குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழ் மக்களது அடிப்படை கோரிக்கைகளினை கூட பரிசீலிக்க தயாராக இல்லாத வழிகாட்டல் குழுவிலிருந்து இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் வெளியேற வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலையே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை அரச அமைச்சரான மகிந்த அமரவீரவின் 21பேர் கொண்ட அரசியலமைப்பு வழிகாட்டல் குழுவில் கூட்டமைப்பு சார்பில் இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகிய இருவரும் உள்ளனர்.
அவர்கள், வடகிழக்கு இணைப்பு பற்றியோ, சமஸ்டி பற்றியோ, பௌத்தத்திற்கு முன்னரிமை வழங்குவது தொடர்பிலோ அவர்கள் ஆட்சேபனையெதனையும் தெரிவித்திருக்கவில்லை.
சுதந்திரக்கட்சி, ஜக்கிய தேசியக்கட்சி மற்றும் ஜேவிபி போன்றவை ஒற்றையாட்சி, பௌத்தத்திற்கு முதலிடம், வட-கிழக்கு இணைப்பில்லையென தமது கட்சியின் நிலைப்பாடாக கூறிவருகின்றன.
இந்நிலையில் இக்கட்சிகளை பெரும்பான்மையாக கொண்ட வழிகாட்டல் குழுவில் இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகிய இருவரும் இருந்து எதனை செய்கின்றார்கள்
எனவே தமிழ் மக்களிற்கு வரலாற்று துரோகமிழைக்கும் இத்தகைய நடவடிக்கைகளினை கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியென்ற வகையில் ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணி அதனை ஏற்றுக்கொள்ளாது.
முதலில் இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகிய இருவரும் தமிழ் மக்கள் முன்னராக வந்து வழிகாட்டல் குழுவில் நடப்பவற்றை தெளிவுபடுத்தவும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.