ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து இன மக்களும் சமவுரிமையுடன் வாழ வேண்டுமென்ற உணர்வுடன் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ், பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக கொழும்பில் நடுப்பகலில் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் காலப்பகுதியில் கட்டாக்கலி நாய்களுக்கு வழங்கிய பாதுகாப்பு உத்தரவாதத்தைக் கூட தமிழ் மக்களுக்காக பணியாற்றிய, குரல் கொடுத்த பொதுமக்கள் பிரதிநிதி ஒருவருக்கு வழங்கப்படவில்லை என்பது எவ்வளவு அநீதியானதாகும்?
அவ்வாறு இல்லையென்றால் அரசாங்கத்தின் எதேச்சாதிகார போக்கினை அச்சமின்றி விமர்சனம் செய்த ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க நடு வீதியில் வைத்து வாழ்வதற்கான உரிமை இதேவிதமாக பறிக்கப்பட்டது.
இந்த அனைத்திற்கும் ராஜபக்ஸ அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட பாதாள உலக இராச்சியமே பொறுப்பு சொல்ல வேண்டும். ராவிராஜ் கொழும்பின் சனநெரிசல் மிக்க வீதியொன்றில் வைத்து கொலை செய்வதற்கான தைரியம் கொலையாளிகளுக்கு காணப்பட்டது, அரச பாதுகாப்பு தரப்பினரின் கடுமையான உதவியே இதற்கான காரணமாகும். கொலையாளிகளை நீதிமன்றில் ஆஜர் செய்வதற்காக உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியில் போராட்டங்களை நடத்த நேரிட்டது.
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொள்ள முன்னதாக ரவிராஜ் கொலையாளிகளுக்கு தண்டனை விதிப்பதாக கடுமையான உறுதிமொழிகளை வழங்கியிருந்தது. எனினும் நடந்தது என்ன? ஒரு மாதம் வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அனைத்து சந்தேக நபர்களும் குற்றமற்றவர்கள் என தீர்ப்பளிக்கப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேக நபர்கள் இராணுவ புலனாய்வுப் பிரிவு மற்றும் கருணாவின் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று சுட்டிக்காட்டுவது போதுமானதாக அமையும் என கருதுகின்றேன். ஜுரி சபையின் அனைத்து உறுப்பினர்களும் சிங்களவர்கள் என்பது மற்றைய காரணியாகும். ரவி ராஜ் கொலையாளிகளுக்கு தண்டனை விதிக்க வேண்டுமென்ற அரசியல் நோக்கம் நல்லாட்சி அரசாங்கத்திற்கு கிடையாது என்பதனை வெளிச்சமிட்டு காட்ட வேண்டியதில்லை.
தற்போது கொலையாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அது மட்டுமல்ல. இந்த விடயமானது இந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மோசடிகள் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் அரச நிறுவனங்கள் ஆணைக்குழுக்கள் தொடர்பில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். இந்த விமர்சனம் வழக்கு விசாரணை தீர்ப்பின் திருப்பு முனையாக அமைந்திருக்கும் என்பதனை மறுப்பதற்கில்லை.
ரவிராஜ் கொலையாளிகள் நீதிமன்றமொன்றினால் விடுதலை செய்யப்பட்டமை அரசாங்கத்தின் தரப்பினருக்கு பெரும் நிம்மதியாக அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. நமக்கு இவ்வாறான ஓர் நாடா தேவைப்படுகின்றது? இவ்வாறான ஓர் நீதியையா நாம் எதிர்பார்த்தோம்? அரசியல் காரணிகளுக்காக கொலை செய்து மனித உயிரை இழிவுபடுத்தி , இறுதியில் அதற்கான நீதியையும் கொன்று குழி தோண்டி புதைப்பது எவ்வளவு பெரிய அநியாயமாகும்? இவை பாரியளவிலான அரசியல் குற்றங்கள் மட்டுமன்றி நல்லிணக்கம் பற்றி எதிர்பார்ப்பினை இல்லாமல் செய்யும் காரணிகளாகும். இலங்கையில் பொறுப்பு கூறுதல் தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இழக்கப்படுவது இதன் மற்றுமொரு பாதக நிலைமையாகும். இது தமிழ் மக்கள் இனம் என்ற ரீதியில் தள்ளப்பட்டுள்ள இரண்டாம் தர அரசியல் யதார்த்ததை மெய்ப்பிக்கும் கசப்பான உண்மையாகவே இது அமைகின்றது.
குற்றச்செயல்களுக்கு பொறுப்பு கூறும் விவகாரத்தை உதாசீனம் செய்வது தமிழ் கடும்போக்குவாதிகளுக்கு எதிராக ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்பும் தமிழ் தரப்புக்களின் முயற்சிகளுக்கு விடுக்கப்பட்ட சவாலாகவே கருதப்பட வேண்டும். ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து மக்களும் வாழ்வது குறித்த அபிலாஸையை பூர்த்தி செய்வதனை இவை கடினப்படுத்தும்.
குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பில் சட்டம் ஒழுங்கினை பாதுகாக்கும் தரப்பினர் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால் அது எதிர்காலத்தை படு பயங்கரமான ஆபத்துக்களில் ஆழ்த்தும். இதன் மூலம் பாதிக்கப்பட போவது அப்பாவி பொதுமக்களே என்பதனை நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
ரவிராஜ் கொலை குறித்து நீதியை நிலைநாட்டாமை வரலாற்றில் அநே தடவைகள் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காமையை மீளவும் வலியுறுத்தி உறுதிப்படுத்தும் வகையில் அமைகின்றது. தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட மேலும் ஒர் அநீதியாகவே இது பதிவாகின்றது. இந்த வழக்கின் தீர்ப்பு இனம் என்ற ரீதியில் நடைபெறும் நடத்தப்பட்ட பொது அநீதிகள் மற்றும் துன்பங்கள் தொடர்பில் தமிழ் மக்களை ஒன்றிணையச் செய்யும் ஓர் ஏதுவாகவும், பலம்பெறச் செய்யும் ஓர் சக்தியாகவும் இது உருவாகும்.
நன்றி : விகல்ப
தயாபால திராணாகம ((Dayapala Thiranagama) எழுதிய சிங்கள மொழி பத்தியின் தமிழாக்கம்:
தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்