குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அத்து மீறி மீன்பிடியில் ஈடுபடுவோருக்கான அபராதத் தொகையில் இந்திய மீனவர்களுக்கு சலுகை எதுவும் வழங்கப்படாது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபடுவோருக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையானது ஐரோப்பிய ஒன்றியத்தின் தர நிர்ணயங்களுக்கு அமையவே மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தரச நிர்ணயங்களுக்கு அமைய விதிக்கப்படும் அபராதத்தில் இந்திய மீனவர்கள் குறிப்பாக தமிழக மீனவர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை அத்து மீறி மீன்பிடியில் ஈடுபடும் வெளிநாட்டுப் படகுகளுக்கு கடுமையான அபராதம் விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ட்ரோலர் படகுகளைப் பயன்படுத்தி கடல் வளங்களை அழிக்கும் வகையில் மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களுக்கு 150 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்படும் என அண்மையில் மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது