குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜெர்மனின் பேரிலின் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த டியூனிசிய புகலிடக் கோரிக்கையாளரான அனிஸ் அம்ரி இத்தாலியின் மிலன் நகரத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இத்தாலிய காவல்துறையினரால் அவர் கொல்லப்பட்டதாக அறிவித்துள்ள இத்தாலிய உள்துறை அமைச்சர் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட பாரவூர்தியில் இருந்த கைரேகையும் சுட்டுக்கொல்லப்பட்டவரின் கைரேகையும் ஒத்துப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை மூன்றுமணிக்கு மிலன் நகர காவல்துறையினருக்கும் அம்ரிக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச்சண்டையிலேயே அவர் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியில் கிறிஸ்மஸ் சந்தையொன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்டிருந்த இந்த தாக்குதல் சம்பவத்தில் 12 பேர் கொல்லப்பட்டிருந்ததுடன் 48 பேர் காயமடைந்திருந்தனர்.
கடந்த 2015ம் ஆண்டு ஜுலை மாதத்தில் ஜெர்மனிக்கு வந்த 24 வயதான அனிஸ் அம்ரி என்ற இந்த நபர் ஜெர்மனியில் அவருடைய தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்டு தற்காலிகமாக தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெர்மனில் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் டியூனிசிய புகலிடக் கோரிக்கையாளர் தேடப்பட்டு வருகின்றார்
Dec 22, 2016 @ 08:13
ஜெர்மனின் பேரிலின் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் டியூனிசிய புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தேடப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜெர்மனியில் கிறிஸ்மஸ் சந்தையொன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்டிருந்த இந்த தாக்குதல் சம்பவத்தில் 12 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
இந்த தாக்குதலை நடத்திய பாரவூர்தி சாரதியை தேடி காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர். கடந்த 2015ம் ஆண்டு ஜுலை மாதத்தில் ஜெர்மனிக்கு வந்த 24 வயதான அனிஸ் அம்ரி என்ற இந்த நபர் ஏற்கனவே பாதுகாப்பு படைகளுக்கு தெரிந்தவர் எனவும் ஜெர்மனியில் அவருடைய தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்டு தாற்காலிகமாக தங்குவதற்கு அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
அனிஸ் அம்ரியின் அடையாள அட்டை தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட பாரவூர்தியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவர் ஆயுதம் வைத்திருக்கலாம் என்றும், ஆபத்தானவர் என்றும் ஜெர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன் அவரை கைது செய்ய வழிவகுக்கும் எந்தவொரு தகவல்களுக்கும் ஒரு லட்சம் டொலர் தொகையை சன்மானமாக அறிவித்துள்ளனர்.