மக்கள் நலக் கூட்டணிக்கு முழுக்கு போட்ட மதிமுக அடுத்ததாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தாவக் கூடும் என தமிழக செய்திகள் எதிர்வு கூறியிருக்கின்றன.. மக்கள் நலக் கூட்டணி உதயமானபோது அதிமுக, பாஜக, திமுக, காங்கிரஸ், பாமக கட்சிகளுடன் உறவு எதுவும் இல்லை என அறிவிக்கப்பட்டது.
ஆனால் சட்டசபை தேர்தலின் போது அதிமுகவை மென்மையாக விமர்சிப்பதும் திமுகவை மட்டும் கடுமையாக விமர்சிக்கும் நிலையில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் இருந்தனர். தேர்தல் முடிந்த பின்னர் அதிமுக, பாஜகவை மதிமுக பகிரங்கமாக ஆதரித்து திமுகவுடன் விடுதலைச் சிறுத்தைகளும் காங்கிரஸும் கை கோர்க்க களமிறங்கினர். இந்த நிலையில் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து வெளியேறிய மதிமுக தற்போது ரூபாய் நோட்டு விவகாரத்தில் பிரதமர் மோடியை ஆதரித்து வருகிறது. ஆனால் இடதுசாரிகளும் விடுதலைச் சிறுத்தைகளும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இதனால் மக்கள் நலக் கூட்டணியைவிட்டு மதிமுக வெளியேறிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை ஜெயலலிதா இல்லாத நிலையில் அதிமுகவையும் ஆட்சியையும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள மத்திய பாஜக அரசு முயற்சிப்பதாகவும், நாடாளுமன்றத் தேர்தல் வரை அதிமுக அரசை கட்டுப்பாட்டில் வைத்தால் கூட்டணி வைக்க ஏதுவாக இருக்கும் என பாஜக எதிர்பார்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதனிடையே வைகோவும் அதிமுக, பாஜகவுக்கு ஆதரவாக கருத்துகளை முன்வைத்து வருகிறார். அவர் அதிமுகவுக்கு ஆதரவாக ஆளுநர் வித்யாசகர் ராவை சந்தித்து பேசி வருகிறார். இந்த நிலையில் திடீரென டெல்லி சென்று பிரதமர் மோடியை வைகோ நேரில் சந்தித்தார். ஜல்லிக்கட்டு உள்ளிட்ட விவகாரங்களுக்காகதான் மோடியை சந்தித்ததாக வைகோ கூறினார். இருப்பினும் பாஜக கூட்டணியில் இணைவதற்கு முன்னோட்டமாகவே இச்சந்திப்பு நடந்ததாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஏற்கனவே மதிமுக இடம் பெற்றிருந்த நிலையில் மீண்டும் அவ்வாறான இணைவு ஏற்படும் சாத்தியங்கள் அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது.