186
தமிழர் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பாக இந்த அரசாங்கத்தின் நிலைப்பாடுகள்அச்சம் தரும் தொடர்விடயமாகவே உள்ளன. வடக்கு மாகாண முதலமைச்சர் வடக்கில் மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்களின் இன்றைய நிலை பற்றிய அறிக்கையொன்றைக் கோரியுள்ளார். அவர், தமிழர்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றமை தொடர்பில் தான் பேசியிருந்த போதும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் இல்லை என்பதனால் இது பற்றி அழுத்தம் பிரயோகிக்கப்பட வேண்டியுள்ளது என்பதையும் தொட்டுக்காட்டியுள்ளார்.
இப் பிரச்சினைகளைப் பார்க்கமுன் எல்லாவற்றுக்கும் மேலாக சகலரும் ஓர் முக்கிய விடயத்தினை விளங்கிக்கொள்ள வேண்டியுள்ளது. அதாவது, மீள்குடியேற்றத்திற்கும் திட்டமிட்ட சிங்கள திட்டமிட்ட குடியேற்றத்திற்குமான வேறுபாட்டை புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. அவ்வாறான இடத்தில், தமிழ்த் மக்களும் அதன் தலைவர்களும் ஒருபோதும் சகோதர இனங்கள் போரினால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் தமது உண்மையான சொந்த இடங்களுக்குத் திரும்புவதை யாரும் எதிர்க்கவில்லை. அந்த வகையில் தமிழ்த் தரப்புக்களிடம் இருந்து சிங்கள மக்களின் மீள்குடியேற்றம் பற்றி எதிர்ப்புக்கள் கிளம்பவில்லை. ஆனால், மீள்குடியேற்றம் என்ற வரையரைக்குள் மேற்கொள்ளப்படும் மற்றும் மேற்கொள்ளப்பட எத்தனிக்கப்படும் இன விகிதாசாரத்தினையும் தமிழ் மக்களின் வரலாற்றுத் தொன்மையினையும் அழிக்க எத்தனிக்கும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் அக் குடியேற்றங்களை ஸ்திரப்படுத்தும் முயற்சிகளையே தமிழர்கள் எதிர்க்கின்றனர்.ஆகவே இவ் எதிர்ப்பு என்பது நல்லிணக்கத்தினை நிலைநாட்டுவதற்கானது எனலாம். இன நல்லிணக்கத்தினை பாதிக்கும் நியாயத்திற்குப் புறம்பான சிங்கள மயமாக்கத்தின் ஊக்கியாக அரச அதிகாரம் காணப்படுவதே பிரச்சினையாகும்.
இந்த இடத்தில் அரசாங்கம்இ திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் தற்போதும் அதற்கு முன்னரும் நடைபெற்ற ஆக்கிரமிப்புக்களுக்கு உரிய தீர்வை முன்வைக்கவேண்டும் எனக் கோருவது நல்லிணக்கத்திற்கான தேவையாகவே உள்ளது. அரசு தீர்வை முன்வைக்கும் அதேவேளை இனவிகிதாசாரத்தினைப் பாதிக்கும் விடயங்களில் அது எவ்வாறு செயற்படப் போகின்றது என்பது பற்றி சாதாரணமாக மாற்றமுடியாத கொள்கையினை வெளிப்படுத்த வேண்டியதும் அவசியமாகவுள்ளது.
மகாவலி கங்கையின் நீரை வடக்கிற்குக் கொண்டு வருவது தொடர்பான கலந்துரையாடல்கள் நடக்கின்றன. மற்றும் மீள்குடியேற்ற செயலணிக்கான அமைச்சரவைத் தீர்மானமும் வெளியாகியுள்ளது. இவ்விரு விடயங்களைத் தொடர்ந்தும் வடக்கின் இனவிகிதாசாரத்தினை பாதிப்பதற்கான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் பற்றிய சூட்சுமங்கள் மேலுமொரு வகையில் உத்வேகமடைவதற்கான சாத்தியங்கள் இருப்பதனைச் சுட்டிக்காட்டி வடக்கில் தொடர்ச்சியான சம்பாசனைகள் இடம்பெற்றுவருகின்றன.
