179
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமது கிராமத்தில் உள்ள ஆரம்பப் பிரிவு பாடசாலையினை மீள ஆரம்பிக்க வேண்டும் என மு/யோகபுரம் மகா வித்தியாலயம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பாரதிநகர் கிராம அபிவிருத்திச் சங்கம், புகழேந்திநகர் கிராம அபிவிருத்திச் சங்கம், பாரதிநகர் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம், கமக்காரர் அமைப்பு, ஆகிய அமைப்புக்கள் கூட்டாக சேர்ந்து கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.
குறித்த அமைப்பினர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் ,
எமது பாடசாலையின் ஊட்டற் கிராமங்களான பாரதிநகர், சாளம்பன், புகழேந்திநகர், திருவள்ளுவர் நகரின் ஒருபகுதி (யோகபுரம் கிழக்கு), திருநகரின் ஒருபகுதி மற்றும் யோகபுரம் மத்தி ஆகிய கிராமங்களிலிருந்து ஆரம்பப் பிரிவு கல்விக்காக மு/அணிஞ்சியன்குளம் தமிழ்க் கலவன் வித்தியாலயத்திற்கு கல்வி கற்பதற்காக செல்கின்ற, மற்றும் அடுத்த கல்வியாண்டிற்காகச் செல்லவுள்ள மாணவர்களின் பெற்றோர்களால் அடுத்தடுத்து விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கமைவாக எமது பாடசாலை அபிவிருத்திக் குழுவினாலும், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினாலும் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கமைவாக பின்வரும் விடயங்களைத் தங்களுக்கு முன்வைக்கின்றோம்….
மேற்படி கிராமங்களில் வசிக்கும் பெற்றோர்கள் விவசாயத்தினையும், அதனோடிணைந்த கூலித் தொழில்களையுமே பிரதானமான ஜீவனோபாயமாகக் கொண்டவர்கள்.வவுனிக்குளம் குடியேற்றத் திட்டத்தின் கீழ் 1958 – 1962ம் ஆண்டு காலப்பகுதிகளில் எமது பெற்றோர் யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய மாவட்டங்களிலிருந்து கொணர்ந்து இங்கு குடியேற்றப்பட்டதிலிருந்து எமது பெற்றோர்களும், நாங்களும் மு / வவுனிக்குளம் படிவம் 3 அ.த.க. பாடசாலை எனவும் பின்னர் மு/யோகபுரம் அ.த.க. பாடசாலை எனவும் விளங்கி தற்போது மு/யோகபுரம் மகா வித்தியாலயம் என 1 AB தரத்தில் மிளிர்ந்துகொண்டிருக்கும் பாடசாலையில் 2013.01.10வரை ஆரம்பக் கல்வியையும் இடைநிலைக் கல்வியையும் தொடர்ந்து வந்தார்கள்.
எமது மு/யோகபுரம் மகா வித்தியாலயம் ஆரம்பம் தொட்டு கடந்த 2012ம் ஆண்டுவரை தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையிலும், க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையிலும், க.பொ.த.உயர்தரம் உள்ளிட்ட ஏனைய பரீட்சைகளிலும் துணுக்காய் கல்விவலயத்தில் குறிப்பிடத்தக்க சிறந்த பெறுபேறுகளை ஈட்டித் தந்திருந்தது.
இந்நிலையில் கடந்த அரசின் கல்விக் கொள்கைகளுக்கு அமைவாக 1000 இடைநிலைப் பாடசாலைகளுக்கான ஊட்டல் பாடசாலைகளாக 4000 ஆரம்பப் பாடசாலைகளை வலுவூட்டுதல் என்கின்ற கொள்கைக் கமைவாக மேற்படி காலவரலாற்றினையும் கல்விவரலாற்றினையும் கொண்ட எமது மு/யோகபுரம் மகா வித்தியாலயத்தில் அதுவரை நன்றாக கல்வி வளர்ச்சியைக் காட்டிய ஆரம்பப் பிரிவு வகுப்புக்களையும், அதற்குரிய ஆசிரியர்களையும் 2013.01.10ஆந் திகதி தொடக்கம் மு/அணிஞ்சியன்குளம் தமிழ்க் கலவன் வித்தியாலயத்திற்கு உடனடியாக பிரித்து இடம் மாற்றப்பட்hர்கள்.
மேற்படி ஆரம்பப் பிரிவு வகுப்புக்களை இடம் மாற்றி மு/அணிஞ்சியன்குளம் தமிழ்க் கலவன் வித்தியாலயத்திற்கு கொண்டு செல்வதற்கு அக்காலப் பகுதியில் இருந்த பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் தமது எதிர்ப்பினை வெளிக்காட்டாமலிருக்கவில்லை என்பதுடன் மீளவும் ஆரம்பப் பிரிவினை மு/யோகபுரம் மகா வித்தியாலயத்தில் அல்லது அதன் அருகாமையில் இயங்க வைக்க வேண்டும் என்ற தீர்மானங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினாலும், பாடசாலை அபிவிருத்திக் குழுவினாலும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு மேற்படி ஆரம்பப் பிரிவு வகுப்புக்களை இடம் மாற்றி மு/அணிஞ்சியன்குளம் தமிழ்க் கலவன் வித்தியாலயத்திற்கு கொண்டு சென்றதன் விளைவாக பின்வரும் அசௌகரியங்களையும் கல்வி இடர்பாடுகளையும் மேற்படி எமது கிராமங்களைச் சேர்ந்த ஆரம்பப் பிரிவு மாணவர்களும் பெற்றோர்களும் இன்றுவரை எதிர்நோக்கி வருகின்றனர்.
