செல்வரட்னம் சிறிதரன்:-
இராணுவத்தினரிடம் சரணடைந்த அல்லது படையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு முகாம்களில் வைத்து ஏற்றப்பட்டதாகக் கூறப்படுகின்ற ஊசி மருந்து இப்போது சமூகத்திலும், அரசியல் மட்டத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
தடுப்பூசி மருந்து என்ற பெயரில் ஏற்றப்பட்ட ஊசி மருந்து காரணமாக ஒருவர் மருந்து ஏற்றப்பட்ட அன்றே உயிரழந்ததாகவும், சிலருக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும் நாளடைவின் பின்னர் தனக்கு சக்தி இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் முன்னாள் போராளி ஒருவர் பகிரங்கமாகத் தெரிவித்திருக்கின்றார்.
தங்களுக்கு ஏற்றப்பட்ட ஊசி மருந்தில் இரசாயனம் ஏதோ கலந்திருந்தது என்பது அந்த முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினரின் குற்றச்சாட்;டாகும். தடுப்பூசி என்ற பெயரில் தங்களுக்கு என்ன தடுப்பு மருந்து ஏற்றப்பட்டது என்பது பற்றிய விபரம் தங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை என அவர் கூறியிருக்கின்றார்.
ஒருவரையொருவர் கொன்றொழிக்க வேண்டும் என்ற பகை உணர்வோடு யுத்தகளத்தில் செயற்பட்டடிருந்த நிலையில் திடீரென யுத்தம் முடிவுக்கு வந்தததையடுத்து, இராணுவத்தினரிடம் சரணடைந்து அவர்களின் பாதுகாப்பில் இருக்க வேண்டிய கட்டாயமான ஒரு சூழ்நிலையில் இராணுவத்தினர் தங்களுக்கு என்ன செய்கின்றார்கள் என்பது குறித்து முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியிருக்க முடியாது.
சந்தேகம் ஏற்பட்டிருந்தாலும்கூட, பதட்டமும், பாதுகாப்பு தொடர்பான நம்பிக்கையற்ற ஒரு நிலைமையில் இரு தரப்பினரும் எதிர்த்தரப்பினர் எவ்வாறு நடந்து கொள்வார்களோ என்ற என்ற சந்தேகத்தோடு பழகிய நிலையில் இந்த ஊசி விடயத்தை அவர்கள் முன்னெடுத்திருக்க முடியாது. விவகாரமாக்கியிருக்கவும் முடியாது என்பதில் சந்தேகமில்லை.
தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, அவர்களுக்குப் புனர்வாழ்வுப் பயிற்சி வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும், அந்தச் சூழல் உண்மையிலேயே மூளைச்சலவைக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட சூழலாகவே இருந்தது என்று புனர்வாழ்வுப் பயிற்சியின் பின்னர் விடுதலையாகிய பலரும் கூறுகின்றனர்.
புனர்வாழ்வுப் பயிற்சி முகாமுக்கு இவர்கள் அனுப்பி வைக்கப்படுவதற்கு முன்னதாக இராணுவ புலனாய்வு பிரிவினரால் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் இறுக்கமான விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்கள்.
இந்த விசாரணைகளில் ஒருவருடைய பிறப்பு முதல் விசாரணை நேரம் வரையிலான வாழ்க்கை வரலாறு விரிவாக விசாரணை செய்யப்பட்டிருக்கின்றது. அந்த வாழ்க்கைச் சம்பவங்களில் பலவற்றை பல்வேறு அரச எதிர்ப்புத் தாக்குதல் நடவடிக்கைகளுடன் தொடர்புபடுத்தி பல்வேறுபட்ட வினாக்களுக்கும் அப்போது அவர்கள் பதிலளிக்க வேண்டிய கட்டாய நிலைமைக்குத் தள்ளப்பட்டிருந்தார்கள்.
