தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்-
காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் அமைக்க வேண்டியதில்லை என முன்னாள் இராஜதந்திரியும் அரசியல் ஆய்வாளருமான தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவினால் ஊடகங்களுக்கு நேற்றைய தினம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் தமது பெயரும் குறிப்பிடப்பட்டிருந்த காரணத்தினால் சில விளக்கங்களை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் உத்தேசம் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இராணுவ ஆட்சிக் காலங்களின் போது காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக இவ்வாறு காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் நிறுவப்பட்டதாகவும் லத்தின் அமெரிக்காவில் இவ்வாறான அலுவலகம் திறக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு தலையீட்டுடன் இவ்வாறான விசாரணைப் பொறிமுறைமை அமுல்படுத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், இலங்கையின் நிலைமை முற்றிலும் மாறுபட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட அரசாங்கங்கள், ஒழுக்கமான இராணுவத்தினர் பயங்கரவாதிகளுடன் இலங்கையில் யுத்தத்தில் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஓர் பின்னணியைக் கொண்ட எந்தவொரு நாட்டிலும் காணாமல் போனோர் அலுவலகங்கள் நிறுவப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆசியாவின் எந்தவொரு நாட்டிலும் காணாமல் போனோர் அலுவலகம் உருவாக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் போனவர்கள் தொடர்பில் மெக்ஸ்வல் பரணகம தலைமையிலான ஆணைக்குழு ஏற்கனவே விசாரணை நடத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் அல்லது சர்வதேச விசாரணை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு உறுதிமொழி வழங்கினார் இந்த அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சரும், பிரதமரும் பொய்யுரைக்கின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
2009ம் ஆண்டு மே மாதம் 23ம் திகதி இலங்கை அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் அமைப்பும் கூட்டாக இணைந்து வெளியிட்ட கூட்டு அறிக்கையில் இவ்வாறு இணங்கப்பட்தாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குற்றச்செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் விவகாரம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என மஹிந்த அரசாங்கம் இணங்கிய போதிலும், உறுதிமொழிகள் எதுவும் அளிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச விசாரணைப் பொறிமுறைமைக்கு மஹிந்த இணங்கியதாக எவ்வித சான்றுகளும் கிடையாது என அவர் குறிப்பிட்டள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு அரசாங்கங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.