முன்னைய அரசாங்கம் வெளிப்படையாகத் தரமாட்டோம் என்றது. இப்பொழுதைய அரசாங்கம் எல்லாந் தருவோம் என்று காலத்தைக் கடத்திக் கொண்டே செல்கின்றது. அது மட்டுமல்ல. “எல்லாம் தருவோம்” என்று எங்களுக்குக் கூறிவிட்டு எம்மை எம்மிடையே அல்லது எமது சகோதர இனங்களுடன் மோத விடும் ஒரு பாங்கினைக் கண்கூடாகக் காண்கின்றோம். என வடமாகாண முதலாமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்து உள்ளார்.
தமிழ் மக்கள் பேரவையின் ஐந்தாவது கூட்ட தொடர் ஞாயிற்றுக்கிழமை பொது நூலகத்தில் நடைபெற்றது. அக் கூட்டத்தில் இணைத்தலைவராக , கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
எமது மத்திய அரசாங்கம் பொறுப்புக் கூறல் சம்பந்தமான ஜெனிவாத் தீர்மானத்தின் நோக்கை மழுங்கடையச் செய்யத் தன்னாலான சகலதையுஞ் செய்து வருகின்றது.
அண்மையில் அரசாங்கச் செயலணி ஒன்றில் பதவி வகிக்கும் நண்பர் ஒருவர் கொழும்பில் இருந்து என்னைக் காண வந்தார். அப்போது ஒரு முக்கிய விடயத்தைத் தெரிந்து கொண்டேன். எப்படியாவது வரும் செப்ரெம்பருக்கு முன்னர் தமக்கு வேண்டிய மக்கள் சிலரின் மனம் அறிந்து அவற்றின் அடிப்படையில் புதிய அரசியல் யாப்புக்கான விபரங்களைச் சேகரிக்க வேண்டும்.
அதன்பின் அவற்றின் அடிப்படையில் புதியதொரு யாப்பின் வரைவை அடுத்த மார்ச் மாதத்திற்கு முன்னர் பாரளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மார்ச் மாதம் வந்ததும் ஜெனிவாவில் எமது அரசியல் பிரச்சினை தீர்க்கப்பட இருப்பதாக அறிவித்தால் சர்வதேசம் அதன் பின்னர் இலங்கை பற்றி அலட்டிக் கொள்ளாது. பொறுப்புக் கூறல் விடயத்தில் இலங்கை தப்பி விடலாம் என்பதே அவர் தந்த தகவல்.
அதாவது அரசியல் தீர்வு வந்து விட்டதே, இனி பொறுப்புக் கூறலில் வேகம் தேவையில்லை என்று கூறலாம் என்ற விதத்திலேயே அவரின் கருத்து அமைந்திருந்தது.
எம்முட் சிலரும் இவ்வாறே சிந்திக்கின்றனர். அதாவது வருங்காலம் பற்றிச் சிந்திப்போம். சென்ற காலத்தை மறந்து விடுவோம் என்பது போல இந்தச் சிந்தனை அமைந்திருக்கின்றது. அவர்கள் மனதில் எழும் சில உள்ளார்ந்த வெறுப்புக்களும் இதற்குக் காரணமாய் அமைந்துள்ளது.
சரியோ பிழையோ இயக்க இளைஞர்களின் தியாகமே எங்கள் குறைகளை உலகறிய வைத்துள்ளது என்பதை நாம் மறந்துவிடலாகாது. வெறும் சிறுபான்மையினர் கிளர்ச்சியாகக் காணப்பட்ட எமது போராட்டம் வடகிழக்கின் பாரம்பரிய பெரும்பான்மையினரின் போராட்டமாகப் பரிணாமம் பெற்றதென்றால் அதற்கு அவர்களே காரணகர்த்தாக்கள் என்பதை நாங்கள் மனதில் கொள்ள வேண்டும். “வருங்காலம் பற்றிச் சிந்திப்போம், சென்றகாலம் போய் விட்டது” என்ற சித்தாந்தம் பற்றிய ஒரு முக்கிய குறையை நாங்கள் கவனத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதாவது இந்த அரசாங்கமோ எந்தப் பெரும்பான்மையின அரசாங்கமோ தரப்போகும் அரசியல் தீர்வு எமக்கு முழுமையான திருப்தியை அளிக்கப் போவதில்லை.
