180
நீதியான, போர்க்குற்ற விசாரணையை உறுதி செய்யாது வெறும் பொருளாதார நன்மைகளை எமது மக்களுக்கு அளிப்பது அவர்களை விலைக்கு வாங்குவதாக அமையும். என வடமாகாண சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வேலணை பகுதியில் முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் , நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவியுமான கௌரவ சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க அம்மையார் அவர்களின் தலைமையின் கீழ் மழை நீர் சேகரிக்கும் நீர்த் தாங்கிகளை பொது மக்களிடம் கையளிப்புச் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.
அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,
முன்னைநாள் ஜனாதிபதி அவர்கள் நேரடியாக வேலணைப் பகுதிக்கு விஜயம் செய்திருப்பது ஒரு வரவேற்கத்தக்க நிகழ்வு.
அம்மையார் அவர்கள் இந்த நாட்டின் ஜனாதிபதியாக வீற்றிருந்த காலத்தில் இப் பகுதிக்;கு விஜயம் செய்து இங்கிருக்கும் மக்களின் குறைபாடுகளையும் அவர்களின் அபிலாசைகளையும், தேவைகளையும் அறிய முடியாத நிலையிலும் தனது சேவைக்காலம் முடிவுற்று ஓய்வு பெற்றுள்ள நிலையில் எம் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற உள்ளக்கிடக்கை அவரை ஆட்கொண்டமை மகிழ்வைத் தருகின்றது.
இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது கௌரவ சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க அம்மையார் அவர்கள் இந்தப் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு கடுமையாகப் பாடுபட்டு உழைத்தவர்.
அத்தேர்தலின் போது தமிழ் மக்களின் அமோக வாக்குகளாலேயே இப்புதிய அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டது. அதற்கான நன்றிக் கடனாக அம்மையார் அவர்கள் எம் மக்கள் மீது அன்பு பாராட்டுகின்றார் என்று நாம் நினைக்க இடமுண்டு. சர்வதேச நாடுகளுடன் சேர்ந்து ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தவும் அவர் உதவிபுரிய வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
போர்க்குற்ற விசாரணை உரியவாறு பாரபட்சமின்றி நடைபெற்றால்த்தான் தேசிய ஒருமைப்பாடும் நல்லிணக்கமும் உருவாகலாம் என்பதை நான் கூறி அம்மையார் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.
நடந்து முடிந்தனவற்றிற்குப் பரிகாரம் காணாமல் எமக்கு எவ்வளவுதான் நன்மைகளைப் பெற்றுக் கொடுத்தாலும் அவை எம்மைத் திருப்திப்படுத்தாது என்பதை அன்புடன் அம்மையாருக்குச் சொல்லி வைக்கின்றேன்.
சமாதானத்துக்கான முன்னுரிமை அச்சுவார்ப்புருவின் பிரதியொன்று எமக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நிலைமாற்றத்துக்கான நீதிமுறை நல்லிணக்கம் , ஆட்சிமுறை , மீள்குடியேற்றமும் நிரந்தரத் தீர்வும் என்ற தலையங்கங்களின் கீழ் குறித்த கருத்தாவணம் அமைந்துள்ளது. அதில்ப் போர்க் குற்ற விசாரணை சம்பந்தமாகவோ அதனை வழிநடத்துதல் சம்பந்தமாகவோ எதுவும் குறிப்பிடப்படவில்லை. குதிரைக்குமுன் கரத்தையைப் பூட்டுவது போல் குறித்த ஆவணம் இருக்கின்றது.
