இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் மத்திய அரசினால் அமைக்கப்படவுள்ள நீரியல் வளப் பண்ணைக்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்புகள் காரணமாக அப்பண்ணை வட மாகாணத்திற்கு மாற்றப்படலாம் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சு அறிவித்துள்ளது
மட்டக்களப்பு மாவட்டம் வாகரை பிரதேசத்தில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இப்பண்ணைக்கு மாவட்ட தமிழ் அரசியல் தலைமைகளும் உள்ளுர் மக்களும் வெளியிட்டுள்ள எதிர்ப்புகள் காரணமாகவே அமைச்சு இந்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
வாகரை பிரதேசத்தில் 4000 மில்லியன் ரூபாய் நிதியில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த பணிச்சன்கேனி வாவியோரத்தில் 1200 ஏக்கர் காணியும் அடையாளம் காணப்பட்டுள்ளது
10 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறக் கூடியதாக இந்த திட்டம் இருக்கும் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் மகிந்த அமரவீர கூறுகின்றார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது போனால், வட மாகாணத்திற்கு மாற்றப்படலாம் என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த திட்டத்திற்கு குறிப்பாக வாகரை பிரதேச மீனவர்கள் உட்பட உள்ளுர் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.
மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும் தமது எதிர்ப்புகளை வெளிப்படுத்தியிருந்த நிலையிலே மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த திட்டத்தினால் பனிச்சன்கேனி வாவியோரத்திலுள்ள சதுப்பு நிலத் தாவரங்கள் அழிந்து விடக்கூடிய ஆபத்து உள்ளது. பண்ணையிலிருந்து வெளியேறும் கழிவுகளால் வாவி அசுத்தமடையும்.
இது போன்ற காரணங்களினால் வாவியில் நண்டு , மீன் மற்றும் இறால் போன்ற நீரியல் வாழ் உயிரினங்களின் இனப் பெருக்கம் குறைவடையும்.இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என உள்ளுர் மீனவர்கள் அஞ்சுகின்றனர்.
10 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என கூறப்படும் நிலையில் சிங்களவர்களின் குடியேற்றத்திற்கு சாதகமாக அமைந்து விடும் என்ற அச்சமும் அவர்களிடம் காணப்படுகின்றது.
BBC