அவற்றை ஏற்பதென்றால் போனால் போகட்டும் என்ற வகையில்த்தான் நாம் அவற்றை ஏற்கக் கூடும். ஏனென்றால் தற்போது இருப்பதிலும் பார்க்க சில முன்னேற்றங்களையே அரசாங்கம் ஆங்காங்கே முன் வைக்கும். உடனே எம்மவர்கள் “பார்த்தீர்களா? முன்பிலும் பார்க்க இது முன்னேற்றந் தானே” என்பார்கள். அது சரியாக இருக்கலாம். ஆனால் எமது எதிர் பார்ப்புக்கள் அரசியல் ரீதியாக மேற்படி அரசியல் யாப்புக்களால் முற்றிலுந் திருப்திப்படுத்தப் படப் போவதில்லை.
எனவே பொறுப்புக் கூறலை நாம் தியாகஞ் செய்து விட்டு பெறுமதியான நிலையான தீர்வொன்றையும் அரசியல் ரீதியாகப் பெற முடியாத நிலைமையே உருவாகும். அங்கும் தோல்வி இங்குந் தோல்வியாகவே முடியும்.
சிங்கள அரசியல்த் தலைவர்களைப் பொறுத்தவரையில் எந்த ஒரு சிங்கள மகனும் போரின் போது அவன் செய்த அட்டூழியங்களுக்காகத் தண்டனை அனுபவிக்கக் கூடாது என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு.
அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல மற்றையவர்கள் பலருங் கூட எப்படியாவது போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்களைத் தப்ப வைக்கவே பார்க்கின்றார்கள். வழக்குகளின் தீர்ப்பு பற்றி அவற்றைப் பரிசீலிக்காமல் நாங்கள் எங்கள் கருத்துக்களை வெளியிடக் கூடாது.
ஆனால் நடைமுறைகள் சிலவற்றை நாங்கள் கருத்துக்கெடுக்கலாம். பல வருட காலத்தின் பின்னர் ஒரு வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்ட இராணுவத்தினர் அனைவரும் அண்மையில் விடுதலை செய்யப்பட்டார்கள். காரணம் இன்னும் தெரியவில்லை.
ஆனால் இன ரீதியாகச் சிந்திக்கக்கூடிய பெரும்பான்மை மக்களிடையே, அவர்களை நீதிகாண வைக்க வேண்டுமானால் பொறுப்புக் கூறலை இறுக்கிப்பிடிப்பதாலேயே அது சாத்தியமாகும்.
சிங்கள மக்கட் தலைவர்கள் நெருக்குதல் இல்லாவிட்டால் தமிழர்களுக்கு எந்த வித சலுகையுந் தர முன்வர மாட்டார்கள் என்பது கொழும்பில் பிறந்து வளர்ந்த என்னுடைய முடிவான கருத்து. சௌமிய மூர்த்தி தொண்டமான் அவர்கள் தனது தொழிற் சங்க நெருக்குதல்கள் மூலமே தன் மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுக் கொடுத்தார்.
முன்னைய அரசாங்கம் வெளிப்படையாகத் தரமாட்டோம் என்றது. இப்பொழுதைய அரசாங்கம் எல்லாந் தருவோம் என்று காலத்தைக் கடத்திக் கொண்டே செல்கின்றது. அது மட்டுமல்ல. சில யுக்திகளையுங் கையாளுவதாகக் காணக் கூடியதாக உள்ளது.
அதாவது “எல்லாம் தருவோம்” என்று எங்களுக்குக் கூறிவிட்டு எம்மை எம்மிடையே அல்லது எமது சகோதர இனங்களுடன் மோத விடும் ஒரு பாங்கினைக் கண்கூடாகக் காண்கின்றோம்.
வவுனியா பொருளாதார மையத்தை எடுத்துக் கொள்வோம். பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த வவுனியா அரசாங்க அதிபர் தான் நிபுணத்துவ அலுவலர் குழு அமைத்து மையம் எங்கு அமைய வேண்டும் என்று அவர்களிடம் இருந்து தெரிந்து கொண்;டார்.