இந்த விசாரணைகளில் உண்மைச் சம்பவங்களை உள்ளது உள்ளபடியே தெரிவிக்கப்பட்டிருநதாலும்கூட, இராணுவ புலனாய்வாளர்கள் எதிர்பார்த்திருந்த வகையில் விபரங்களைப் பெறுவதற்காகவும், பதில்களைப் பெற்றுக்கொள்வதற்காகவும், கடுமையான விசாரணை நடைமுறைகள் பின்பற்றப்பட்டதாக புனர்வாழ்வு பெற்று சமூகத்தில் இணைக்கப்பட்டுள்ளவர்கள் கூறுகின்றனர்.
தடுப்புக்கால நிலைமை
இந்த விசாரணைகளின்போது மிக மோசமான மன உளைச்சலுக்கும் அச்ச உணர்வுக்கும், எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற ஒரு நிலைமைக்கும் தாங்கள் உள்ளாக்கப்பட்டிருந்ததாகவும் அவர்கள் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடுகையில் தெரிவித்துள்ளனர்.
எனவே, இராணுவத்தின் இறுக்கமான பிடிக்குள் கடுமையான நடைமுறைகளுக்குள்ளே இருந்துவிட்டு, புனர்வாழ்வு முகாமுக்குச் சென்றிருந்த போது, அங்கு தங்களுக்கு ஏற்றப்பட்ட ஊசிபற்றியோ அல்லது அந்த மருந்து பற்றியோ அவர்கள் பிரஸ்தாபிக்கத்தக்க மன நிலையில் இருந்திருக்க முடியாது என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
இறுதி யுத்தத்தின் பின்னர், இடம்பெயர்ந்தவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த செட்டிகுளம் மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் சாதாரண மக்கள் மீது இராணுவத்தினரும் இராணுவ புலனாய்வாளர்களும் எந்த அளவுக்குக் கடுமையாக நடந்து கொண்டார்கள் என்பதை உலகமே நன்கறியும். இந்த நிலையில் இராணுவத்திற்கு எதிராக யுத்தகளத்தில் ஆயுதத் தாக்குதல்களில் ஈடுபட்டிருந்த முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களின் நிலைமை இராணுவத்தின் பிடியில் எவ்வாறு இருந்திருக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இதன் காரணமாகத்தான் இந்த தடுப்பூசி மருந்து பற்றிய விடயத்தை முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வுப் பயிற்சியின்போது பெரிய விடயமாகக் கருத முடியாதிருந்தது. அது மட்டுமல்ல. புனர்வாழ்வுப் பயிற்சி முடிவடைந்து சமூகத்தில் இணைக்கப்பட்டிருந்தவர்களை இராணுவப் புலனாய்வாளர்கள் மிகத் தீவிரமாகக் கண்காணித்து வந்தார்கள்.
இந்தக் கண்காணிப்பதென்பது, சாதாரணமாக அவர்களுடைய நாளாந்தச் செயற்பாடுகளை அவர்களுக்குத் தெரிந்தும் தெரியாமலும் நெருக்கமாக நோட்டம் விடுவதாக மட்டும் இருக்கவில்லை. இடையிடையே அவர்களிடம் விசாரணைகளும் குறைவில்லாமல் இடம்பெற்று வந்தது. விசாரணைகள் எனும்போது, சாதாரண விசாரணைகளில்லை.
தேசிய பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவித்தால் என்று சந்தேகிக்கப்படும் ஒருவரை முதற் தடவையாக விசாரணை செய்வது போலவே அந்த விhhரணைகள் அமைந்திருக்கும் என்று தங்கள் அனுபவத்தைப் பற்றி தகவல் வெளியிட்ட பலரும் தெரிவித்தனர். குறிப்பாக ஒருவருடைய பிறப்பிலிருந்து விசாரணை நேரம் வரையில் அவருடைய வாழ்க்கை வரலாறு, சந்தேகத்திற்குரிய செயற்பாடுகள் பற்றிய விளக்கங்கள் உள்ளிட்ட வகையிலேயே இந்த விசாரணைகள் அமைந்திருந்தன. அமைந்திருக்கின்றன என்று அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
புனர்வாழ்வுப் பயற்சியின் பின்னர் சமூகத்தில் இணைக்கப்பட்டுள்ளவர்கள் மீதான கண்காணிப்பு மற்றும் விசாரணைகளில் ஆட்சி மாற்றத்தின் பின்னர் கடுமை சற்று குறைந்திருக்கின்றதேயொழிய விசாரணைகளுடன் கூடிய கண்காணிப்பு முடிவுக்கு வந்தபாடில்லை என அவர்கள் கூறுகின்றார்கள்.