ஆகவே இந்நாட்டின் ஜனாதிபதியாகப் பத்து வருடங்கள் கடமையாற்றிய எம் மதிப்பிற்குரிய சந்திரிக்கா அம்மையார் இந்தக் குறையைத் தீர்க்க வழிவகுக்க வேண்டும். சர்வதேச நீதிபதிகளின் பங்கேற்பை உறுதி செய்ய வேண்டும். சர்வதேச வழக்கு நடத்துநர்களை உள்ளேற்க வேண்டும், சர்வதேச போர்க்குற்றங்களை எமது அரசியல் யாப்பின் 13 (6)ம் சரத்தின் கீழ் எமது சட்டவாக்கத்துடன் சேர்த்துக்கொள்ள நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
அவ்வாறு செய்து நீதியான, போர்க்குற்ற விசாரணையை உறுதி செய்யாது வெறும் பொருளாதார நன்மைகளை எமது மக்களுக்கு அளிப்பது அவர்களை விலைக்கு வாங்குவதாக அமையும். எம் மக்கள் ஆண்டுகள் 2000க்கு மேலான பாரம்பரியத்தைக் கொண்டவர்கள். எமது பிரதேசங்களில் பெரும்பான்மையினராக இதுகாறும் வாழ்ந்து வந்தவர்கள். போர்க்குற்றங்கள் யார் இழைத்திருந்தாலும் அவற்றைக் கண்டு பிடித்து நியாயம் வழங்கி நீதியை நிலை நாட்ட வேண்டும் என்ற குறிக்கோள் உடையவர்கள் என்பதை மிகத் தாழ்மையுடன் அம்மையாருக்குத் தெரியப்படுத்திக் கொள்கின்றேன்.
அடுத்து எமது நீர் மாசடைந்து வருவது பற்றிச் சில வார்த்தைகள். நாம் மாணவர்களாக இருந்த காலத்தில் வெளிநாட்டு நிபுணர்கள் சிலரின் குறிப்பை வாசித்ததை தற்போது நினைவுகூருகின்றேன். அந்தக் குறிப்பில் “யாழ்ப்பாணத்தின் நிலை இவ்வாறு தொடருமாயின் இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்குள் குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய ஒரு நிலை ஏற்படும்” என ஐம்பது வருடங்களுக்கு முன் அச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அவர்களின் குறிப்பில் நிலத்தடி நீரை அளவுக்கதிகமாகப் பயன்படுத்தல், நிலத்தடி நீரை பாதிக்கக்கூடிய அளவுக்கதிகமான இரசாயன உரப் பாவிப்பு, மலக்கழிவு குடிநீருடன் கலத்தல் போன்ற பல விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. எனினும் அன்றைய நிலையில் அக்கூற்றுக்களின் தாக்கம் எமக்குப் புரியவில்லை. நிபுணர்களின் அறிக்கை எமக்கு ஒரு வேடிக்கையாகப் பட்டது. இருபதடி ஆழத்திற்கு நிலத்தைக் கிண்டினால் தண்ணீர் ஊற்று பெருக்கெடுக்கின்றது. இதற்கேன் பணம் என எண்ணியதுண்டு. இப்போது தான் அதன் தாக்கம் எம்மால் உணரப்படுகின்றது.
இருபதடி ஆழத்திற்கு நிலத்தைக் கிண்டும் போது இப்போதும் தண்ணீர் கிடைக்கின்றது. ஆனால் அது அருந்துவதற்கு உதவுமா? உதவாதா? எனப் பல வாதப் பிரதிவாதங்கள், பட்டிமன்றங்கள், நீதிமன்ற விசாரணைகள் என எமது ஐயம் விரிந்து கொண்டு செல்வதை நாம் அவதானிக்கின்றோம்.
இப் பகுதி மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து எதுவும் இருக்க முடியாது. ஆனால் சுத்தமான குடிநீரை எவ்வாறு பெற்றுக் கொள்வது என்ற பிரச்சனைக்கு ஓரளவுக்கு தீர்வு காணக்கூடிய வகையிலேயே மழைநீர் சேகரிக்கும் நீர்த்தாங்கிகளை அறிமுகம் செய்து இப்பகுதி மக்களுக்கு சுமார் 371 நீர்த்தாங்கிகளை வடமாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் குறிப்பாக மருதங்கேணி, வேலணை, ஊர்காவற்றுறை, சாவகச்சேரி, கரவெட்டி, பருத்தித்துறை என பல இடங்களில் பரீட்சார்த்த முயற்சியாக தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் நிதி அனுசரணையின் கீழ் இன்று வழங்கப்படுகின்றன.
இத் தாங்கிகளில் கூடுதலான தாங்கிகளை வேலணை மற்றும் ஊர்காவற்;றுறை பகுதியில் உள்ள மக்களே பெற்றுக் கொள்கின்ற காரணத்தினால் இந் நிகழ்வை வேலணை பிரதேச செயலர் அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் ஒழுங்கு செய்திருக்கிறார்கள் என எண்ணுகின்றேன். இவ்வாறான ஒரு கைங்கரியத்திற்கு எமது மக்களின் சார்பில் மனமுவந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இத் தாங்கிகள் மூலமாக சேகரிக்கப்படுகின்ற மழைநீர் சுற்றியுள்ள மக்களின் ஒரு முழு வருடத்திற்குமான குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த நீர் மாசடையாத விதத்தில் சேகரித்து தாங்கியில் சேர்த்து வைப்பதன் மூலம் வருடம் முழுவதற்கும் குடிநீர்த் தேவைக்கு பயன்படுத்தப்பட முடியும். மாரி காலத்தில் முதல், இரண்டாவது மழைக்கு கிடைக்கின்ற நீரில் தாங்கி முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு அதன் பின் தூசி துணுக்குகள் எதுவும் சேராதவாறு காற்று உட்புகாதவாறு அடைக்கப்பட்ட வழிகளினூடாக நீர் உள்ளெடுக்கப்படும் என அறிகின்றேன்.
இத்தாங்கிகள் எண்ணாயிரம் கன மீற்றர் கொள்ளளவைக் கொண்டதாக தயாரிக்கப்பட்டிருப்பதால் இதில் சேகரிக்கப்படும் நீர் இங்கு வசிக்கும் மக்களின் தேவையை நிறைவு செய்யும் என்பதில் ஐயப்பாடு எதுவும் இல்லை. இன்று வழங்கப்படுகின்ற நீர்த்தாங்கிகள் வடபகுதியில் குடியிருக்கக் கூடிய மக்களின் ஒரு மிகச் சொற்ப பகுதியனருக்கே குடிநீர் வசதிகளை வழங்குகின்ற ஒரு நிகழ்வாக அமைகின்ற போதிலும் இதன் திருப்திகரமான சேவை எதிர்வரும் காலங்களில் ஏனைய மக்களுக்கும் இதுபோன்ற அல்லது இதற்கொப்பான திட்டங்களை வகுப்பதற்கு ஏதுவாக அமையும் என கருதுகின்றேன்.
எமது மூதாதையர்கள் இயற்கையை நேசிப்பவர்களாகவும், இயற்கையோடு ஒட்டி வாழ்ந்தவர்களாகவும் இருந்த காரணத்தினால் இயற்கையின் வளங்கள் சற்றும் குன்றிவிடாது அவர்கள் அவற்றைப் பாதுகாத்து வந்தனர். நிலத்தடி நீரைப் பாதுகாப்பதற்கு அவர்கள் எவருடைய வலியுறுத்தலோ அல்லது அறிவுறுத்தலோ அற்ற நிலையில் தமது தரிசு நிலங்கள் மற்றும் வயல் நிலங்கள் என்பவற்றைச் சுற்றி வரம்பு அமைக்கின்ற ஒரு வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். இதன் மூலம் மழை நீரின் பெரும் பகுதி அவரவர் காணிகளுக்குள் தேக்கி வைக்கப்பட்டு அவை நிலத்தடி நீருடன் சேர்ந்து கொள்;வதால் நிலத்தடி நீர் அளவு பாதுகாக்கப்பட்டு வந்தது. அதே போல ஊர்களின் மத்தியில் காணப்பட்ட சிறுசிறு குளங்களுங் காலத்துக்கு காலம் புனரமைக்கப்பட்டு அவற்றின் வரம்புக் கட்டுக்கள் பலப்படுத்தப்பட்டு நீரைத் தேக்கி வைத்ததன் மூலம் கால்நடைகள் நீர் அருந்துவதற்கும் அதே நேரம் நிலத்தடி நீரின் அளவு குன்றாது பாதுகாக்கவும் நடவடிக்கைகள் எடுத்திருந்தார்கள். இவை எல்லாவற்றையும் நாம் இப்போது கைவிட்டு விவசாய நிலங்கள், தரிசு நிலங்கள், குளங்கள் என ஒன்றுமே புனரமைப்புச் செய்யப்படாத நிலையிலேயே எமது நிலத்தடி நீருக்கு இவ்வளவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
எனவே மாசுபட்ட இந்நீரை மீண்;டும் தூயதாக்கி எமது எதிர்கால சந்ததியினர் குடிப்பதற்கும் ஏனைய விவசாயத் தேவைகளுக்கு அவர்கள் பாவிப்பதற்கும் அவர்களுக்கு விட்டுச் செல்ல வேண்டிய பாரிய பொறுப்பு எம் அனைவருக்கும் உண்டென்பதை இச் சந்தர்ப்பத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.
