குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்
யாழ். அச்சுவேலி பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் காணமல் போனமை தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட 16 இராணுவத்தினரையும் எதிர்வரும் 24ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.சதிஸ்கரன் உத்தரவு இட்டுள்ளார்.
அச்சுவேலி பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் கடந்த 1998ம் ஆண்டு ஜனவரி மாதம் 20ம் திகதி அச்செழு இராணுவத்தினரால் பிடித்து செல்லப்பட்ட பின்னர் காணாமல் போயிருந்தனர்.
அது தொடர்பில் யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றில், குறித்த வழக்கு நடைபெற்று வந்த வேளை கடந்த மாதம் 27ம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு 16 இராணுவத்தினருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டு இருந்தது.
அந்நிலையில் அன்றைய தினம் அழைப்பாணை விடுக்கப்பட்ட 16 இராணுவத்தினரில் ஐந்து பேரே மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.
அதனை அடுத்து மன்றில் முன்னிலையான ஐந்து பேரையும் இன்றைய தினம் வரையில் (10ம் திகதி ) விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவு இட்டதுடன், மன்றில் முன்னிளையகாத 11 இராணுவத்தினருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்து இருந்தார்.
இந்நிலையில் இன்றைய தினம் (10ம் திகதி ) குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது , விளக்கமறியலில் வைக்கபட்டு இருந்த ஐந்து இராணுவத்தினரும் ,மன்றில் முற்படுத்தப்பட்டனர்.
அதேவேளை பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 11 இராணுவத்தினரும் சட்டத்தரணிகள் ஊடாக மன்றில் முன்னிலையானார்கள்.
அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையை அடுத்து 16 இராணுவத்தினரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவு இட்டு இருந்தார்.
இராணுவத்தினரை பிணையில் விடுதலை செய்ய வேண்டும் என கோரி ஆறு சட்டத்தரணிகள் மன்றில் முன்னிலையாகி இருந்தனர். என்பது குறிப்பிடத்தக்கது