரூபா 1.37 மில்லியன் செலவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 81 பேருக்கு நெசவு நிலையங்களில் நெசவாளர்களாக வேலைவாய்ப்பும் வழங்கியுள்ளது. இந்த வருடத்திற்கான மொத்தக் கைத்தறி புடவைகள் ரூபா 2.02 மில்லியனுக்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் பாண்டியன் குளத்தில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதி ரூபா 2.8 மில்லியனில் நெசவு நிலையம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.
இங்கு வேலை செய்வதற்கு நன்கு பயிற்றுவிக்கப்பட்ட 20 நெசவாளர்கள் தயாராக உள்ளனர்.
வவுனியா செட்டிகுளம் நெசவு நிலையம் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதி ரூபா 2.55 மில்லியனில் புனரமைக்கப்பட்டு விரிவாக்கப்பட்டுள்ளது. இது வட மாகாணத்தின் சிறந்த நெசவு நிலையங்களில் ஒன்றாக காணப்படுகின்றது.
ஏனைய 22 நெசவு நிலையங்களிலுள்ள சிறு திருத்த வேலைகளுக்காக ரூபா 3.00 மில்லியன் செலவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்நிலையங்களினுடைய தளபாட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக புடவைக்கைத்தொழில் அமைச்சினுடைய நிதி ரூபா 2.5 மில்லியனில் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நெசவுத் துறையில் நவீன தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தி திணைக்களத்தினால் மின்தறி ஆலை ஒன்று சுன்னாகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் வவுனியா மாவட்டத்தில் செட்டி குளம் மற்றும் தோணிக்கல் பிரதேசத்தில 2 மின்தறி ஆலைகள் நிறுவப்பட்டு தொழிலாளர்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளார்கள்.
தொழில்நுட்ப பரிமாற்ற பயிற்சிகள்.
எதிர்கால தொழில் முயற்சிகளின் முன்னேற்றத்திற்காக மேம்பட்ட தொழில் நுட்பங்களை வழங்குகின்ற குறுகிய கால பயிற்சிகளையும் தொழிற்துறை திணைக்களம் வழங்கி வருகின்றது.
எதிர்காலத்தில் வட மாகாணத்தின் சிறு கைத்தொழில் துறைக்கு பங்களிப்புச் செய்யக்கூடிய சுமார் 17 வகையான குறுங்கால பயிற்சிகள் ரூபா 1.08 மில்லியனுக்கு வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் 2016ம் ஆண்டில் வழங்கப்பட்டுள்ளன. அவையாவன.
கபாய ஆடைவடிவமைப்பு பயிற்சி, தையல் இயந்திரம் திருத்துவதற்கான பயிற்சி , பற்றிக் துணியில் ஆடை வடிவமைப்பிற்கான பயிற்சி, சுளகு உற்பத்தி பயிற்சி, மெழுகுதிரி உற்பத்தி பயிற்சி, வாழ்த்துமடல் வடிவமைப்பு பயிற்சி, பனையோலைசார் பொருட்கள் உற்பத்தி பயிற்சி, நகை வேலைப்பாட்டு; பயிற்சி, தோற் பொருள் உற்பத்தி பயிற்சி, வாழைநாரில் அழகு சாதனப் பொருட்கள் உற்பத்தி செய்வதற்கான பயிற்சி, தேங்காயச் சிரட்டையில் கைப்பணி பொருட்கள் உற்பத்தி செய்வதற்கான பயிற்சி, கடதாசி உற்பத்தி பயிற்சி, இயந்திரப் படகுகளின் வெளி இணைப்பு இயந்திரம் திருத்துவதற்கான பயிற்சி, பாற்பொருட்கள் உற்பத்தி பயிற்சி, கடற் சிப்பி சோகிகளினாலான அழகு சாதனப் பொருட்கள் உற்பத்தி பயிற்சி, சுயதொழில் ஊக்குவிப்பு பயிற்சி, சேலைகளுக்கான சட்டை வெட்டும் பயிற்சி ஆகியனவாகும்
சுமார் 961 பயனாளிகள் 84 பயிற்சிகளினூடாக பயிற்றுவிக்கப்பட்டு பயிற்சியின் நிறைவில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
3 மாத காலப்பகுதியையுடைய தொழிற்பயிற்சிகளும் பிரதேசசெயலக வாரியாக வழங்கப்பட்டுள்ளன.