நிலத்தடி நீரை மீள தரமுள்ளதாக மாற்றுவதற்கும், மலக்கழிவுகளையும் ஏனைய குப்பை கூளங்களையும், நிலத்தடி நீருடன் சேர்ந்துவிடாது தடுப்பதற்கும் கழிவுகளை மாற்றியமைப்பதற்கும் பல்வேறு திட்டங்கள் மத்திய அரசினாலும், மாகாண நிர்வாகத்தினாலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவை தற்போது பரீட்சார்த்த நிலையில் உள்ளன என்று நம்புகின்றேன். இவற்றுடன் இணைந்து நாமும் எம் பங்கிற்கு எமது முன்னோர்களின் யுக்திகளைப் பயன்படுத்துவதன் மூலம் நிலத்தடி நீரை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் சீர்செய்துவிடமுடியும் என்று நம்புகின்றேன். அதுவரை காலமும் இது போன்ற தற்காலிக உபகரணங்கள் மூலம் குடிநீரைப் பெறுவதற்கு நாம் முயற்சிகளை எடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.
கௌரவ சந்திரிக்கா அம்மையார் அவர்களே! நீங்கள் இப்பகுதி மக்களின் துன்ப துயரங்களை நேரில் கண்டு உணர்ந்தவர் என்ற வகையில் இவர்களின் துன்ப துயரங்களை துடைப்பதற்கு தங்களின் மேலான அரசியல் பலத்தினையும் செல்வாக்கினையும் பிரயோகித்து கடந்த மூன்று தசாப்தங்களாக இடம்பெயர்ந்து முகாம்களில் எதுவித அடிப்படை வசதிகளும் இன்றி துன்பச் சூழலில் வாழ்கின்ற எமது மக்களை மீண்டும் அவர்களின் சொந்த நிலங்களில் குடியமர்த்தவும், அவர்களின் விவசாய நிலங்களை மீளக் கையளிப்பதற்கும், அவர்களின் அன்றாட வாழ்க்கை இயல்பு நிலையை எய்தக்கூடிய வகையில் இராணுவ பிரசன்னத்தை குறைப்பதற்கும் முயலவேண்டும் என்று அன்புடன் கூறி வைக்கின்றேன்.
அத்துடன் சந்தேகத்தின் பேரில் அரசியல் கைதிகளாக தடுத்துவைக்கப்பட்டு சிறைக்கூடங்களில் வாடுகின்ற எமது இளைஞர் யுவதிகளை விடுவிப்பதற்கும், இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு காணாமல் போயிருப்பதாகக் கருதப்படும் போராளிகள் தொடர்பான விபரங்களை கண்டறிவதற்கும் ஒரு தாயார் என்ற விதத்தில் முயற்சிப்பீர்கள் என எமது மக்கள் உறுதியாக நம்புகின்றார்கள். அவர்களின் நம்பிக்கையை வெல்லக்கூடிய வகையில் நீங்கள் தொடர்ந்தும் எம் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
Spread the love