அது எமக்கு அறிவிக்கப்பட்ட போது அலுவலர் அறிக்கையைப் பரிசீலனை செய்து அவர்களின் முடிவு சரியே என்று கண்டு எமது வடமாகாண சபை அவர்களின் கருத்தை வலியுறுத்தி ஓமந்தையே சிறந்த இடம் என்று எமது கருத்தை அமைச்சர் ஹரிசனுக்குத் தெரியப்படுத்தினோம்.
ஆனால் இன்னொரு அமைச்சர் அதைத் தாண்டிக்குளத்தில் அமைக்க வேண்டும் என்று கூறி நானில்லாத ஒரு ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் மாற்றி அமைக்கப் பார்த்தார்.
அதனால் ஊர் இரண்டுபட்டது. பின்னர் எமது முரண்பாடுகளைக் களையப் போவதாகக் கூறி ஒன்றிற்கு இரண்டு மையங்கள் அமைக்கத் தீர்மானம் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டுள்ளது. எந்த அளவுக்குத் தெற்கில் உள்ள மையம் மாங்குளத்தைப் பாதிக்கக் கூடும் என்பது சர்ச்சைக்குரிய விடயமாகியுள்ளது.
தெளிந்த ஒரு குளத்தின் நீரில் பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டால் எவ்வாறு அந்த குளத்தின் அமைதியும் அதன் அசைவற்ற நிலையும் மாறிப் போகின்றதோ அவ்வாறே காலத்திற்குக் காலம் எம்மிடையே சில முரண்பாடுகளுடைய விடயங்களை உட்புகுத்தி எமது இனத்தின் ஒற்றுமையைக் குலைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அண்மையில் நான் கேட்டதொன்றைக் கூற விரும்புகின்றேன். 65000 பொருத்தல் வீடுகள் வேண்டாம் என்று நாங்கள் கூறியதை ஏற்றுக் கொண்டுள்ளதாகக் காட்டிய அரசாங்கம் அதனை இன்னொருவிதத்தில் உட்புகுத்த வழி அமைத்து வருவதாகக் கேள்விப்படுகின்றேன்.
அதாவது தமிழர்கள் வேண்டாம் என்றால் என்ன எமக்குக் கட்டித் தாருங்கள் என்று வேறு இனங்கள் கோரி அந்தப் பொருத்தல் வீடுகளை அவர்களுக்கு அமைத்துக் கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அறிகின்றேன்.
அதனால்த்தான் வடமாகாண மக்கள் பிரதிநிதிகளைப் புறக்கணித்து முஸ்லீம், சிங்கள இடம்பெயர்ந்தோரை மீளக் குடியமர்த்துவதற்காக ஒரு ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலணி தேவையில்லை என்று எங்கள் வடமாகாண சபை தீர்மானம் எடுத்திருந்தும் மேற்படி பொருத்தல் வீடுகளை மேற்கண்ட இரு இன மக்களுக்கும் கட்டிக் கொடுக்கும் விதத்தில் அதைக் கொண்டு வந்த அதே அமைச்சரும் அந்தச் செயலணியில் உள்வாங்கப்பட்டுள்ளார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அந்த அமைச்சர் பொருத்தல் வீடுகளைப் பொருத்துவதிலேயே கண்ணுங் கருத்துமாக இருக்கின்றார் போல் தெரிகின்றது.
அதே நேரம் முஸ்லிம், சிங்கள மக்களின் மீள்குடியேற்றம் என்ற கருத்து சிரிப்புக்கிடமாக அமைந்துள்ளது. பின்ஹெயிரோ கோட்பாட்டின்படி எவரொருவர் தன் வசிப்பிடத்தில் இருந்து வன்முறைச் சம்பவங்களினால் அல்லது அரசியல் ரீதியான காரணங்களினால் வெளியேற்றப்பட்டாரோ அவரைத் திரும்பவும் அவர் வாழ்ந்த இடத்தில் மீள்குடியேற்ற வேண்டும் என்றிருக்கின்றது.
இதில் தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் என்ற பாகுபாட்டுக்கே இடமில்லை. அவ்வாறு குடி பெயர்ந்த சகல மக்களையும் மீள் குடியேற்றப் போகின்றோம் என்று கூறாது அவர்களை இன, மொழி ரீதியாகப் பிரித்து குடியேற்றத்தில் ஈடுபடுத்துவது அரசியல் காரணங்களுக்காக என்று தெட்டத் தெளிவாகப் புலப்படுகிறது.