இத்தகைய ஒரு பின்னணியில்தான் யுத்தம் முடிவுக்கு வந்து ஏழு வருடங்கள் கடந்த பின்னர் இராணுவத்தினர் மீதான இந்த ஊசி மருந்து ஏற்றப்பட்ட குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கின்றது. நல்லாட்சிக்கான அரசாங்கம் என அழைக்கப்படுகின்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இந்த அரசாங்கத்தில் பொதுவாக இராணுவ நெருக்குவாரங்கள் குறைந்திருக்கின்றன. அதன் காரணமாகத்தான், நல்லிணக்கச் செயற்பாடுகள் எவ்வாறு அமைந்திருக்க வேண்டும் என்பது குறித்த மக்கள் கருத்தறியும் ஒரு நிகழ்வில் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் புனர்வாழ்வு முகாமில் தனக்கு ஏற்பட்டிருந்த நிலைமை குறித்து தகவல் வெளியிட்டிருக்கின்றார்.
தடுப்பூசி என்ற பெயரில் தங்களுக்கு ஏற்றப்பட்ட ஊசி மருந்தானது, காலம் செல்லச் செல்ல மெதுவாக பல்வேறு உடற் பாதிப்புக்களை எற்படுத்தத்தக்க வகையிலான இரசாயனம் அல்லது ஒரு வகையான விஷம் கலந்ததாக இருக்க வேண்டும் என்ற தொனியிலேயே அந்த முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் தகவல் வெளியிட்டிருக்கின்றார்.
முன்னர் சிறந்த தேகாரோக்கியத்துடன் இருந்ததாகவும் பெரும் சுமையொன்றைச் சுமந்த வண்ணம் வேகமாக ஒடக்கூடிய தன்மை பெற்றிருந்ததாகவும், ஆனால் புனர்வாழ்வு முகாமில் இருந்து வெளியில் வந்தபின்னர், தனது தேகாரோக்கியம் ஏதோ வகையில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், முன்னரைப் போலல்லாவிட்டாலும், சாதாரண சுமையைக் கூட தன்னால் சுமக்க முடியாதிரு;பபதாகவம் அவர் கவலை வெளியிட்டிருக்கின்றார்.
இவருடைய கூற்று சமூகத்தில் மட்டுமல்லாமல், அரசியல் வட்டாரங்களிலும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியிருக்கின்றது. இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.
முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களின் காரணம் தெரியாத மரணங்கள்
முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் பலர் காரணம் தெரியாத வகையில் திடீர் திடீரென மரணமடைந்ததாகவும், பலர் புற்று நோய் காரணமாக உயிர் துறந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
விடுதலைப்புலிகளின் மகளிர்துறை அரசியல் பொறுப்பாளராக இருந்த தமிழினி புனர்வாழ்வுப் பயிற்சியின் பின்னர் பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் இருந்து விடுதலை செய்யப்பட்டு சமூகத்தில் இணைக்கப்பட்டிருந்தார். இவர் தனது தாயார் மற்றும் சகோதரர்களுடன் வாழ்ந்தபோது புற்றுநோய்க்கு ஆளாகி மகரகம வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
மிகுந்த திடகாத்திரமாகச் செயற்பட்டிருந்த இவருக்கு இராணுவத்தின் பிடியில் இருந்து புனர்வாழ்வுப் பயற்சியளிக்கப்பட்டதன் பின்னர் எவ்வாறு, என்ன காரணத்திற்காகப் புற்று நோய் ஏற்பட்டது என்ற கேள்வி இன்னும் பதிலளிக்கப்படாத ஒன்றாகவே இருக்கின்றது.
