குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உலகின் புகழ் பூத்த பொப்பிசை பாடகர்களில் ஒருவராகப் போற்றப்படும் ஜோர்ஜ் மைக்கல் காலமானார். தனது 53ம் வயதில் ஜோர்ஜ் மைக்கல் தனது வீட்டிலேயே காலமாகியுள்ளார். பிரித்தானியாவின் Goring, Oxfordshire அமைந்துள்ள ஜோர்ஜ் மைக்கலின் இல்லத்தில் அவரது ஆன்மா அமைதியாக பிரிந்து சென்றது என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
1980களில் இசைத் துறையில் பிரவேசித்த ஜோர்ஜ் மைக்கல் உலக இசைத் துறையில் தனக்கென ஒர் தனிப் பாதையை வகுத்து இசையால் ரசிகர்களை கட்டி ஆட்சி செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோர்ஜ் மைக்கலின் மறைவிற்கு உலகின் நலா திசைகளிலிருந்தும் இரங்கல் செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன. சக இசைகக் கலைர்கள், ரசிகர்கள், முக்கிய பிரபலங்கள், துறைசார் வல்லுனர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் வெளியிட்டு வருகின்றனர்.
என்ன காரணத்தினால் ஜோர்ஜ் மைக்கல் உயிரிழந்தார் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படாத போதிலும், மரணத்தில் மர்மங்கள் எதுவும் கிடையாது என தெரிவிக்கப்படுகிறது. ஏனைய பிரபலங்களைப் போன்றே ஜோர்ஜ் மைக்கலின் வாழ்க்கை தொடர்பிலும் சில விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக ஜோர்ஜ் மைக்கல் போதைப் பொருள் பயன்பாட்டுக்கு அடிமையாகியிருந்தமை அடிக்கடி அவரை சர்ச்சைகளில் சிக்கச் செய்திருந்தது. ஜோர்ஜ் மைக்கலின் இறுதிக் கிரியை பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.