வட மாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கு இளைப்பாறிய நீதிபதிகளைக் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் மாகாண சபை அமர்வில் இது குறித்த பிரேரணையை சமர்ப்பிக்கவுள்ளதாக, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
வட மாகாண சபை அமைச்சர்கள் மீது பொது மக்களினால் பல குற்றச்சாட்டுக்கள் முதலமைச்சருக்கு ஆதாரங்களுடன் முன்வைக்கப்பட்டுள்ளன.
குறித்த விசாரணைக் குழு சம்பந்தமாக முதலமைச்சரிடம் வினவியபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வட மாகாண அமைச்சர் குறித்து பொது மக்களினால் முறைப்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அமைச்சர்களை மாற்ற வேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற்று வருகின்றதனால், இரண்டு இளைப்பாறிய நீதிபகள் மற்றும் இளைப்பாறிய அரசாங்க அதிபர் உட்பட 3 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணைகள் நடாத்தி, குழுவினர் மூலம் ஆராய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அத்துடன், எதிர்வரும் 09ம் திகதி நடைபெறவுள்ள வடமாகாண சபை அமர்வில் இது குறித்த பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அமைச்சர்களை நியமிக்கும் போது, வடமாகாண சபை உறுப்பினர்களின் தகைமைகள், மற்றும் பின்னணியினைப் பார்த்தே 2013ம் ஆண்டு நியமிக்கப்பட்டனர்.
அந்தவகையில், வெளியேற்றுவததென்பது நினைத்தவாறு செய்வது தவறானது. பொது மக்கள் தமது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றார்கள். அந்த குற்றச்சாட்டுக்களின் உண்மை நிலை தெரியவர வேண்டும்.
பொது மக்களினால் என் மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்க வேண்டுமாயின் அந்த குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியும், என்றார்.
இதேவேளை, வடமாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு 3 வருடங்கள் கடந்த பின்னர், இந்த குற்றச்சாட்டுக்களுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்வது எந்தவகையில், சாத்தியமானது என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு முதலமைச்சர் பதிலளிக்கையில், முதலில் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் போது, சாட்சியங்கள் தரப்படவில்லை. அதனால், உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாமல் இருந்தது. குற்றச்சாட்டுக்கள் ஆதாரங்களுடன் நிருபிக்கப்பட்டிருப்பதனால், உண்மைத் தன்மையினை விசாரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. தாமதமாக இருந்தாலும், அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கான விசாரணைகளை மேற்கொள்ளாமல் விடுவதனை விடவும், தாமதாக செய்வதும் சிறந்ததாக அமையும் என நினைக்கின்றேன் என்றார்.