இம்பால்: ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மணிப்பூரில் 16 ஆண்டுகாலம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த இரோம் ஷர்மிளா இன்று தம்முடைய போராட்டத்தைக் கைவிட்டார். இதனையடுத்து நீதிமன்றம் அவரை ஜாமீனில் விடுதலை செய்தது.
மணிப்பூரில் 2000-ம் ஆண்டில் போலீஸ் வாகன அணிவகுப்பின் மீது குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 10 பேர் கொல்லப்பட்டனர்.
வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரங்கள் அளிக்கும் சட்டம் அமலில் உள்ளது. இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்தி பாதுகாப்பு படை வீரர்கள் பொதுமக்களை துன்புறுத்துவதால், உடனடியாக சட்டத்தை நீக்க வேண்டும் எனக்கோரி சமூக ஆர்வலரான இரோம் ஷர்மிளா தனது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.
இதனால் அவரை அம்மாநில போலீசார் கைது செய்வதும் சிறை, மருத்துவமனையில் உண்ணாவிரதம் இருப்பதும் தொடர் கதையாகி வருகிறது. அவர் மீது தற்கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தம்முடைய 16 ஆண்டுகால உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடப் போவதாக இரோம் ஷர்மிளா அறிவித்திருந்தார். தம்முடைய போராட்டங்களை மத்திய அரசுகள் கண்டுகொள்ளாததால் தாம் போராட்டத்தைக் கைவிடுவதாகவும் தேர்தல் அரசியலில் ஈடுபடப் போவதாகவும் அவர் கூறியிருந்தார்.
இதனிடையே இன்று மருத்துவமனையில் இருந்து நீதிமன்றத்துக்கு இரோம் ஷர்மிளா அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தாம் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக நீதிபதியிடம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ரூ10,000 சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டதாக இரோம் ஷர்மிளாவின் வழக்கறிஞர் தெரிவித்தார்.