167
குளோபல் தமிழ் செய்திகளுக்காக பார்த்தீபன்
இலங்கை அரசின் இன ஒடுக்குமுறைக்கு எதிராக நடந்த ஈழத்து விடுதலைப் போராட்டத்திற்கான தீர்வு முயற்சிகளுக்கு உதவுகிறோம் என்று முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் இந்திய தன்னலமாக செயற்பட்டது என்பதற்கும் இனப்பிரச்சினைக்கு உகந்த முறையில் தீர்வு காணத் தவறியது என்பதற்கும் 1987இல் நடைபெற்ற பவான் இராணுவ நடவடிக்கை மிகச் சிறந்த உதாரணமாக நினைவுகூறத்தக்கது. இந்திய அரசு தன் நலன்களுக்கு ஏற்பவும் ஈழம் மற்றும் தமிழக மக்களின் நலன்களுக்கு மாறாகவும் இலங்கை அரசுக்கு சாதகமாகவும் காய்களை நகர்த்தி வருவதுடன் வடக்கில் ஆதிக்கம் கொள்வதை அன்று முதல் செயற்படுத்தியுள்ளது என்பதற்கும் இது உதாரணம்.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வாக முன்வைக்கப்பட்ட 13ஆவது திருத்தம் என்ற யாப்புத் திருத்தம் 1987 இலங்கை இந்திய உடன்படிக்கை பிரகாரம் கொண்டுவரப்பட்டது. மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிரும் முகமாக இந்த திருத்தம் கொண்டுவரப்பட்டாலும் குறித்த திருத்தம் குறைந்த அளவிலேயே நடைமுறைப்படுத்தப்பட்டது. எவ்வாறெனினும் இலங்கையில் நிலவும் இன அழிப்பு மற்றும் ஒடுக்குமுறைச் செயற்பாடுகளை தடுத்து நிறுத்தும் வகையிலோ, தமிழ் மக்களின் தனித்துவமான ஆட்சிமுறை குறித்த கோரிக்கையோ உள்ளடக்கப்படாமையினால் குறித்த ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் எதிர்த்தனர். இதனால் தமிழ் மக்களும் இதில் நம்பிக்கை இழந்தனர்.
இன முரண்பாட்டை, போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் தீர்வொன்றை ஏற்படுத்த வேண்டிய நிலையில் பலவந்தமாக தீர்வொன்றை திணித்து, அதனை நடைமுறைப்படுத்த போரை இந்தியா தேர்வு செய்தது. ஜூலை 29ஆம் திகதி இலங்கைக்கும் இந்தியாவுக்கும் ஒப்பந்தம் நடந்தது. சில மாதங்களிலேயே விடுதலைப் புலிகளுக்கும் இந்தியப் படைகளுக்கும் இடையே போர் வெடித்தது. மிகப் பெரிய அளவில் இந்தியப் படைகள் பவான் இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் போரைத் தொடங்கிய நாளே இன்றாகும். இந்தப் போர் நடவடிக்கையே இலங்கை, இந்திய, ஈழவிடுதலை மட்டங்களில் பெரும் தாக்கங்களை பிற்காலத்தில் உருவாக்கும் வகையிலும் அமைந்தது.
இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் சரத்துகளை நடைமுறைப் படுத்தவும் யாழ்ப்பாணத்தை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கவும் விடுதலைப் புலிகளிடம் உள்ள ஆயுதங்களைக் கைப்பற்றவுமே இந்தப் போர் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக இந்திய இராணுவம் அறிவித்தது. இந்திய அரசின் அறிவித்தலின்படி, அரசியல் தீர்மானத்தின்படி இப் போர் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. பலாலி, காங்கேசன்துறை, பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணக் கோட்டை ஆகிய இடங்களில் சண்டை மூண்டது.
அத்துடன் விமானத் தரையிறக்கம் மற்றும் கடல் வழித் தரையிறக்கம் போன்ற பன் முனைகளிலும் தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மூன்று வாரமாக நடந்த சண்டையின் பின்னர் யாழ் குடாநாட்டை இந்தியப் படைகள் கைப்பற்றின. விடுதலைப் புலிகளிடமிருந்து யாழ் குடா நாட்டைக் கைப்பற்ற இலங்கை இராணுவம் 3 ஆண்டுகள் போரிட்டது. முடியாத நிலையில் அமைதி காக்க வந்ததாக கூறிய இந்திய இராணுவம் போர் செய்து யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியது. அமைதிப்படைகளின் முகத்திரை கிழிந்த நாட்கள் இவை.