மீண்டும் எம்மிடையே குழப்பத்தை உண்டாக்கி எம்மக்களை முக்கியமான அவர்களின் குறிக்கோள்களில் இருந்து வழிமாற்ற முற்படுகிறது அரசாங்கம். நாங்கள் இப்பேர்ப்பட்ட முரண்பாடுகளில் எங்கள் சகல பலத்தையுங் கவனத்தையும் பிரயோகித்துக் கொண்டிருக்கும் போது அரசியல் சம்பந்தமான மிகக் குறைந்த ஏற்பாடுகளுடன் அரசியல் யாப்பு வரைவொன்றைத் தயாரித்து விடுவார்கள்.
எப்படியாவது மக்கள் அந்த வரைவை ஏற்றுள்ளார்கள் அல்லது அதற்குச் சார்பாக இருக்கின்றார்கள் என்று ஜெனிவாவுக்குக் காட்டுவதே அவர்களின் குறிக்கோளாக இருக்கின்றது.
நான் இப்பொழுது தான் அரசியல் சூழ்ச்சிகளைப் படித்து வருகின்றேன். ஒரு தேர்தலில் வென்ற பின் எதிர்த்தரப்பாரை மேலெழும்ப விடக் கூடாது.
வழக்கு மேல் வழக்கு வைத்து விசாரணை வைத்து அவர்களின் எதிர்ப்புச் சக்தியை மழுங்கடிக்க வேண்டும் என்பது நான் கற்ற ஒரு பாடம்.
எதிர்க்கட்சிகளிடம் அல்லது மாறுபட்ட கருத்துடையவர்களிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தி அவர்களைத் தலை தூக்க முடியாமல் ஆக்குவது இன்னொரு யுக்தி. முடியுமானால் அவர்களைப் பொலிஸ் நிலையத்துக்கும் நீதிமன்றங்களுக்கும் அலைய விட வேண்டும். இது மற்றொரு பாடம்.
முன்னர் ஜே. ஆர் அவர்களிடம் இருந்து ஒரு பாடம் கற்றிருக்கின்றேன். ஏதாவது மக்கள் எதிர்க்கக் கூடிய ஒரு சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்றால் அந்த சட்டத்தை உள்ளடக்கி அதிலும் பார்க்க மிகக் கொடூரமான சில ஷரத்துக்களையும் அதனுடன் வரைவில் உள்ளடக்கி வைக்க வேண்டும்.
இது விவாதத்திற்கு வரும் போது மேலதிகமாக உள்ளடக்கிய ஷரத்துக்களை ஜனநாயக ரீதியில் கைவாங்குவதாகக் கூறித் தான் முதலில் கொண்டுவர இருந்த அந்தச் சட்டத்தை இலேசாக நிறைவேற்றி விடுவதே ஜே.ஆரின் யுக்தி.
தமிழ் மக்களாகிய நாங்கள் இதுவரையில் பல தடவைகள் ஏமாற்றப்பட்டே வந்துள்ளோம். படிப்பிலும் பண்பிலுந் தான் நாங்கள் ஜாம்பவான்கள். குயுக்தியிலும் குதர்க்கத்திலும் நாங்கள் சிறு பிள்ளைகள்.
சென்ற ஜனாதிபதித் தேர்தலின் போது எந்த வித வாக்குறுதிகளையும் நாம் பெற முயலவில்லை. பண்புள்ள கனவான்களாக நாங்கள் நடந்து கொண்டோம். ஆனால் முன்னைய அரசாங்கத்துடன் நெருங்கிய ஒட்டுறவு வைத்துக் கொண்டிருந்த இன்னொரு கட்சியின் தலைவர் எனக்கு “இது தர வேண்டும் அது தர வேண்டும்; எனக்கெதிராக இது செய்யக் கூடாது அது செய்யக் கூடாது” என்று உறுதி மொழிகளை இந்த அரசாங்கத் தலைமைத்துவத்திடம் இருந்து பெற்றுக் கொண்டே இந்த அரசாங்கத்துக்கு உதவ முன்வந்தார். இப்பொழுது அந்த உறுதி மொழியைக் காரணங் காட்டி இந்த அரசாங்கத்தை ஆட்டிப்படைத்து வருகின்றார்.