இப்பயிற்சிகளின் ஊடாக நன்கு பயிற்றுவிக்கப்பட்ட 52 மின்னிணைப்பாளர்கள் உருவாக்கப்பட்டுள்ளதுடன் இவர்களுக்கு ஆரம்பகட்ட சுய தொழில் ஊக்குவிப்பாக சிறு உபகரணப்பொதிகளும் வழங்கப்பட்டுள்ளன.
சிறுகைத்தொழில் துறை.
தொழிற்துறை திணைக்களத்தினால் பாரம்பரிய சிறுகைத்தொழில் திறன் விருத்திக்கான மரவேலை, தும்பு வேலை மற்றும் மட்கல வேலைப்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மானிப்பாயில் மரவேலைப் பாடசாலையின் ஊடாக இளைஞர்களுக்கான மர வேலைப் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது.
சங்கானை இயந்தர மட்கல நிலையத்தில் பெண்களுக்கான மட்பாண்ட உற்பத்திப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது.
ஊர்காவற்றுறை தும்பு பயிற்சி நிலையம், மற்றும் இயந்திர சாதனங்களால் நவீன மயப்படுத்தப்பட்ட புலோப்பளை தும்பு பயிற்சி நிலையம் என்பவற்றினூடாக 3 மாத கால தும்பு பொருட்கள் உற்பத்தி செய்வதற்கான பயிற்சி வழங்கப்படுகின்றது.
மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதி 4.5 மில்லியன் ரூபாவில் கச்சாய் தும்பு பயிற்சி நிலையம் மீள்புனரமைப்பு செய்யப்படுகின்றது, இங்கு உற்பத்தி முயற்சிகளில் ஈடுபடுவதற்காக கச்சாய் தொழிற் பயிற்சி நிலையத்தில் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட பயனாளிகள் தயாராக உள்ளனர் உற்பத்தி வேலைகள் 2017ம் ஆண்டின் தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படும்.
தெரிவு செய்யப்பட்ட 58 சிறுதொழில் முயற்சியாளர்களுக்கு ரூபா 1.25 மில்லியன் பெறுமதிக்கு அரைமானிய திட்டத்தில் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது அவர்களது சுய தொழில் முயற்சியை ஊக்குவிப்பதற்கு மிகவும் வாய்ப்பாக உள்ளது.
கல்வித்திணைக்களத்தின் 1.5 மில்லியன் நிதி ஒதுக்கீடடின் ஊடாக எமது திணைக்களத்தில் தொழிற்பயிற்சி பெற்றவர்களுக்கான கள வேலையின் பயிற்சியாக சம்பளத்துடன் கூடிய தொழில் வாய்ப்பு வழங்கப்பட்டு பாடசாலைத் தளபாடங்கள் திருத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
விசேட திட்டம்.
தனியார் பங்களிப்புடனான தொழில் முயற்சியானது அபிவிருத்தியில் முக்கிய அம்சமாக கருதப்படுவதால் ஆரம்ப முயற்சியாக தனியார் துறையுடன் இணைந்து சுகாதார சிறுதுண்டுகள் உற்பத்தி செய்யும் நிலையங்கள் கிளிநொச்சி மற்றும் யாழ் மாவட்டங்களில் ஆரம்பிப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
2017 ஆம் ஆண்டு உத்தேசிக்கப்பட்ட திட்டங்கள்.
தொழற்துறைத் திணைக்களத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு சுய தொழில் ஊக்குவிப்பு உபகரணங்கள் வழங்குவதற்காக ஐந்து மாவட்டங்களுக்கும் சேர்த்து ரூபா 5.00 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தொழிற்துறை திணைக்களத்தில் பயிற்சி பெற்றவர்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கான சந்தை வாய்ப்பு நிலையங்களை மேம்படுத்தல்.
