கீரிமலை – நகுலேஸ்வரம் ஆலயத்தின் தீர்த்தக் கடலிலுள்ள கற்பாறைகள், சுமார் 5.6 மில்லியன் ரூபா செலவில் அகற்றப்படவுள்ளதாக, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு நேற்று அனுப்பியுள்ள செய்தி குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தெல்லிப்பழைப் பிரதேச செயலக பிரிவிலுள்ள கீரிமலை தீர்த்தக்கடலானது இந்து மக்கள் ஆடி அமாவாசை தினத்தில் பிதிர்க்கடன் செலுத்துவதில் முக்கியம் வாய்ந்த இடமாகும். இவ்வாறு விசேட தினங்களில் தீர்த்தக் கடலில் நீராடுபவர்கள் அங்கு காணப்படும் கடற்பாறைகளினால் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்கின்றனர்.
குறித்த தீர்த்தக் கடலின் முக்கியத்துவம் தொடர்பில் இந்து அமைப்புக்களால் அரசாங்க அதிபரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
இதனையடுத்து அதனைச் சீர்செய்வதற்கென மீள்குடியேற்றம் புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சிடமிருந்து 5.6 மில்லியன் ரூபாய் இவ்வருடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
குறித்த வேலைத் திட்டம் கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத் திணைக்களத்தின் அனுமதி கிடைத்தவுடன் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அந்தச் செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.