குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடரைக் கைப்பற்றியுள்ளது.
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 321 ஓட்டங்களினால் நியூசலாந்தை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டித் தொடரை மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வைட்வொஸ் முறையில் வெற்றியீட்டியுள்ளது. டெஸ்ட் கிரிக்கட் போட்டித் தொடரில் அபார திறமைகளை வெளிப்படுத்திய ரவிசந்திரன் அஸ்வின் போட்டியின் நாயகனாகவும், போட்டித் தொடரின் நாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மூன்றாம் டெஸ்ட் போட்டியின் ஸ்கோர் விபரம்
நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கட்டுகளை இழந்து 557 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டிருந்த நிலையில் இன்னிங்ஸை இடைநிறுத்திக் கொண்டது. இதில் விராட் கோலி 211 ஓட்டங்களையும் ரஹானே 188 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுகளையும் இழந்து 299 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை ஆண்டிய இந்திய அணி 3 விக்கட்டுகளை இழந்து 216 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டிருந்த போது இன்னிங்ஸை இடைநிறுத்திக் கொண்டு, நியுசிலாந்திற்கு 475 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்தது.
இந்த வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 153 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட போது சகல விக்கட்டுகளையும் இழந்தது. பந்து வீச்சில் அஸ்வின் முதல் இன்னி;ங்ஸில் 6 விக்கட்டுகளையும், இரண்டாம் இன்னிங்ஸில் 7 விக்கட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.