தற்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் ஏற்ற வகையில் தொழில் முயற்சிகளில் திறமையாக ஈடுபடுவதற்கான தொழிற்திறன் விருத்தி செய்வதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளல்.
நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ற வகையில் தொழில் நுட்ப பயன்பாட்டுத்திட்டங்களை ஏற்படுத்துதல். இவை எல்லாவற்றிற்குமாக 2017ம் ஆண்டிற்கு ரூபா 74.560 மில்லியன் மீண்டுவரும் செலவினத்திற்கும், பிரமாண அடிப்படையிலான கொடைக்கு ரூபா 2 மில்லியனும், மாகாண குறித்தொதுக்கப்பட்ட கொடைக்கு ரூபா 15 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளன.
9. சமூகசேவைகள் திணைக்களம்.
வடக்கு மாகாண சமூகசேவைகள் திணைக்களம், வடக்கு மாகாணத்திற்கென ஒரு மாகாண அலுவலகத்தினையும், மற்றும் மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களுக்கும் தனித்தனியான மாவட்ட சமூகசேவைகள் அலுவலகங்களையும் அமைத்துக்கொண்டு அதன் ஊடாக அந்தந்த மாவட்டங்களின் அனைத்துப் பிரதேச செயலர் பிரிவுகளுக்கும்; தனித்தனியான சமூகசேவைகள் அலுவலர்களை நியமித்து பிரதேச செயலாளர்கள் ஊடாக அவர்களின் சமூகசேவை நடவடிக்கைகளை மேற்கொள்ளல், மேற்பார்வை செய்தல் மற்றும் முன்னேற்றங்கள், அடைவுகள் ஆகியவற்றை பரிசீலனைசெய்தல் ஆகிய செயற்பாடுகளை ஆற்றிவருகின்றது.
வடக்கு மாகாணத்தின் முழுமையான சமூகசேவைச் செயற்பாட்டிற்கும் பொறுப்புக்கூறும் வகையிலான நாளாந்தச் செயற்பாடுகளான, வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கான பொதுசன மாதாந்த உதவிக் கொடுப்பனவுகளை வழங்கல், அவர்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு கொடுப்பனவுகளை வழங்குதல், இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட வறிய குடும்பங்களுக்கு அதிலிருந்து உடனடியாக மீண்டெழுவதற்கான இடர் உதவிக் கொடுப்பனவுகளை வழங்கல், இயற்கையாக அல்லது அனர்த்தங்களின்போது அவையவங்களை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை அவையவங்களை வழங்குதல், தொற்றும் மற்றும் தொற்றா நோய்கள் என்பனவற்றில் சில நோய்களான கசம், புற்றுநோய், தொழுநோய், தலசீமியா, சிறுநீரக நோய் போன்றவற்றால் பீடிக்கப்பட்ட நோயாளர்களுக்கு குறிப்பிட்ட அளவு நோயாளர் கொடுப்பனவுகளை வழங்கி ஆற்றுப்படுத்தல், மற்றும் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களிற்கான கொடுப்பனவு வழங்கல் மற்றும் கைதடியில் அரச முதியோர் இல்லம் ஒன்றும் இத்திணைக்களத்தினால் நடாத்தப்பட்டு வருகின்றது.
இதில் சுமார் 184 மூத்த பிரஜைகள் பராமரிக்கப்படுகின்றார்கள்.