அரசாங்கம் இம் மாதத் தொடக்கத்தில் வடக்கு மாகாண சபையினைப் புறக்கணித்து வடக்கிற்கான மீள்குடியேற்ற செயலணி ஒன்றை அமைத்திருந்தது. அச் செயலணி, வடக்கு மாகாணத்தில் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை மீளக்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் அதிகம் கவனம் செலுத்தும் என்ற விடயம் குறிப்பிட்டு சொல்லப்பட்டிருக்கின்றது. இந்தவகையில் தற்போது 5 ஆயிரத்து 554 சிங்களக் குடும்பங்களுக்கும் 16 ஆயிரத்து 120 முஸ்லிம் குடும்பங்களுக்கும் வீட்டு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கவேண்டியுள் ளதாக அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது.
மீள்குடியேற்றம் என்ற அடிப்படைக்குள் தழிர்களுக்கு கிடைக்கவேண்டிய அல்லது மேற்கொள்ளப்படவேண்டிய எத்தனையோ விடயங்கள் கிடப்பில் கிடப்பில் கிடக்கின்றன. அதற்கு சரியான தீர்வுகளை அரசாங்கம் முன்வைக்காது வடக்கில் சிங்கள மக்களின் குடியேற்றம் மீது பிரத்தியேகக் கவனம் கொள்கின்றது. அரசாங்கம் தனது யோசனையினை நடைமுறைச்சாத்தியமாக்குவதற்காக வடக்கு மாகாண பிரதிநிதிகளை புறந்தள்ளி நிகழ்ச்சி நிரல் ஒன்றைத் திணிப்பதற்கும் முயற்சிக்கின்றது. இது அதிக சந்தேகத்திளை உண்டுபண்ணுவதாகவுள்ளது. இச் செயலணி பற்றி வடக்கு மாகாண சபை காரசாரமாக கண்டித்துள்ளது. சிங்களக் குடியேற்றங்களைத் தீவிரப்படுத்தும் செயலணியே இதுவென வடக்கு மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் அன்டனி ஜெகநாதன் குறிப்பிட்டுள்ளார்.. இவ்வாறாக பலத்த வாதப்பிரதிவாதங்கள்இ சந்தேகங்கள் முன்வைக்கப்பட்ட போதும் அதற்கு உரிய பதிலளிப்புக்கள் மத்தியில் இருந்து கிடைக்கவில்லை.
கடந்த ஒக்டோபரில் ஜனாதிபதியுடன் வடக்கிற்கு என மீள்குடியேற்றக்கொள்கை ஒன்றை வகுப்பது தொடர்பில் வடமாகாண சபை பேசியிருந்தது. அதற்கு அமைய வடக்கு மாகாண சபையினால் ஆவணம் தயாரிக்கப்பட்டு அது தற்போது வடக்கு மாகாண அமைச்சரவையின் ஆலோசணைகைக்கு இருப்பதாக அறிய முடிகின்றது. இவ்வாறான பேச்சுக்கள்இ உடன்பாடுகள் அரசுத் தலைவருக்கும் மாகாண நிர்வாகத்திற்கும் இடையில் காணப்படுகையில் அவற்றுக்கு முக்கியத்தவமளிக்கப்படாமல் வடக்கு சார்ந்த மீள்குடியேற்றத்திற்காக செயலணி அமைக்கப்பட்டுள்ளது. அதற்கும் மேலாக வடக்கு தமிழ் அரசியல் தலைமைகள் உள்வாங்கப்படாது உருவாக்கப்பட்ட மீள்குடியேற்ற செயலணி வடிவம் பெற்றிருப்பது சந்தேகத்திற்கு உரியதொன்றாக அமைவதும் நிராகரிக்க முடியாததாகும்.