யாழ்ப்பாணமே போர்க்கோலம் பூண்டது. இந்திய இராணுவம் கவச தாங்கிகள், உலங்கு வானுர்திகள், செறிவான ஆட்டிலரி என்பற்றின் துணைக் கொண்டு முன்னேறினர். இந் நடவடிக்கையில் இந்திய வான்படையினதும், இந்திய கடற்படையினரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இந்திய கிழக்கு கட்டளைப் பீடமும், கரைப் பாதுகாப்புப் படையினரும் இணைந்து விடுதலைப் புலிகளுக்குப் போர்க்கருவி, மருத்துவ உதவிகள் என்பன கிடைக்காதவண்ணம் வடக்கே கடலில் 300 கி.மீ. நீளமான முற்றுகை வேலியை அமைத்திருந்தன.
இந்நேரத்தில் இந்திய சிறப்பு ஈரூடக படையணியினரும் (MARCOS) முதலாவதாகச் செயற்படத் தொடங்கியிருந்தனர். இவர்களோடு இந்திய இராணுவத்தினரும் இணைந்து யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் கடற்கறை ரெகிகளை வழங்கியிருந்தன. அக்டோபர் 21 1987 சிறப்புப் படையணியினர் புலிகளின் குருநகர்த் தளத்தை ஈருடகத் தாக்குதல் மூலம் தாக்கி அழித்தனர். இந்தப் போர் நடவடிக்கையில் இந்தியப் படைகள் 600பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. புலிகள் தரப்பிலும் இழப்புக்கள் ஏற்பட்டன.
இந்திய இராணுவத்தினர் தமிழ்ப் பொதுமக்களை கண்ட கண்ட இடத்தில் சுட்டுக் கொன்றனர். இலங்கை வரலாற்றில் பல்வேறு ஊரடங்குச் சட்டங்களால் இருண்ட வாழ்வில் தவித்த ஈழத் தமிழ் மக்களை மிக நீண்ட நாட்கள் ஊரடங்கில் தள்ளியவர்கள் இந்தியப் படைகளே. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் நோக்கில் 35 நாட்களுக்கு ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தினர். ஊரடங்கு நாட்களில் வீட்டை விட்டு வெளியில் வந்த அனைத்து தமிழ் மக்களும் இந்தியப் படைகளால் சுட்டுக்கொன்றழிக்கப்பட்டனர்.
வடகிழக்கு மாகாண சபைத் தேர்தலை புறக்கணிக்குமாறு விடுதலைப் புலிகள் இயக்கம் கூறியதை அடுத்து 1987 ஜூன் மாதம் வடமராட்சியில் தலைவர் பிரபாகரனை இலக்கு வைத்து செக்மேட் இராணுவ நடவடிக்கையை மேற் கொண்ட இந்தியப் படைகள் முழு யாழ்ப்பாணத்தையும் கைப்பற்ற பவான் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் தமிழ் மக்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டன. மக்கள் பொதுஇடங்களில் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றன.
யாழ் மருத்துவமனை, வீடுகள், சந்திகள் எனப் பல இடங்களிலும் இந்திய இராணுவம் புகுந்து கோரத்தாண்டவம் ஆடியது. அக்டோபர் மாதமே இந்தியப் படைகளின் கோரத் தாண்டவங்கள் நிகழ்ந்த மாதமாகும். ஈழத் தமிழர்களின் வரலாற்றில் கறைபடிந்த மாதமாக அக்டோபர் மாதம் ஆக்கப்பட்டது. அமைதி வரும், தீர்வு வரும் என்று காத்திருந்த மக்களுக்கு போரும், கொலைகளும் அழிப்பும், பதுங்குகுழி வாழ்வும் பரிதவிப்பும் வழங்கப்பட்டன.
இலங்கை அரசு தமிழரை அழிக்கிறது என்று போராடி நிலையில் தீர்வு காண வந்ததாக சொன்னவர்களே யுத்தம் செய்த கொடிய நாட்கள். அமைதியை ஏற்படுத்த வந்ததாக சொன்னவர்களே தமிழர்களை அழித்தனர். இலங்கை அரசின் போர் வெறி எண்ணங்களையும் இன அழிப்பு கொள்கைகளையும் நடைமுறைப்படுத்தின இந்தியப் படைகள் . தமிழ் மக்களையும், விடுதலைப் புலிகளையும் மிகவும் சீண்டிய பவான் நடவடிக்கை இந்தியப் படைகளுக்கு, அரசுக்கு எதிராக தமிழர்களை திரளச் செய்தது. வரலாற்றில் மிகவும் தவறான அரசியல் முடிவுகளினால் மேற்கொள்ளப்பட்ட பவான் நடவடிக்கை முள்ளிவாய்க்கால் என்ற கூட்டு இனப்படுகொலைக்கும் வித்திட்டது எனலாம்.
குளோபல் தமிழ் செய்திகளுக்காக பார்த்தீபன்
Spread the love