மேற்படி நாளாந்த செயற்பாடுகள் மட்டுமல்லாது வட மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அரச சார்பற்ற மற்றும் தனியார் நிறுவனங்களால் பராமரிக்கப்பட்டுவரும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின்; இல்லங்களுக்கும் அவற்றின் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் முகமாக கொடுப்பனவுகளை வழங்குதல், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தொடர்பிலான சமூக அக்கறை, அவர்களின் பராமரிப்புத் தொடர்பான விழிப்புணர்வு, சமூகத்தில் நலிவுற்றோர்களை ஊக்கப்படுத்தல் போன்ற காரணங்களுக்காக இவர்களுக்கெனச் சர்வதேசத்தினால் பிரகடனப்படுத்தப்படும் விசேட தினங்களை கொண்டாடுதல் போன்ற செயற்பாடுகளும் இத்திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
நலிவுற்ற மக்களின் குறைகேள் விருத்திச் செயற்பாடுகளுக்கும், அவர்களால் முன்வைக்கப்படும் முறைப்பாடுகளை சீர்செய்யும் நோக்குடனும் பல்வேறு பிரதேசங்களிலும் சமூக பராமரிப்பு நிலையங்களை நிறுவி அதனூடாகவும் சமூக சேவைச் செயற்பாடுகள் இத்திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படுகின்றது. இதற்கமைய இத்திணைக்களத்தின் கண்காணிப்பில் 77 முதியோர் சங்கங்களும், 7 மாற்று வலுவுடையோர் இல்லங்களும், 8 தனியார் முதியோர் இல்லங்களும், 7 முதியோர் பகல்பராமரிப்பு நிலையங்களும் இயங்கிவருகின்றன.
முப்பது வருடகாலக் கொடிய யுத்தத்தினால் எமது மாகாணம் பல இழப்புகளைச் சந்தித்துள்ளது. இதனால் நலிவடைந்த மக்கள் தொகை பன்மடங்காக உயர்ந்துள்ளது. இதிலிருந்து சடுதியாக மீள்வது மிகவும் பாரிய சவாலாகும். யுத்தத்திற்கு முன்னர் வினைதிறனுடன் இயங்கிவந்த பல முதியோர் பராமரிப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
அவற்றின் கட்டடங்கள் பெருமளவில் அழிவுற்று மீண்டும் இயங்க முடியாத நிலையில் காணப்படுகின்றன. பல ஏக்கர் நிலப்பரப்பில் பல கட்டடத் தொகுதிகளைக் கொண்டதாக அழிவடைந்த நிலையில் உள்ள பல இல்லங்கள் தற்போது அடையாளங்காணப்பட்டுள்ளன.
இவற்றினை விட வடக்கு மாகாணத்தில் ஆதரவற்ற மனவளற்சி குன்றியோரைப் பராமரிப்பதற்கு தனியான அரச இல்லங்கள் ஏற்படுத்தப்படவேண்டியுள்ளது.
மாற்று வலுவுள்ள சிறுவர்களைப் பராமரிப்பதற்கும் அரச இல்லங்கள் உருவாக்கப்பட வேண்டியுள்ளது. மாற்று வலுவுள்ள இளைஞர், யுவதிகளின் வாழ்வாதாரம் இன்னமும் கேள்விக்குரிய ஒன்றாகவே காணப்படுவதனால் அவர்களுக்கான வதிவிடத்துடன் கூடிய தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படவேண்டியுள்ளது.
சர்வதேச ரீதியிலும் எமது நாட்டின் கொள்கைகளுக்கமைவாகவும் மாற்றுவலுவுடையவர்கள் மற்றும் நலிவுற்றவர்கள் பல உரிமைகளைக் கொண்டுள்ளனர். இது அரச கொள்கையாகப் பெயரளவில் காணப்படும் போதும் நடைமுறையில் இது செயற்பாட்டில் இல்லாத ஒன்றாகவே காணப்படுகின்றது. மாற்று வலுவுடையவர்கள் தங்களது வதிவிடங்களில் இலகுவாக நடமாடக்கூடியவகையில் அணுகுவசதிகள் அமைத்துக் கொடுக்கப்படவேண்டும்.
பொது அலுவலகங்களிலும், ஏனைய பொது இடங்களிலும் அவர்கள் நடமாடக்;கூடிய அணுகு வசதிகள் அமைத்துக்கொடுக்கப்பட வேண்டியுள்ளதுடன் அவர்களுக்கான விசேட கழிப்பிட வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.
அத்துடன் மிகவும் நலிவுற்ற மக்களை வலுவூட்டக்கூடிய வகையில் நிலைத்திருக்கக் கூடிய வாழ்வாதாரத்திட்டங்கள் உருவாக்கப்படல் வேண்டும். எதிர்காலத்தில் வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து மாற்று வலுவுடையவர்களையும் சமுகத்தில் ஏனையவர்களுடன் பொருளாதாரம் மற்றும் சமூக அந்தஸ்து என்பவற்றில் சமனாக இருக்கக்கூடிய வகையில் முன்னேற்றுவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கு உங்கள் எல்லோரதும் ஒத்துழைப்பும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.
