குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடகொரியாவிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் அமைப்பு பிறப்பித்துள்ள தடை உத்தரவினை பின்பற்றுமாறு சீனா, அந்நாட்டு நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளது.ஐக்கிய நாடுகள் அமைப்பின் வடகொரியா மீதான அண்மைய தடையுத்தரவினை கருத்திற் கொள்ளுமாறும் அவ்வாறு பின்பற்றத் தவறினால் தேவையற்ற பொருளாதார நட்டங்களை எதிர்நோக்க நேரிடும் எனவும் அறிவித்துள்ளது.
வடகொரியாவின் மீது அண்மையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவை தடைகளை விதித்திருந்தது. கடந்த செப்டம்பர் மாதம் வடகொரியா அணுத் திட்ட சோதனை ஒன்றை நடத்தியிருந்ததனைத் தொடர்ந்தே புதிய தடைகள் விதிக்கப்பட்டிருந்தன.
எனவே இந்த தடை உத்தரவுகளை கருத்திற் கொண்டு செயற்படுமாறு சீனா தனது நாட்டு நிறுவனங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளது. குறிப்பாக நிலக்கரிசார் நிறுவனங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடகொரியாவின் பிரதான ஏற்றுமதி பொருளாக நிலக்கரிகள் காணப்படுகின்றன. வடகொரியாவின் அதிகளவான நிலக்கரிகளை சீனா இறக்குமதி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.