வடக்கு மாகாணத்தில் இருந்து மாகாண பிரதம செயலாளர் இச் செயலணிக்கு உள்வாங்கப்பட்டுள்ளார். அவ்வாறாக வடக்கு மாகாண பிரதம செயலர் மட்டும் இச் செயலணிக்கு உள்வாங்கப்பட்டிருப்பதனை சரியான போக்காகக் கருத முடியாது. மீள்குடியோற்றம் மற்றும் அதனோடு இணைந்த நடவடிக்கைகளில் அரசியல் ரீதியிலான இனவிகிதாசார மாற்றங்களுக்கான பல்வேறு முனைப்புக்கள் காணப்படும் நிலையில்இ அதனை அரசாங்க அதிகாரிகளால் எந்தளவு தூரம் எதிர்க்க முடியும் என்ற கேள்வியுள்ளது. அதேயிடத்தில் அரசாங்க அதிகாரிகளால் அரசியல் சார்ந்த நடவடிக்கைகளை எதிர்ப்பதற்கு பெரியளவில் முடிவதில்லை என்பதும் கடந்த கால அனுபவமாகும். அதற்கு சட்ட ரீதியிலும் அதற்குப் புறம்பாகவும் காரணங்கள் இருக்கின்றன.
இதற்கு மேலாக, தற்போது மகாவலி நீரை வடக்கிற்குக் கொண்டு வரும் போது அதனுடன் இணைந்ததாக திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மகாவலி அதிகார சபையினால் ஏற்படுத்தப்படக் கூடாது எனக் கோரப்பட்டுள்ளது. அது பற்றிய உத்தரவாதம் அவசியம் என்ற கோரிக்கை வடக்கு மாகாண சபையினால் முன்வைக்கப்பட்டுள்ளது. இக்கோரிக்கைக்கு அரசாங்கம் என்ற ரீதியில் அல்லாமல் அரசு என்ற ரீதியில் பதிலளிப்பு நடைபெறவேண்டும். நல்லிணக்கக் காலப்பகுதியாகையினால் இவ் அரசாங்கம் இப் பிரச்சினைகளுக்குஉத்திரவாதங்களை க்கொடுத்தாலும் காலப்போக்கில் ஆட்சிக்கு வருபவர்களால் அவ் உத்தரவாதங்களை மதிக்காது விட்டால் அது மேலும் தமிழ் மக்களை ஏமாற்றுவதாக அமைந்துவிடும்.
கடந்த காலங்களில் மகாவலி அதிகார சபை ஊடாக தமிழர் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பான கசப்பான அனுபவங்களும் வலிகளும் தமிழ் தலைமைகளையும் மக்களையும் இவ்வாறு எல்லலாம் சந்தேகிக்கத்தேன்றுகின்றன. இரண்டு மாகாணங்களுக்கு இடையில் நீர்பாசனம் மேற்கொள்ளப்படுகையில் அதிகார சபை ஊடாக மத்திய அரசாங்கத்திற்கு அப் பிரதேசங்களின் நீர்ப்பாசனம் மற்றும் குடியேற்றுகை போன்றன உரித்தானதாகின்றன.
இவ் அடிப்படைகளினை சாதகமாகப் பயன்படுத்தி சிங்களக் குடியேற்றங்கள் கடந்த காலங்களில் அதிகமாக அமைக்கப்பட்டன. தற்போதும் இது போன்றதொரு விபரீதம் மகாவலி அதிகாரசபையினால் ஏற்படுமா என்ற சந்தேகங்களும் எதிர்பார்ப்புக்களும் சகலரிடத்திலும் இருக்கின்றன. இச் சந்தேகங்களை சாதாரணமாக விட்டு விட முடியாது. தமிழர்கள் அனுபவ ரீதியாக கண்டுள்ள அவலங்களின் வெளிப்படுத்துகைளே இவை ஆகும்.
தற்போதைய அரசாங்கம் நல்லிணக்கத்தினைப் பேசினாலும் அது அது கூட கடந்த காலத்தினில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் குறித்தும் தற்போது மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புக்கள் பற்றியும் நியாயமான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. தற்போது வடக்கில் மேற்கொள்ளப்படும் சிங்கள மயமாக்கத்திற்கான முயற்சிகள் பலவற்றில் அமைதியானவையாகவே உள்ளது. அதற்கும் மேலாக கடந்த அரசாங்கங்களால் மேற்கொள்ளப்பட்ட சிங்களக்குடியேற்றங்கள் தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் பலப்படுத்தப்பட்டும் வருகின்றன.