இதில் சரி பிழை சொல்ல நான் முயலவில்லை. நாம் யாருடன் தொடர்பு வைத்துள்ளோம் அவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதும் அரசியலில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு பாடமாக அமைந்துள்ளது. எனவே நாங்கள் எங்கள் கடப்பாடுகளை உணர்ந்து அவற்றை மறக்காமல் செயல்பட வேண்டியுள்ளது என்பதைக் கூறி வைக்கின்றேன்.
இன்றைய நிலையில் எமது பிரச்சனைகளை நாம் இனம் காண வேண்டும். அவற்றை முழுமனதுடன் முழு சக்தியுடன் நாம் முன்னெடுக்க முன்வர வேண்டும் என்று கூறுகின்றேன். அரசாங்கங்களின் குயுக்திகளுக்கு நாம் ஆளாகக் கூடாது என்று கூறுகின்றேன். எமது ஒற்றுமையைக் குலைக்க அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாம் பலியாகக் கூடாது.
அந்த விதத்தில் எமது வடமாகாண ஆளும் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முரண்பட்ட விதத்தில் நடந்து கொள்ளாது எம்மக்கள் நலன் கருதி இதுகாறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அனுசரணைச் சக்தியாகவே நடந்து கொண்டு வந்திருக்கும் உங்கள் தமிழ் மக்கள் பேரவையை மனதாரப் பாராட்டுகின்றேன்.
எமது சமூகத்தின் புத்திஜீவிகள் பலரை உள்ளடக்கியது உங்கள் கட்சி. அதனால்த்தான் போலும் முரண்பாடுகள் ஆங்காங்கே இருப்பினும் நீங்கள் அவற்றைப் பொருட்படுத்தாமல் மேலெழுந்த வாரியாக ஒட்டுமொத்த தமிழ் மக்களின் நலன் கருதி உங்கள் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்கின்றீர்கள்.
உங்கள் நடவடிக்கைகள் எங்கள் மக்களை நல்வழிப்படுத்த இறைவன் அருள் புரிவானாக!
பொறுப்புக் கூறல் பற்றி ஒரு சில வார்த்தைகள். ஐக்கிய நாடுகள் சபை இரு கோரிக்கைகளை சென்ற வருடம் செப்ரெம்பர் மாதத்தில் முன்வைத்துள்ளது. போர் முடியுந் தறுவாயில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கு இலங்கை பொறுப்புக் கூற வேண்டும்.
அடுத்து போரினால் பாதிக்கப்பட்ட வடமாகாணத்தில் இருந்து இராணுவ பிரசன்னத்தைக் குறைக்க வேண்டும் என்பனவே அவை. அண்மையில் இளவரசர் சயிட் ராட் அல் ஹ{சேன் அவர்கள் போருக்குப் பின்னரான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் பொறுப்புக் கூறல் சம்பந்தமாக இலங்கை மிகக் குறைவான முன்னேற்றமே கண்டுள்ளது என்றார்.
பல விடயங்களில் பலமான மேற்பார்வை அவசியம் என்றார். அதாவது இராணுவத்தைக் கண்காணிக்கும் மக்கள் குழுவின் பலத்தை மேலும் வலிமையூட்ட வேண்டும் என்றார். பாதுகாப்புக் கொள்கைகள் பற்றி மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்றார். மேலும் பல விடயங்களைக் குறிப்பிட்டிருந்தார்.
வடமாகாண மக்களுடன் சீரிய உறவைப் பேண அரசாங்கம் தவறிவிட்டது என்ற செய்தியையும் முன்வைத்தார். அத்துடன் 2015ல் தருவதாகக் கூறிய காணிகள் அனைத்தும் இதுவரையில் விடுவிக்கப்படாதது பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.
அரசாங்கம் பொறுப்புக் கூறல் விடயத்தில் உண்மையை அறிந்து கொள்ளும் விதத்தில் நடவடிக்கைகள் எடுப்பதாகத் தெரியவில்லை. விசேட உள்நாட்டு நீதி மன்றங்கள் அமைப்பது பற்றித்தான் கூறப்படுகிறது.
