உடல்நலமின்றி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வகித்துவரும் பொறுப்புகள் அனைத்தும் நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அமைச்சரவைக் கூட்டங்களை ஓ. பன்னீர்செல்வமே தலைமை தாங்கி நடத்துவார் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறிவுரையின் பேரிலேயே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. முதலமைச்சராக ஜெயலலிதாவே தொடர்வார் என்றும், அவர் நலம் பெற்று பணிகளைக் கவனிக்க ஆரம்பிக்கும்வரை இந்த ஏற்பாடு நடைமுறையில் இருக்குமென்றும் ஆளுநர் மாளிகையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா, உள்துறை, காவல்துறை, பொது நிர்வாகம் உள்ளிட்ட துறைகளைத் தன்வசம் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.