வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தீர்ப்பு:-
வவுனியா பாவற்குளம் பகுதியில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பங்களில் ஈடுபட்டிருந்த ஆறு பேர் கொண்ட குழுவில் மூவருக்கு மரண தண்டனையும், இருவருக்கு கடூழியச் சிறைத் தண்டனையும் விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமககேந்திரன் தீர்ப்பளித்துள்ளார்.
இந்த வழக்கின் ஆறாம் எதிரி மீதான குற்றச்சாட்டுக்கள் வழக்குத் தொடுநரினால் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்படாததால், நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது.
வவுனியா பாவற்குளம் பகுதியில் கடந்த 2004ஆம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபட்டு, குற்றங்களை புரிந்ததாக 6 பேர் மீது குற்றஞ்சாட்டி, சட்ட மா அதிபரினால் வவுனியா மேல் நீதிமன்றத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்யபட்டிருந்தது.
இந்த வழக்கில் விளக்கம் இடம்பெற்று வழக்குத் தொடருனர் தரப்பினரால் 6 ஆம் எதிரிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்படவில்லை என தெரிவித்து அவரை நீதிமன்றம் விடுதலை செய்தது.
அதேவேளை, இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த 4 ஆம் 5 ஆம் எதிரிகள் இருவரும், கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை தமது உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டிற்கு குற்றவாளிகளாக காணப்பட்டு அவர்களுக்கு மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டது, அத்துடன், அவர்கள் இருவருக்கும், தலா ஒரு லட்சம் ரூபா நட்டயீடும், தலா ஜயாயிரம் ரூபா தண்டமும் விதிக்கப்பட்டது.
இந்த வழக்கின் முதலாம் இரண்டாம் மூன்றாம் எதிர்கள் கொலை செய்ததுடன், வாகனத்தை கொள்ளையடித்த குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாக காணப்பட்டதையடுத்து, வவுனியா மேல் நிதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் இவர்கள் மூவருக்கும் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
அத்துடன் கொள்ளையடித்த குற்றச்சாட்டிற்கு மூவருக்கும் மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டது.
வழக்குத் தொடருனர் தரப்பில் அரச சட்டவாதி நிஷாந்த் நாகரட்ணம் வழக்கினை நெறிப்படுத்தியிருந்தார்.
இந்த வழக்கில் மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டபோது, அனைவரும் எழுந்து நின்றனர். மின் விளக்குகள் அணைக்கப்பட்டு, விசிறிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. நிசப்தம் நிலவியது.