இவற்றுக்கு அப்பால் கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்தில் கூட கொக்குதொடுவாய் பகுதியில் 25 சிங்களக் குடும்பங்களை குடியேற்றுவதற்காக தமிழ் மக்களின் காணிகள் சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பின்னர் அந்நடவடிக்கை எதிர்ப்புக்களால் கைவிடப்பட்டது. இவ்வாறாக சுவீகரிக்க முயற்சிக்கப்பட்ட காணியின் உரித்தாளர்கள் தற்போது இந்தியாவில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர் அவர்களை மீள அழைப்பதற்கு காணப்படுகின்ற ஆர்வத்திலும் அதிகமாக அவர்களின் காணிகளை அபகரிப்பதிலும் அவற்றில் சிங்கள மக்களையோ அல்லது இராணுவ குடியேற்றங்களையே ஏற்படுத்துவதற்கு ஆர்வம் காட்டப்படுகின்றமை ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது.
கொக்குளாய் கிழக்கில் வாடி வீடுகளை அமைப்பதில் இன ரீதியிலான முரண்பாடுகள் காணப்படுகின்றன. தமிழர்களுக்குச் சொந்தமான இடங்களில் இருந்து அவர்களை வெளியேற்ற சிங்கள மீனவர்கள் முயற்சிக்கின்றனர். அம் முயற்சிக்காக பொலிசாரையும் பௌத்த பிக்குவையும் அழைத்துவந்து தமிழ் மீனவர்களை மிரட்டியதற்கான முறைப்பாடுகள் உண்டு, இவை எல்லாம் நாம் ஆரோக்கியமான நல்லிணக்கத்தினை சந்திப்போமா என்ற சந்தேகங்களையே ஏற்படுத்துகின்றன.
தமிழ்க் கிராமங்கள் கடந்த காலங்களில் மட்டுமல்ல அண்மையில் கூட சிங்களக் கிராமங்களாக மாற்றப்பட்டும் வருகின்றன. வவுனியா மாவட்டத்தில் கொக்கச்சான் குளம் என்ற தமிழ்க் கிராமம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக சிங்களக் கிராமமாக மாற்றப்பட்டுள்ளது. அக் கிராமத்தில் 1980 களில் தமிழர்களே முழுமையாக வாழ்ந்தனர்.
இதுபோன்றே பல கிராமங்களினதும் பெயர்கள் சிங்கள மயப்படுத்தப்பட்டமை வரலாறு. பதிவில் குளம் – பதவியாக்குளம் எனவும் முதலிக்குளம் – மெறாவேவ, பெரிய குளம்- நாமல்வத்த, பட்டிப்பளை – கல்லோயா, புடவைக்கட்டு – சாகரபுர, அம்பாள் ஏரி- அம்பாறை, மணலாறு – வெலியோயா, குமரக்கடவை – கோமரங்கடவெல, பொரிய விளாங்குளம் – மகா திவுல்வௌ, பனிக்கட்டி முறிப்பு – பனிக்கட்டியாவ என சிங்களப் பெயர்மாற்றங்கண்டு அவை சிங்கள மயப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுக்கு அப்பாலும் அதிகம் உதாரணங்கள் உண்டு.
அண்மையில்; கலிபோர்னியாவின் ஒக்லன் ஆய்வு நிறுவனம் “யுத்தத்தின் நீண்ட நிழல்” என ஆய்வொன்றை நடத்தியிருந்தது. அந்நிகழ்வுக்கு கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்இ 13 ஆவது திருத்தத்தின் மூலம் கிடைத்த அற்ப சொற்ப அதிகாரங்களையும் மகாவலி அதிகாரசபை மீறுவதுடன் எமது நிலங்களின் அதிகாரங்களையும் அது அபகரிக்கின்றது எனக் கூறினார்.
