தனது அலுவலகம், தலைமைச் செயலகத்தில் உள்ள அறைகள் என்பன வருமானவரித் துறையினரால் சோதனை நடத்தப்பட்டமை அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதல் என தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன் தெரிவித்துள்ளார்.
ராம்மோகன் ராவ்வின்; வீடு அலுவலகம் மற்றும் அவரது மகன் விவேக்கின் வீடு என 13 இடங்களில் வருமானவரிச் சோதனை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ராம்மோகன் ராவ் வகித்து வந்த தலைமைச் செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது. இதனையடுத்து நெஞ்சுவலி காரணமாக ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று இரவு வீடு திரும்பிய நிலையில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
முதலில் வருமானவரிச் சோதனைக்கு எதிராக குரல் கொடுத்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்த அவர் வருமானவரி துறையினர் அதிகாலை 5.30 க்கு மணிக்கு தனது வீட்டுக்கு வந்து துப்பாக்கி முனையில் மிரட்டி வீட்டை சோதனையிட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் வருமானவரித் துறையினர் காட்டிய வாரண்டில் என் பெயர் தனது பெயர் இல்லை எனவும் தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து விலகிய பின்னரே தன்னை விசாரணை செய்திருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தான் புரட்சித் தலைவி அம்மாவால் நியமிக்கப்பட்ட தானே இப்போதும் தலைமைச் செயலர் எனவும் அவர் மறைந்த பிறகு தமிழ் நாட்டிற்கு பாதுகாப்பில்லை எனவும் ராமமோகன் ராவ் தெரிவித்துள்ளார்.