இவரைப் போலவே கணவன் இல்லாமல் பிள்ளைகளுடன் இருந்த முன்னாள் விடுதலைப்புலி மகளிர் உறுப்பினர்கள் சிலரும் புற்று நோய் காரணமாக மரணமடைந்ததாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. இவ்வாறு சுமார் நூறு பேர் வரையிலான ஆண்களும் பெண்களுமான முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் சந்தேகத்திற்கு உரிய வகையில் மரணமடைந்ததாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்தத் தகவல்கள் சமூகத்தில் இணைக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் உறவினர்கள் மட்டுமல்லாமல் மனித நேயம் மிக்கவர்கள், சமூக நலன்களில் அக்கறை கொண்டவர்கள் என பலதரப்பட்டவர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் எற்படுத்தியிருந்தது.
இவ்வாறு உயிரிழந்தவர்களின் மரணங்கள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மை நிலைமை கண்டறியப்பட வேண்டும் என்று புலம் பெயர் தமிழர் தரப்பில் இருந்து குரல் எழுப்பப்பட்டிருந்தன. இந்த விடயம் குறித்து கருத்து வெளியிட்ட வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், இந்த விடயம் குறித்து உண்மையான நிலைப்பாடு என்ன என்பது விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இத்தகைய பின்னணியில்தான் புனர்வாழ்வு முகாம்களில் இருந்த போது முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு சந்தேகத்திற்கு உரிய வகையில் ஊசி மருந்து ஏற்றப்பட்டது என்ற முன்னாள் உறுப்பினர் ஒருவருடைய கூற்று பலருடைய கவனத்தையும் ஈர்த்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. அத்துடன் புனர்வாழ்வுப் பயிற்சி பெற்று சமூகத்தில் இணைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய மருத்துவ பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
விசாரணையொன்று தேவை.
முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு ஏற்றபட்ட தடுப்பூசி அல்லது தடுப்பூசி மருந்து இப்போது சமூக மட்டத்திலும் அரசியல் மட்டத்திலும் முக்கிய விவகாரமாகியிருக்கின்றது.
முகாம்களில் மருந்து ஏற்றப்பட்டதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மத்திய அமைச்சர்களும், இராணுவத்தினரும் வெளியிட்டிருக்கின்றார்கள்.
அமைச்சர் ராஜித சேனாரத்ன இத்தகைய பாதிப்புகள் குறித்து முறைப்பாடுகள் தெரிவிக்கப்படுமானால் அது குறித்து கவனம் செலுத்தப்படும் என கூறியிருக்கின்றார். அதேவேளை, அவ்வாறு எந்தவிதமான இசாயனம் கலந்த ஊசியோ அல்லது பின்னர் பாதிப்பை ஏற்படுத்த வல்ல மருந்துகளோ புனர்வாழ்வுப் பயிற்சி பெற்றவர்களுக்கு ஏற்றப்படவில்லை என இராணுவ தரப்பில்; மறுத்துரைக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல் இது ஒரு பௌத்தநாடு, மிருகங்களுக்குக்கூட இங்கு நச்சு மருந்து ஏற்றப்படுவதில்லை. அவ்வாறிருக்கும்போது புனர்வாழ்வு பயிற்சியின்போது முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு இரசாயனம் கலந்த மருந்து ஏற்றப்பட்டது என்பது அபத்தமான குற்றச்சாட்டாகும் என்ற தொனியில் இராணுவ தரப்பின் மறுதலிப்பு அமைந்திருக்கின்றது.
ஆட்கடத்தல், அடையாளம் தெரியாத வகையில் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள். விளையாட்டுத்துறை ஊடகத்துறை உள்ளிட்ட வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் புதிய ஆட்சியில் வெளிவருகின்ற விசாரணைத் தகவல்கள் படைத்தரப்பினருடைய மறுதலிப்பை முரண் நகை மிக்கதாக்கியிருக்கின்றது என்றே கூற வேண்டும்.
எது எப்படியாயினும், இரசாயனம் கலந்த ஊசி மருந்து புனர்வாழ்வு பயிற்சி பெற்றவர்களுக்கு ஏற்றப்பட்டது என்றதொரு குற்றச்சட்டு படைத்தரப்பினர் மீது பகிரங்கமாகக் குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றது. இதற்கு ஆதாராமான முறையில் புனர்வாழ்வுப் பயற்சியின் பின்னர் சமூகத்தில் இணைக்கப்பட்ட சிலரின் மரணங்கள் சம்பவித்திருக்கின்றன. அத்தகைய மரணங்களில் தெளிவான மரண விசாரணைத் தகவல்கள் வெளியாகவுமில்லை.