2016 இன் அடைவுகள்.
2016ம் ஆண்டின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடைக்கு 30 மில்லியன் வழங்கப்பட்டது.
2016ம் ஆண்டில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றவர்களுக்கான பயிற்சி நிலையம் அமைப்பதற்காக ரூபா 11.6 மில்லியனும், மாற்றுத்திறனாளிகளின் வதிவிடங்களின் அணுகுகை வசதியை ஏற்படுத்துவதற்காக ரூபா 6 மில்லியனும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றவர்களிற்கான தொழிற்பயிற்சிக்காக 1.4 மில்லியனும் செலவு செய்யப்பட்டு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் வலிந்துதவும் சமூக சேவை அமைப்புக்களான யாழ் விழிப்புலனற்றோர் சங்கம், சண்டிலிப்பாயிலுள்ள கல்வளை முதியோர் பகல் நிலையம், மன்னாரிலுள்ள சாந்தோம் முதியோர் இல்லம், புதுக்குடியிப்பு வள்ளிபுனத்திலுள்ள இனிய வாழ்வு இல்லம், வவுனியாவிலுள்ள சிவன் முதியோர் இல்லம், தர்மபுரம் முதியோர் பகல் நிலையம் போன்றவற்றிற்கான கட்டட நிர்மாணம் மற்றும் புனரமைப்பு வேலைகள் என்பன ரூபா 8.15 மில்லியன் ரூபாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதே போல் மூத்த பிரஜைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான பொதுசன மாதாந்த உதவிக் கொடுப்பனவாக ரூபா 207.14 மில்லியனும், காசநோய்க் கொடுப்பனவாக 1.664 மில்லியனும், தொழுநோய் கொடுப்பனவாக 0.493 மில்லியனும், தலசீமியா கொடுப்பனவாக 0.319 மில்லியன் ரூபாவும், சிறுநீரகநோய் கொடுப்பனவாக ரூபா 18.625 மில்லியனும், முள்ளந்தண்டு வடப்பாதிக்கப்பட்டவர்களுக்கான கொடுப்பனவாக ரூபா 11.135 மில்லியனும், புற்றுநோய் சிகிச்சைக்கான கொடுப்பனவாக ரூபா 27.575 மில்லியனும் வழங்கப்பட்டுள்ளது.
இதில் பொதுசன மாதாந்த உதவிக் கொடுப்பனவு என்பது அவர்களின் மாதாந்த வாழக்கைச் செலவுடன் ஒப்பிடும் போது இத்தொகையானது அவர்களின் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கான செலவுத் தொகையாகவே காணப்படுகின்றது. அவர்களுக்கான வருமானம் ஈட்டும் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படாத நிலையில் இத்தொகையினையாவது வழங்குவது நல் விடயமாகவே காணப்படுகின்றது. ஆனால் வருமானங்கள் கிடைக்கும் இடத்து அவர்களுக்கான கொடுப்பனவுகளை மேம்படுத்தலாம்.
இதே போல் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் 6.05 மில்லியன் ரூபாவில் கொள்வனவு செய்து வழங்கப்பட்டன. நலிவுற்றவர்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு கொடுப்பனவாக 6.449 மில்லியன் ரூபாவும், தற்செயல் நிவாரணக் கொடுப்பனவாக 7 மில்லியன் ரூபாவும் வழங்கப்பட்டதுடன், கைதடி அரசமுதியோர் இல்லத்தின் பராமரிப்புச் செலவிற்காக 16.5 மில்லியன் ரூபாவும், மாற்றுத்திறனாளிகள் இல்லம், சமூக சேவைகள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட தனியார் முதியோர் இல்லங்கள், முதியோர் பகல் நிலையங்களுக்கான மானியமாக 6.83 மில்லியன் ரூபாவும் வழங்கப்பட்டன.
2017 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீடுகள்.
