கேட்கிறார்கள் முள்ளம்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்கள் – குளோபல் தமிழச் செய்தியாளர் கிளிநொச்சி:-
கடந்த 24 ஆம் திகதி இடம்பெற்ற கிளிநொச்சி மாவட்டச் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு உயிரிழை எனும் அமைப்பினா் கலந்துகொள்வதற்காக சென்றிருந்தனா்.
யுத்தத்தில் பங்குகொண்டு காயமடைந்து முள்ளம்தண்டு வடம் பாதிக்கப்பட்டு இடுப்பு கீழ் இயங்காதவா்களை உள்ளடக்கிய அமைப்பே உயிரிழை எனும் அமைப்பாகும். இவா்கள் கிளிநொச்சியில் முள்ளம் தண்டு வடம் பாதிக்கப்பட்டவா்கள் மருத்துவ வசதியுடன் தங்கியிருப்பதற்கான இல்லம் ஒன்றை அமைப்பதற்கு அனுமதி பெறும் நோக்கில் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு சென்றிருந்தனா்.
உயிரிழை அமைப்பின் சாா்பாக அதன் செயலாளா் சு.இருதயராஜாவும் அவருக்கு உதவியாக ஒரு இளைஞனும் மாவட்டச் செயலகத்திற்கு சென்றிருந்த நிலையில் மாவட்டச் செயலக நிா்வாகம் அவா்களை முன் அனுமதி பெறாமல் கூட்ட மண்டபத்திற்குள் அனுமதிக்க முடியாது என மறுத்துவிட்ட நிலையில் அவா்கள் தகவலை தங்களின் நிா்வாகத்திற்கு தெரியப்படுத்தி விட்டு தாங்கள் கொண்டு சென்ற கோரிக்கை கடிதத்தோடு மாவட்ட செயலக வாசலில் சக்கர நாற்காயில் கூட்டத்திற்கு சமூகமளிக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்க காத்திருந்தனா்.
முதலாவதாக வட மாகாண கல்வி அமைச்சா் சமூகமளித்த போது சக்கர நாற்காலியில் இருந்தவாறே கோரிக்கை கடிதத்தை நீட்டிய போது ஆ.. என்ன? என வினவிய அவா் தனது பிரத்தியேக செயலாளரிடம் பெற்றுக்கொள்ளுமாறு கூறியவாறே நடந்து சென்றுவிட்டாா். ஒரு நொடி பொழுது கூட அவா்களுடன் நின்று பேசவில்லை.
அடுத்து இணைத் தலைவா்களில் ஒருவரும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.சிறிதரனிடம் தமது நிலை குறித்து தெரியப்படுத்தி உள்ளனர். குறிப்பாக தங்களுக்கு கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டமை குறித்தும், அனுமதி மறுக்கப்பட்டுள்ள விடயம் தொலைபேசி ஊடாக சிறீதரனிடம், ஏற்கனவே தெரியப்படுத்தப்பட்டிருந்தமை தொடர்பாகவும் வாசலில் காத்திருந்த மாற்று திறனாளி தெரியப்படுத்தி உள்ளார். ஆனால் அவரும் அவா்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளவதற்கான அனுமதியை பெற்றுக்கொடுக்காது வாசலில் சக்கர நாற்காலியில் காத்திருந்தவா்களை கணக்கிலும் எடுக்காது சென்றுவிட்டாா்.
அடுத்தாக வடக்கு மாகாண முதலமைச்சா் சமூகமளித்த போது வாசலில் நின்று கோரிக்கை கடிதத்தை கொடுத்துள்ளனா் அவரும் நடந்தவாறே பாா்கி்றேன் என்று கூறியபடி தனது பிரத்தியேக செயலாளரிடம் கடிதத்தை கொடுக்குமாறு கூறியவாறே மண்டபத்துள் பிரவேசித்தார்.
பின்னா் சமூகமளித்த இராஜாங்க அமைச்சா் விஜயகலாவிடமும் கோரிக்கை அடங்கிய கடிதத்தை கொடுத்துள்ளனா் கடிதத்தை பெற்றுக்கொண்ட அவா் சில நிமிடங்கள் அவா்களுடன் கதைத்து அவா்களின் நிலைமைகளை அறிந்துகொண்டு தொலைபேசி இலக்கத்தையும் பெற்றுச் சென்றுள்ளாா்.
பின்னா் சமூகமளித்த பாராளுமன்ற உறுப்பினா் அங்கஜன் இராமநாதனிடம் கடிதத்தை கொடுத்துள்ளனா். அவா் கடிதத்தை பெற்றுக்கொண்ட பின்னா் நீண்ட நேரமாக சக்கர நாற்காலியில் இருந்தவருடன் உரையாடி அவா்களின் நிலைமைகளை அறிந்து பொருத்தமான நடவடிக்கை எடுப்பதாக கூறிச் சென்றுள்ளாா்.
வாசலில் சக்கர நாற்காலியில் காத்திருந்து, அவமதிக்கப்பட்டவா்கள் போன்று திரும்பிய, முள்ளம் தண்டு வடம் பாதிக்கப்பட்டவா்கள் சாா்பாக சென்றவா்கள் தாங்கள் யாரையெல்லம் நம்பியிருந்தோமோ அவா்கள் தங்களை மதிக்காது நடந்துகொண்டமையிட்டு மிகவும் கவலை தெரிவித்துள்ளனா்.
“நாட்டுக்காக போராடி முள்ளம் தண்டு வடம் பாதிக்கப்பட்டு இடுப்புக்கு கீழ் இயங்காது சக்கர நாற்காலியே வாழ்க்கை என்று இருக்கின்ற எங்களுடன் பொறுமையாக ஒரு நிமிடம் கூட பேச முடியாதவா்களா எங்களின் பிரதிநிதிகள்” என பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
மக்களின் பிரதிநிதிகளே உங்களின் பதில் என்ன?