எமது மாணவர்களின் பாடசாலைக்கான தூரம் தற்போது அண்ணளவாக 04 கிலோமீற்றர்களையும் விட தூhமாகிவிட்டது.(புகழேந்திநகர், திருவள்ளுவர் நகரின் ஒரு பகுதியும் – சாளம்பன் பகுதி தொடக்கம் மு/அணிஞ்சியன்குளம் தமிழ்க் கலவன் வித்தியாலயத்திற்கு இடைப்பட்ட தூரம்)
பல ஆரம்பப்பிரிவு மாணவர்கள் தமது மேல்வகுப்பு சகோதர மாணவர்களுடன் பாடசாலைக்கு தினமும் வந்து போன நிலைமை மாறி பல்வேறு பிரயாண மார்க்கங்களை நாடவேண்டிய இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டது
புகழேந்திநகர் மற்றும் திருவள்ளுவர்நகரின் (யோகபுரம் கிழக்கு) ஒருபகுதி மாணவர்கள் பாதுகாப்பற்ற குளக்கட்டினூடாகவே குறித்த மு/அணிஞ்சியன்குளம் தமிழ்க் கலவன் வித்தியாலயத்திற்கு பிள்ளைகளை கூட்டிச் செல்லவேண்டியுள்ளது.
நாளாந்தம் விவசாய, கூலி நடவடிக்கைகளை விடுத்து மாணவர்களை தூரத்தில் கிடைக்கப்பெற்ற பாடசாலைக்காக கூட்டிச் செல்லும் நிலைமையினால் குடும்பத்திற்கான ஜீவனோபாயத்தில் நேரடி மற்றும் மறைமுகத் தாக்கங்கள் எம்மை வாட்டுகின்றது.
விவசாயத்தையும், கூலித்தொழிலையும் நம்பி வாழ்ந்துகொண்டிருக்கும் நாம் முச்சக்கர வண்டி முதலான வாகனங்களுக்கு மாதாந்தம் பலத்த பொருளாதார கஸ்டங்களுக்கு மத்தியில் கட்டணங்களை செலுத்தி பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பவேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது.
கடந்த 35 வருடங்களுக்கு மேலாக அபிவிருத்தியைக் கண்டிராத உள்@ர் வீதிகளின் தற்போதைய சேதமடைந்த நிலையில் வாகனங்களினால் ஏற்படும் வீதி விபத்துக்கள் தொடர்பாக பெற்றோர்களுக்கு பிள்ளைகளை நினைத்து இருக்கக் கூடிய அச்ச நிலைமை தொடருகின்றது.
குறித்த மு/அணிஞ்சியன்குளம் தமிழ்க் கலவன் வித்தியாலயமானது மாங்குளம் – வெள்ளாங்குளம் பிரதான வீதியில் மல்லாவி நகருக்கு அண்மையில் அமைந்துள்ளமையால் ஆபத்தான சூழ்நிலைகள் காணப்படுகின்றது.
புலமைப் பரிசில் பரீட்சையை எதிர்நோக்கும் மாணவர்கள் பாடசாலை முடிந்ததும் பிரத்தியேக வகுப்புக்களுக்கோ அல்லது பாடசாலையில் ஏற்பாடு செய்யப்படுகின்ற மேலதிக வகுப்புக்களுக்கோ சென்று கல்வியை பெறுவதில் பாடசாலையின் தூரம் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது.
எமது பாதுகாப்பான கிராமங்களின் நடுவில் உள்ள, பழமை வரலாற்றைக்கொண்ட பாடசாலையினை விடுத்து நகர்ப்புறம் நோக்கி, வாகன நெரிசல்களை நோக்கி, பாதிப்படைந்த மற்றும் பாதுகாப்பற்ற வீதிகளின் ஊடாக, மற்றும் குளக்கட்டுக்களினூடாக மதுவினாலும் வேறு போதைவஸ்துகளாலும் கும்மாளமிடுபவர்களினூடாக எமது சிறுவர்களை ஆரம்பக் கல்விக்காக இவ்வளவு தூரம் கொண்டு செல்ல வேண்டுமா? என்கின்ற மன உளைச்சல்களுக்கும் முகம் கொடுத்த வண்ணமே நாம் சிறார்களின் கல்வியை முன்னெடுத்து வருகின்றோம்.
மேற்படி விடயங்களையும், எமது பெற்றோர்கள் எதிர்நோக்கும் இடர்பாடுகளையும் தாங்கள் கருத்திற்கொண்டு மு/யோகபுரம் மகாவித்தியாலய பாடசாலை வளாகத்தில் ஏற்கனவே ஆரம்பப் பாடசாலைக்கு என பெற்றோர்களது பலதடவைக் கோரிக்கைகளுக்கமைவாக பிரித்து ஒதுக்கப்பட்ட இரண்டரை (21/2) ஏக்கருக்கு மேற்பட்ட காணி, நீர்வளம், மற்றும் விளையாட்டு மைதானம் (மு/யோகபுரம் மகாவித்தியாலயத்திற்கானது) மற்றும் ஏனைய வளங்களும் ஒருங்கு சேர்ந்த நிலையில் கிராமங்களின் நடுவே ஆரம்பப் பாடசாலை ஒன்றினை 2017ம் ஆண்டின் முதல் தவணையிலிருந்து ஆரம்பித்து தொடர்ந்தும் இயக்குவதற்கான சகல வழி வகைகளையும் ஏற்படுத்தி எமது பகுதி மாணவர்களும் சம கல்விவாய்ப்பினைப் பெற்றுக்கொள்ள ஆவன செய்து தருமாறு எமது கிராமமக்கள் சார்பிலும், கிராம பொது அமைப்புக்கள் சார்பிலும் மிகவும் கேட்டுக்கொள்ளுகின்றோம்.என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
Spread the love