அனுரகுமார திஸாநாயக்க: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் இழிவான தொடர்பு காணப்படுகின்றது என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மஹிந்தவிற்கும் ரணிலுக்கும் இடையிலான இரகசிய இணக்கப்பாட்டின் காரணமாகவே சிராந்தி ராஜபக்ஸவை நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் சபாநாயகரின் இல்லத்தில் சென்று விசாரணை செய்தனர் என குறிப்பிட்டுள்ளார்.
விசாரணைகளின் பின்னர் சிராந்தி கைது செய்யப்படவோ நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவோ இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணை நடத்தி நான்கு மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் என் சிராந்தி ராஜபக்ஸ கைது செய்யப்படவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸ ரணிலுக்கு தொலைபேசி அழைப்பு எடுத்ததன் காரணமாக சிராந்தி கைது செய்யப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விமல் வீரவன்ச கடவுச்சீட்டு பிரச்சினையின் போதும் ஜனாதிபதியும் பிரதமரும் அதில் தலையீடு செய்திருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்துவதே ரணில் விக்ரமசிங்கவின் திட்டமாக அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன எவ்வாறு சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தினாரோ அதே தந்திரோபாயத்தை ரணில் பயன்படுத்தி வருகின்றார் என அவர் தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்ஸ கைது செய்யப்பட்டதன் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமையும் ஏற்கனவே இணங்கிக் கொள்ளப்பட்டதன் அடிப்படையிலாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாத யாத்திரையின் பின்னர் கூட்டு எதிர்க்கட்சியின் எந்தவொரு தரப்பினரும் ரணில் விக்ரமசிங்கவை விமர்சனம் செய்யவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.