2017ம் ஆண்டிற்கு சமூக சேவைகள் திணைக்களத்தின் மீண்டெழும் செலவினத்திற்காக 367.625 மில்லியன் ரூபாவும், பிரமாண அடிப்படையிலான நிதியாக 2 மில்லியன் ரூபாவும், மாகாணகுறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி கொடை நிதியாக 25 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இது 2016லும் பார்க்க ஐந்து மில்லியன் குறைவு.
2017 ஆம் ஆண்டிற்கான பிரதான முன்மொழிவுகள்.
வடக்கு மாகாணத்தின் சமூகசேவைத் துறையினை மேம்படுத்தும் வகையில் பின்வரும் அத்தியாவசிய வேலைத்திட்டங்கள் எம்மால் முன்மொழியப்பட்டுள்ளன.
கைதடி அரச முதியோர் இல்லத்திற்கான நோயாளர் காவு வண்டி கொள்வனவு , மாகாண சமூக சேவைகள் திணைக்களத்திற்கு அதன் அலுவலர்கள் வேலைகளை நேரடியாகச் சென்று மேற்பார்வையிடுவதற்கான வாகன கொள்வனவு,
யுத்தத்திற்கு முன்னர் திறம்பட இயங்கிவந்த முதியோர் இல்லங்கள் அனைத்தையும், புனரமைப்புச் செய்தலும் மீளவும் இயங்கச் செய்தலும் யுத்தத்திற்கு முன்னர் திறம்பட இயங்கிவந்த மாற்று வலுவுள்ளோர் இல்லங்கள் அனைத்தையும், புனரமைப்புச் செய்தலும் மீள இயங்கச் செய்தலும்;
உளநல நெருக்கீட்டிற்குச் சிகிச்சை பெற்று குணமாகிய மக்களுக்கான தனியான அரச வாழிடம். அதாவது சமூகத்தால் புறக்கணிக்கப்படுவதால் மீண்டும் மனவழுத்தத்திற்கு உள்ளாகுவோர்களுக்கு அரச வாழிடம் அமைத்துக் கொடுத்தல்
ஐந்து மாவட்டத்திலும் மாற்று வலுவுடையோருக்கான வதிவிடப் பயிற்சி நிலையம் அமைத்தல்
ஏறத்தாழ 60 வருடங்களுக்கு மேற்பட்ட பழுதடைந்து காணப்படும் கைதடியில் உள்ள அரச முதியோர் இல்லத்தின் பணியாளர் விடுதியை தற்கால வசதிக்கேற்ப மீளமைத்தல்.
நிறைவுரை.
எமது அமைச்சு மற்றும் அமைச்சின் கீழ் வரும் அனைத்து திணைக்களங்களுக்குமான 2016ம் ஆண்டிற்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி கொடையின் வேலைகளுக்கான நிதிசார் முன்னேற்றமானது 78 சதவீதமாக காணப்படும் அதேவேளை பௌதீக ரீதியான முன்னெற்றம் 90 சதவிதமாக காணப்படுகின்றது.
அத்துடன் கடந்த ஆண்டின் வருட இறுதியில் கட்டுமானங்களுக்குப் பயன்படுத்தப்படாத நிதி பொருட் கொள்வனவுகளுக்காக மாற்றம் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டதாக எம்மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தாலும் தேவையின் அவசியத் தன்மை கருதியே அவை கொள்வனவு செய்யப்பட்டு மிகவும் பொருத்தமான இடங்களில் அவை பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்நிதியாண்டில் எம்மால் திட்டமிடப்பட்டு அனுமதிக்கப்பட்ட திட்டங்களே மாற்றங்கள் எதுவுமின்றி நடைமுறைப்படுத்தப்படுகின்றன. நிதி மற்றும் பௌதீக முன்னேற்றமானது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது கூடுதலானதாக காணப்படுகின்றது.
வருட முடிவுக்குள் எம்மால் முழுமையான முறையில் பௌதீக மற்றும் நிதி முன்னேற்றங்களை அடைய முடியும் என எதிர் பார்க்கின்றோம். என மேலும் தெரிவித்தார்.
Spread the love