சாதாரணமாக சமூகத்தில் உள்ள ஒருவர் புற்று நோயினால் மரணமடைந்தால், புற்று நோய் காரணமாகவே அவருடைய மரணம் நேர்ந்துள்ளது என்று மரணத்திற்கான காரணத்தைக் கூறிவிட்டுப் போகலாம். ஆனால் இராணுவத்தின் பராமரிப்பில் பல வருடங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களின் இத்தகைய மரணங்கள் குறித்து மிகத் தெளிவான காரண காரியங்களை வெளிப்படுத்தத்தக்க வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அது இங்கு நடைபெறவில்லை.
ஆகவே, புனர்வாழ்வுப் பயற்சியின்போது என்ன வகையான மருந்து ஊசி மூலம் ஏற்றப்பட்டது, அந்த மருந்தின் தன்மை என்ன, காலங் கடந்த நிலையில் அது என்ன வகையான பாதிப்புகளை ஏற்படுத்த வல்லது, என்ன காரணத்திற்காக அந்த மருந்து ஏற்றப்பட்டது, அதற்கான உத்தரவை யார் வழங்கினார்கள், தகுதி வாய்ந்த மருத்துவர்களினால் அந்த மருந்து ஏற்றப்பட்டதா என்பது போன்ற வினாக்களுக்கு விடையளிக்கத்தக்க வகையில் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு விசாரணை அறிக்கைள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.
இல்லையேல், தாமதித்து உயிராபத்துக்களை ஏற்படுத்தும் மருந்துகள் பயன்படுத்தியிருக்கின்றார்கள் அல்லது தடுப்பு மருந்து என்ற பெயரில் அரசுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடியதன் பின்னர் தமது பாதுகாப்பில் வந்தவர்களை மனிதாபிமானத்துக்கு விரோதமான முறையில் பழி வாங்கியிருக்கின்றார்கள் என்ற பழிச்சொல்லுக்குஇராணுவத்தினரும் , முன்னைய அரசாங்கமும், ஆளாக நேரிடும்.
மருத்துவ பரிசோதனையும் உளவியல் சார்ந்த நிவாரணமும் அவசியம்
புனர்வாழ்வுப் பயற்சியின்போது உண்மையிலேயே என்ன நடந்தது என்பது பற்றிய விசாரணை ஒரு புறமிருக்க, புனர்வாழ்வுப் பயிற்சியின் பின்னர் சமூகத்தில் இணைக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் முழுமையானதொரு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
அவ்வாறான ஒரு பரிசோதனையின் மூலமே அவர்களுக்கு எதிர்காலத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்படமாட்டாது என்பது உறுதிப்படுத்தப்பட முடியும். இல்லையேல் அவர்களுக்கு இயல்பாகவே ஏற்படுகின்ற உடற் பாதிப்புகள் கூட, இரசாயன மருந்து ஏற்றியதன் காரணமாகவே ஏற்பட்டிருக்கின்றன என்ற குற்றச்சாட்டிற்கு அரச தரப்பினர் ஆளாக நேரிடலாம்.
அரசாங்கமும் அதேவேளை, வடமாகாண சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியலிங்கமும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்திருக்கின்றார்கள். இந்த உறுதிமொழியை ஒரு சாரார், நடவடிக்கை எடுக்கப் போகின்றார்கள்தானே, எனவே, இந்த வி;டயத்தை அரசியலாக்கக் கூடாது என கூறியிருக்கின்றார்கள்.
மருத்துவ பரிசோதனை என்பது சாதாரணமானதல்ல. தொடர்ச்சியான உளவியல் பாதிப்புக்கும், உள நெருக்கீடு மிக்க உடல் உபாதைகள் கொண்ட நடைமுறைக்கும் சில சமயங்களில் சித்திரவதை சார்ந்த நடவடிக்கைகளுக்கும் ஆளாகியிருக்கின்ற முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு சாதாரணமான ஆரோக்கிய நிலையில் உள்ளவர்களுக்கு மேற்கொள்ளப்படுகின்ற மருத்துவ பரிசோதனையைப் போன்றதொரு பரிசோதனை போதியதாக இருக்க மாட்டாது.