இலங்கை 2009 தொடக்கம் உள்நாட்டு நீதிமன்றங்கள் பற்றித்தான் கூறிவருகின்றது. இவற்றால் எந்தவித நன்மையும் கிட்டப் போவதில்லை. இதை நாங்கள் திரும்பத் திரும்ப எங்கள் மக்கள் கவனத்தில் நிலை நிறுத்த வேண்டும். அதனை உங்களின் ஒரு கடப்பாடாகவே காண்கின்றேன்.
தென் ஆபிரிக்கா பற்றி அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் அங்கு அரசியல் யாப்பு பற்றிய முரண்பாடுகள் முடிவுக்குக் கொண்டுவந்த நிலையிலேயே உள்ளக விசாரணை மன்றங்கள் அமைக்கப்பட்டன. ஆனால் இங்கு எமது குறைகள் இன்னமும் தீர்மானிக்கப்படாமலேயே இருக்கின்றன.
தீர்க்காத சூழ்நிலையில், பெரும்பான்மை மக்களின் கை ஓங்கியிருக்கும் இந்நிலையில், உள்நாட்டு நீதிமன்றங்கள் நீதியை வழங்குவன என்று எதிர்பார்க்க முடியாது. ஆகவே சர்வதேச நீதிபதிகளே விசாரணைகளை நடத்த வேண்டும் என்பதில் நாங்கள் மிகவும் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
எமது பெரும்பான்மையின நீதிபதிகள் சிங்களவர்களுக்குப் பக்கச்சார்பாக இதுவரையில் நடந்து வந்துள்ளார்கள் என்பதை எடுத்துக் காட்டும் ஒரு நூல் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ஜயந்த அல்மெயிடா குணரத்ன, செல்வி கிஷாலி பின்டோ ஜயவர்த்தனா மற்றும் ஜெகான் குணதிலக ஆகிய மூன்று சிங்கள சட்டத்தரணிகளால் சில வருடங்களுக்கு முன் வெளியிடப்பட்டது.
இந்நாட்டின் உள்ளக விசாரணை நீதியைப் பெற்றுத் தரமாட்டாது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாகவே மேற்படி “நீதித்துறை மனக்கிடக்கை” (துரனiஉயைட ஆiனெ) என்ற நூல் அமைந்துள்ளது.
போர்க் குற்றங்கள் பற்றிய உண்மையை அறிந்தால்த்தான் நல்லெண்ணத்திற்கு வழி வகுக்கலாம்.
உள்ளக விசாரணைகள் குமாரபுரம் வழக்குப் போல முடிவடையும் என்பதில் சந்தேகம் இருக்கத் தேவையில்லை.
எனவே பொறுப்புக் கூறல் விடயத்தில் சர்வதேச நீதிபதிகளின் உள்ளேற்பே நீதியைப் பெற்றுத்தரும் என்ற விடயத்தை நாங்கள் ஊன்றிக் கூற வேண்டிய ஒரு கடப்பாடு உருவாகியுள்ளது. இந்த விடயத்தை எமது தூதரகங்களுக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் கூறிக் கொண்டே இருப்பது அவசியம்.
அது மட்டுமல்ல. வழக்கு நடத்துநராக எமது சட்டத்துறைத் தலைமையதிபதி ஏற்படக் கூடாது. சர்வதேச புகழ் பெற்றவர்களைக் கொண்ட குழு சில காலத்திற்கு முன் எமது சட்டத்துறைத் தலைமையதிபதி திணைக்கள சட்டத் தரணிகள் பற்றி மிக மோசமாக விமர்சித்தார்கள். அவர்களும் இராணுவத்தினருக்குப் பக்கச் சார்பாய் நடந்து கொண்டதை எமக்கு உணர்;த்திச் சென்றார்கள்.
மூன்றாவதாக போர்க் குற்றம் பற்றிய சட்டமானது இன்னமும் எமது சட்டவாக்கத்தினுள் உள்ளடக்கப்படவில்லை என்பதை நாங்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும்.
