கறுப்பு பணம் ஒழிப்பு நடவடிக்கையை தொடர்ந்து பினாமி சொத்துக்கள் தொடர்பாகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய பிரதமர் மோடி அறிவித்துள்ளதையடுத்து பினாமி சொத்துக்கள் தொடர்பாக கடுமையான சட்டம் கொண்டு வர மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் அடுத்த கட்டமாக சந்தேகப்படும்படியான ரியல் எஸ்டேட் சொத்துக்களையும் அரசு கண்காணிக்க வேண்டும் என்று எதிர்பார்த்ததாகவும் அதற்கு ஏற்றபடி பிரதமர் மோடியும் கடுமையான விதிகளுடன் பினாமி சொத்து பரிவர்த்தனை தடைச்சட்டத்தை அமுல்படுத்தப்போவதாக வருமான வரித்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூலை வரை தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்கின் அடிப்படையிலும், வங்கி பரிவர்த்தனைகள் அடிப்படையிலும் சந்தேகப்படும்படியான ரியல் எஸ்டேட் சொத்துக்கள் பற்றிய தகவல்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பினாமி சொத்து பரிவர்த்தனை தடைச்சட்டத்தின் அடிப்படையில் பினாமி சொத்து வைத்திருப்பவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதுடன் பினாமி சொத்தும் பறிமுதல் செய்யப்படும் எனவும் இந்திய மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.