குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரதேச சபையின் அனுமதியில்லாமல் முல்லைத்தீவு நகரில் காந்தி சிலை அமைக்கப்படுவது தொடர்பாக வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேற்று 2016.12.19 முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தனது கண்டனத்தினைத் தெரிவித்தார்.
முல்லைத்தீவு நகரிலே பண்டாரவன்னியன் சிலையினை அமைப்பதற்கு ஒன்றரை வருடங்களாக சட்டரீதியான அனுமதிகள் பெற்று அதற்கான வேலைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்களில் ஒருவர் பிரதேச சபையின் அனுமதிகள் பெறாமல் இரவோடிரவாக காந்திக்கு சிலை அமைப்பது பொருத்தமற்றது. அகிம்சையினைப் போதித்த காந்திக்கு முல்லைத்தீவில் சிலை அமைப்பதன் அவசியம் என்ன?. முல்லைத்தீவிற்கு காந்தி என்ன செய்தார்?
அகிம்சை ரீதியாக போராடிய தியாகி திலீபன், திலீபனுடன் முல்லைத்தீவில் உண்ணாவிரதமிருந்து ஆபத்தான நிலையில் காப்பற்றப்பட்ட திருச்செல்வம் ஆகியோருக்கு சிலை அமைப்பதை விடுத்து காந்திக்கு சிலை அமைப்பதன் அவசியம் என்ன?. அது கூட பிரதேச சபையின் அனுமதி பெறாமல் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர் ஒருவரே சிலை வைக்க முயல்வது பிழையான விடயம். அனுமதியற்ற முறையில் புத்தர் சிலைகளை வைக்கும் பிக்குகளுக்கும் எம்மவர்களுக்கும் இடையிலேயே என்ன வித்தியாசம் உள்ளது எனவும் தெரிவித்தார்.
இதேவேளை முல்லைத்தீவு நகரில் அமைக்கப்படும் காந்தி சிலைக்கு பிரதேச சபையின் அனுமதி பெறப்படவில்லை என கரைதுறைபற்றின் பிரதேச சபையின் செயலாளர் கூட்டத்தில் தெரிவித்தார். இதன்போது கருத்துத் தெரிவித்த முல்லைத்தீவு மாவட்டச் செயலர் நிதி மூலகங்கள் கிடைத்தாலும் எல்லாவற்றிற்கும் அனுமதிகள் பெறப்பட வேண்டுமெனத் தெரிவித்தார்.
முல்லைத்தீவில் ஆங்கிலேயக் கோட்டையினைத் தகர்த்து எறிந்து பீரங்கிகளையும் கைப்பற்றிய மாவீரன் பண்டாரவன்னியனுக்கு சிலை அமைப்பதற்கான வேலைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் பிரதேச சபையின் அனுமதி கூடப் பெறாமல் முல்லைத்தீவு நகரில் அகிம்சைவாதி காந்திக்கு இரவிரவாக சிலை அமைக்கப்பட்டுள்ளது.