தற்போதைய அரசியல் யாப்பின் 13(6)வது ஷரத்தின் புறவுரையின் பிரகாரமே அவற்றை உள்ளேற்பதாகக் கூறியிருப்பினும் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வழக்கு நடத்துநர், நீதிபதிகள் வெளியில் இருந்து வந்தாலும் விசாரணை நடத்தப் போதுமான சட்டம் இன்னமும் எமது சட்டவாக்கத்தினுள் உள்ளேற்கப்படவில்லை என்பதே உண்மை.
அரசியல் தீர்வைப் பேசி பொறுப்புக்கூறலை மறக்க வைக்க இடமளிக்கக் கூடாது.
அதே நேரம் அரசியல் தீர்வைப் பற்றியும் உரக்கக் கூற வேண்டியிருக்கின்றது. என்னால் முடிந்தமட்டில் வெளிநாட்டில் இருந்து வரும் பல உயர் அதிகாரிகளுக்கு எமக்குச் சமஷ்டியே ஒரே தீர்வு என்ற விடயத்தை எடுத்துக் கூறியே வருகின்றேன். அவர்களுடன் நீங்களும் பல்வித வெளிநாட்டு உள்நாட்டு நிறுவனங்களுடனும் உயர் அலுவலர்களுடனும் அளவளாவி சமஷ்டி வழிமுறை மேல் எங்களுக்கு இருக்கும் உடன்பாட்டை எடுத்தியம்ப வேண்டும்.
நேற்றைக்கு முன்னைய தினம் என்னைச் சந்தித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் அலுவலர் ஒருவர் ஸ்பேயின் நாட்டைச் சேர்ந்தவர். ஸ்பெயின் நாட்டில் சமஷ்டி என்ற கருத்தை சர்வாதிகாரி ப்ரான்கோவின் மறைவின் பின்னர் மக்கள் எதிர்த்தார்களாம். எனினும் சுயாட்சி என்ற கருத்தை உட்புகுத்தி அவர்கள் அரசியல் பிரச்சனைக்குத் தாங்கள் முற்றுப்புள்ளி வைத்ததாகவும் சமஷ்டி நிலையை ஏற்படுத்த உரிய சட்டங்களை வேறு விதமாகவும் பொறுப்புடனும் இயக்க நடவடிக்கைகள் எடுக்க முடியும் என்றும் கூறினார். இதனை மத்திய அரசாங்கத்திற்குத் தெரிவியுங்கள் என்றேன்.
மேலும் கடந்த இரு தினங்களாக இன்று வரையில் நீர்கொழும்பில் மாற்றுக் கொள்கைக்கான மையம் (ஊPயு) என்ற நிறுவனம் நடாத்தும் அரசியல் தீர்வு பற்றிய கருத்தரங்கத்தில் என் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஸ்ரீதரன், எமது விவசாயத்துறை அமைச்சர் கௌரவ ஐங்கரநேசன், எமது எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ தவராஜா ஆகியோர் கலந்து கொண்டு சமஷ்டி பற்றியும் எமது எதிர்பார்ப்புக்கள் பற்றியும் உரையாற்ற உள்ளனர்.
எனவே எமது அரசியல் தீர்வைப் பொறுத்த வரையில் எமது இன அடையாளம், எமது நில அடையாளம், எமது பாரம்பரிய கலாச்சார அடையாளம், மொழி அடையாளம், எமது சமூக ஒன்றிப்பு போன்ற பலவற்றை வலியுறுத்தியே எமக்கான சுயநிர்ணய உரிமையை நாங்கள் பெற வழி வகுக்க வேண்டும். மாண்புடன், பாதுகாப்புடன், நிலைபாட்டுடன் நாங்கள் வாழ வழி காண வேண்டும்.
வடமாகாணத்தில் இருக்கும் பாரம்பரிய சிங்களக் கிராமங்களை அடையாளங் காணுவதும் அண்மையில் நியமிக்கப்பட்ட கௌரவ ரிஷாட் பதியுடீன் தலைமையிலான ஜனாதிபதி செயலணியின் கடப்பாடுகளில் ஒன்று. வடமாகாணசபை இதனை எதிர்த்துத் தீர்மானம் கொண்டுவந்துள்ளது. இதனை எதிர்க்காவிட்டால் எமது தனித்துவம், எமது பாரம்பரியம், எமது சுயநிர்ணய உரிமை யாவும் பாதிக்கப்படுவன. அவ்வாறான செயலணியை வாபஸ் பெற வேண்டும் என்று குரல் கொடுப்பது அவசியமாகியுள்ளது.