தெற்கில் இருந்து வடக்கில் சிங்களவர்களை வடக்கில் குடியேற்றுவதில் தப்பு என்ன எனக் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அக் கேள்விகளை சிங்கள மயமாகக்கத்தின் போக்குகளை ஆதரிக்கும் சக்திகளே கேட்கின்றன.
கடந்த மே மாதம் பாணகொட இராணுவ முகாமில் நடைபெற்ற இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் அமைச்சர் சம்பிக்க ரணவக்கஇ வடக்கில் சிங்கள மக்கள் வாழவும் கல்வி கற்கவும் விகாரைகளை அமைக்கவும் முடியாது என்றால் பெற்ற சுதந்திரத்தினில் பயன் இல்லை என்று கேட்போரை உசுப்பேத்தும் விதத்தில் பேசியிருந்தார். ஜாதிக்க கெல உறுமய உட்பட்ட ஏனைய அரசியல் கட்சிகளும் ஏன் இன்று போதிய தெளிவின்றி அல்லது உள்நோக்கில் நல்லிணக்கம் பற்றி பேசும் சிலரும் இவ்வாறான கேள்விகளைக் கேட்கின்றனர்.
இவ்வாறான கேள்விகளைத் தொடுக்கும் பலரும் தெற்கில் தமிழ் மக்கள் வாழ்வதற்கும் அங்கு கோயில்களை அமைப்பதையும் வடக்கில் நடக்கும் சிங்களக் குடியேற்றத்துக்குமான வேறுபாட்டினை உரியவாறு புரிந்துகொள்வதில்லை. அல்லது புரிந்து கொண்ட போதும் தமது இனவாத நலன்களுக்காக அவற்றினை மறைத்து வருகின்றனர்.
உண்மையில் வடக்குக் கிழக்கிற்கு வெளியே தமிழர்களின் இருப்புக்கும் வடக்கில் சிங்களவர்களின் இருப்புக்கும் இடையில் தொடர்பே கிடையாது. இரு விடயங்களும் இரு வேறுபட்டவை. வடக்கில் அரசாங்கத்தினது அல்லது இராணுவத்தினரது அணுசரணை மற்றும் ஆதரவுடன் இனத்துவ ரீதியிலான குடிப் பரம்பலை மாற்றியமைக்கும் திட்டங்களே நடைபெறுகின்றன.அதற்காக சிங்கள மக்கள் கொண்டுவந்து அவர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டு குடியேற்றப்படுகின்றார்கள். ஆனால் தெற்கிற்கு தமிழ் மக்கள் அவ்வாறான பின்னணிகளுடன் செல்லவில்லை.
வட கிக்கிற்கு வெளியில் தமிழர்கள் பொருளாதார அடிப்படையில் சந்தைச் சக்திகளுக்குக் கட்டுப்பட்டு சொத்துக்களை கொள்வனவு செய்தே அங்கு சென்று வாழ்கின்றனர். தமிழர்கள் வரலாறு தொட்டு வாழ்ந்து வந்த பகுதிகளை கூட அவர்கள் இழக்கின்றார்களே தவிர அவர்கள் சிங்களவர்களின் பகுதியை ஆக்கிரமிப்புக்கு உட்படுத்தவோ அல்லது தமிழ் மயமாக்கம் செய்யவோ இல்லை.
அடிப்படையில்இ தற்போதும் இனங்களுக்கு இடையில் கணிசமான பிரச்சினைகள் இருக்கின்றன. இனப்பிரச்சினைக்கான அடிப்படைகள் எதுவும் தீர்க்கப்படவில்லை. இவ்வாறானதோர் சூழ்நிலையில் சிங்கள மக்களின் மீள் குடியேற்றங்களில் அரசாங்கம் நிதானமான அதேசமயம் உள்நோக்கமற்ற வெளிப்படைத்தன்மையினைக் காட்டவேண்டியுள்ளது.
இதுஇ நல்லிணக்கம் மீதான சந்தேகங்களை களைவதற்கும் தமிழ் மக்களை சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பான அச்சத்தில் இருந்து விடுவிப்பதற்கும் வழியாகும்.
Spread the love