இரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்ட, வெடிக்காத பாரிய சேதம் விளைவிக்க கூடிய குண்டு ஒன்றை செயலிழக்க வைப்பதற்காக ஜெர்மனியின் ஒக்ஸ்பர்க் நகரில் இருந்து சுமார் 50 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சுமார் 1800 கிலோ நிறையுடைய இந்தக் குண்டு 1944-ம் ஆண்டில் இரண்டாம் உலகப் போரின்போது இங்கிலாந்து படைகளால் பயன்படுத்தப்பட்ட போது ஒக்ஸ்பர்க் நகரமே நிர்மூலமாகிப் போனதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்டுமானப் பணிக்காக ஒக்ஸ்பர்க் நகரில் அண்மையில்; பள்ளம் தோண்டியபோது கிடைத்த இந்த வெடிகுண்டை இன்றையதினம் பாதுகாப்பான முறையில் செயலிழக்க வைக்க நிபுணர்கள் தீர்மானித்துள்ளனர்.
இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியை சுற்றி சுமார் ஒன்றரை கிலோமீட்டர் பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரையும் தங்களது வீடுகளில் இருந்து தற்காலிகமாக வெளியேறுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து சுமார் 50 ஆயிரம் மக்கள் தங்களது வீடுகளை விட்டு, வெளியேற்றப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.