வடமாகாணத்தில் சிங்களக் கிராமங்கள் சென்ற 100 வருடங்களுக்குள்ளேயே வளர்ந்து வந்துள்ளன. அதுவும் வவுனியா மாவட்டத்தின் தெற்குக் கோடியில் ஒரு பகுதியே அது. மற்ற இடங்களில் எல்லாம் பலாத்காரமாக அரசாங்கம் மக்களைக் குடியேற்றியே கிராமங்கள் உதித்துள்ளன.
வடகிழக்கு இணைப்பு பற்றியது. வடகிழக்கை இணைக்காது தனித்தனியாக வைத்திருந்தால் என்ன என்று அண்மையில் என்னைச் சந்தித்த ஜனாதிபதி செயலணியின் செயலாளர் என்னிடம் கேட்டார். வடக்கு கிழக்கு பாரம்பரியமாகத் தமிழ் பேசும் மாகாணங்கள். எனவே தமிழ் மொழி நிலைக்க, தமிழ் மொழியைப் பேசும் மக்களின் கலாச்சாரம் நிலைபெற, பிற கலாச்சாரங்களை உட்புகுத்தி இன அழிப்பை ஏற்படாது தடுக்க வடக்கும் கிழக்கும் இணைந்தே தீர வேண்டும் என்றேன். வட – கிழக்கில் வேண்டுமென்றால் இது பற்றிய ஒரு கருத்துக் கணிப்பை வைக்கலாம் என்றும் கூறினேன்.
கிழக்கில் சிங்கள மக்கள் பெருவாரியாகக் குடியேறி விட்டார்கள்; முஸலீம்கள் வடகிழக்கு இணைப்புக்கு ஒத்து வர மாட்டார்கள் என்றெல்லாம் வடகிழக்கு இணைப்புக்கு எதிராகக் காரணம் காட்டுகின்றார்கள். இவ்வாறு கூறும் நம்மவர்கள் கிழக்கில் பெருவாரியாக வெளியார் குடியேற்றங்கள் நடைபெற்ற போது தமது குரல்களை உரத்துக் கத்தியிருந்தால் இவ்வாறான குடியேற்றங்களைக் குறைத்திருக்கலாம். இக் குடியேற்றங்களினால் எமக்கு ஏற்பட்ட பாதிப்பை நாங்கள் தணிப்பது என்றால் வடகிழக்கு இணைப்பு அவசியம்.
முஸ்லிம் மக்களுக்கு ஒரு நிர்வாக அதிகார சபையை வழங்குவதில் தமிழ் மக்களுக்கு எந்த ஆட்சேபணையும் இருக்க முடியாது.
ஆனால் வடக்குக் கிழக்கு இணைந்த தமிழ்ப் பேசும் அலகு என்பது எமது வருங்கால ஒற்றுமைக்கும், தமிழ்ப் பாரம்பரிய நிரந்தரத்திற்கும் மிக்க அவசியமான ஒன்று என்பதைக் கூறி தமிழ் மக்கள் பேரவை மூன்று முக்கியமான விடயங்களை மக்கள் மனதில் விதைக்கப் பாடுபட வேண்டும் என்றும் கூறி வைக்கின்றேன்.
ஒன்று பொறுப்புக் கூறல் கடப்பாட்டில் இலங்கை அரசாங்கத்தின் பங்கை ஆணித்தரமாக வலியுறுத்தல் வேண்டும்.
இரண்டு, அரசியல் தீர்வானது தமிழ் மக்கள்; கேட்டவாறு கிடைக்காவிடில் நல்லிணக்கம் ஏற்படாது என்ற கருத்தை வலியுறுத்த வேண்டும்.
மூன்றாவது வட கிழக்கு ஒருங்கிணைப்பை வலியுறுத்த வேண்டும். இம் மூன்றையும் உங்கள் பேரவை மக்களிடையே எடுத்துச் சென்றும் சர்வதேச மட்டத்தில் வலியுறுத்தியும் வரும் என்று எதிர்பார்கிறேன் என மேலும் தெரிவித்தார்.