அவர்களுக்கு மிகவும் பரந்த அளவிலானதும், விசேட கவனம் மிக்கதுமான மருத்துவ பரிசோதனை நடத்தப்பட வேண்டும். இதற்கு துறைசார்ந்த வைத்திய நிபுணர்களும், துறைசார்ந்த வைத்தியர்களும் கொண்டதொரு மருத்தவர் அணி தேவை.
புனர்வாழ்வுப் பயிற்சி பெற்ற 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சமூகத்தில் இணைக்கப்பட்டிருக்கி;னறார்கள். அவர்கள் அனைவரைளயும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவதென்பது இலகுவானதொரு காரியமல்ல.
வெறும் உடல் மருத்துவ பரிசோதனை மட்டும் போதுமானதென்று கூற முடியாது. அவர்களுக்கு சிறப்பான உளவியல் மருத்துவம் சார்ந்த மருத்துவ பரிசோதனையும், அவர்களின் உளவியல் நிலைமைக்கு ஏற்ற வகையிலான உளவியல் மருத்துவமும் அவசியம்.
ஏனெனில் விடுதலைப்புலி உறுப்பினர்கள் தாங்கள் வரித்துக்கொண்ட கொள்கையி;ல் இறுக்கமான பற்றுறுதி கொண்டிருந்தார்கள். அந்த கொள்கைக்காக தமது உயிர்களையே ஆயுதமாக்குவதற்கு பக்குவப்படுத்தப்பட்டிருந்தார் கள். அதற்காகவே அவர்கள் வார்த்து உருவாக்கப்பட்டிருந்தார்கள். அத்தகையவர்களே தமது எதிரிகளிடம் சரணடைந்து அல்லது கைது செய்யப்பட்டு, அவர்களின் தயவில் தடுப்புக்காவலில் – புனர்வாழ்வுப் பயிற்சி என்ற கவர்ச்சியற்ற செயற்பாடுகளுக்கு ஆளாக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
இதன் காரணமாக அவர்கள் உளவியல் ரீதியாக மிக மோசமான முரண் நிலைக்கும் உள நெருக்கீட்டிற்கும் ஆளாகியிருந்தார்கள். யுத்தத்தில் தோல்வியடைந்ததும் – அர்த்தமற்ற சாவாக இருந்தாலும், ஏன் அங்கேயே சாகாமல் உயிர் மீது ஆசை கொண்டு இராணுவத்தினரிடம் சரணடைந்தோம் அல்லது இராணுவத்தின் தடுப்புக்குள் சென்றோம் என்று தாழ்வுச்சிக்கல் சார்ந்த மன உணர்வுகளில் ஆழ்ந்து ஆற்றாது பெருந் துயரடைந்திருந்தார்கள்.
இத்தகைய மனப்பாதிப்புக்கு உள்ளாகிய அவர்கள் இப்போது தங்களுக்கு மெல்லப் பாதிக்கும் மருந்து ஏற்றப்பட்டிருக்கின்றது என்று எண்ணினால் — நம்பினால், அதுவே அவர்களுக்கு மிக மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தவல்ல உளவியல் பாதிப்பாகி விடும். அந்த நிலை அவர்களிடம் மட்டுமல்லாமல், அவர்களுடைய குடும்பத்தினரிடமும் தலையெடுத்திருப்பதை உணர முடிகின்றது.
எனவே, இந்த ஊசி மருந்து விடயம் என்பது மிகவும் பாதிப்புக்களை ஏற்படுத்த வல்லதொரு விவகாரமாகும். ஆதனை உரிய முறையில் கையாள வேண்டும். அதற்கு உரிய நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவும் வேண்டும். இதனைச் செய்யத் தவறினால் சமூகம் மோசமான பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய அபாயம் ஏற்படலாம் என்பதில் சந்தேகமில்லை.