Home இலங்கை எனது கட்சி தவறு விட்டதாகவோ, அதற்கு மன்னிப்புக் கோருவதாகவோ நான் எக்கட்டத்திலும் கூறவில்லை – சி. தவராசா

எனது கட்சி தவறு விட்டதாகவோ, அதற்கு மன்னிப்புக் கோருவதாகவோ நான் எக்கட்டத்திலும் கூறவில்லை – சி. தவராசா

by admin

 

மு.திருநாவுக்கரசுவின் நூல் வெளியீட்டு விழாவில் 01.10.2016 (சனிக்கிழமைஅன்று உரையாற்றும் போது ‘தவராசா தனது கட்சி செய்த தவறுதல்களிற்காக மன்னிப்புக் கேட்டார்’ என்ற வாசகம் உள்ளடங்கலாக ‘ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் தலைவர்களும் தமிழ் மக்களும்‘ என்ற தலைப்பில் நிலாந்தன் எழுதிய கட்டுரை தங்கள் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.

நான் அந்நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போது எனது கட்சியைப் பற்றியோ (ஈ.பி.டி.பி) அது தவறு விட்டதாகவோ அல்லது அதற்கு மன்னிப்புக் கோருவதாகவோ எக்கட்டத்திலும் குறிப்பிடவில்லை. எனது உரையின் முழுக் காணொலியையும்,

https://www.youtube.com/watch?v=-_apy1NhWKQ&feature=youtu.be என்ற இணைய இணைப்பில் அல்லது Thavarajah Sinnadurai என்ற முகநூலில் 05.10.2016 @ 6.30 (https://www.facebook.com/sinthava/videos/1767550246825917/) என்ற பதிவில் பார்வையிடலாம்.

வாசகர்களின் நலன் கருதி தவறுகள் விட்டது தொடர்பாக (ஈ.பி.டி.பி அல்ல)  நான் எனது உரையில் குறிப்பிட்டவற்றைக் கீழே தருகின்றேன்.

‘எங்களிற்குக் கிடைத்த சந்தர்ப்பங்களைக் நாங்கள் சரியாகப் பாவித்தோமா என்பதனைக் கூட நாங்கள் பின் நோக்கிப் பார்க்க வேண்டும். ஆசிரியர் அதைத் தவற விட்டு விட்டார் என்பதே எனது தாழ்மையான எண்ணம். இன்று நாங்கள் எதிர்பார்க்கின்ற அரசியலமைப்பு சீர்திருத்தத்திலும் அல்லது மாற்றத்திலும் பார்க்க திறமையான ஓர் திறம்பட்ட ஓர் அரசியலமைப்பு எங்களிற்கு 2000 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கிடைப்பதற்கான வாய்ப்பு எங்களிற்கு கிடைத்தது. அன்றைய யு. என். பி. அரசாங்கம் சொன்ன காரணம் என்ன? இன்றைய சூழலில் நீங்கள் இந்த அரசியலமைப்பைக் கொண்டு வந்தால் எம்மால் நடைமுறைப்படுத்த முடியாது, ஆதலால் நாங்கள் அதை எதிர்க்கின்றோம் என்று. கிடைத்த வாய்ப்புக்களை நாம் சரியாகப் பயன்படுத்தினோமா? இன்டோலங்கா,  இன்று இராணுவத்தை யாழிலிருந்து வெளியேற்றும்படி ஒவ்வொரு தேர்தல் விஞ்ஞாபனத்திலும் கூறி நாங்கள் மக்கள் ஆதரவைப் பெற்று வருகின்றோம். ஆனால் இன்டோலங்கா, இலங்கை – இந்திய உடன்படிக்கையை எடுத்துப்பாருங்கள். அந்தக் குறிப்பிட்ட திகதியில் இருந்து “From such and such date the Sri Lankan Forces shall be confined to the barracks”. இலங்கை அரச படைகள் barracks – barracks என்றால் – முகாம்களிற்குள் கட்டுப்பட்டிருக்க வேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கின்றது. ஆனால் அதை நாங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்த விடவில்லை. ஆதலினால், எங்கள் மீதும் நாங்கள் எமது பார்வையைத் திருப்ப வேண்டும். சிங்களவர்கள், இந்தியர்கள் என்ற சிங்கள எதிர்ப்புப் பின்னணியில் மட்டும், புவிசார் அரசியலில் மட்டும், எமது கண்ணோட்டத்தைச் செலுத்தாமல் நாங்களும் தவறுகள் விட்டிருக்கின்றோம், அந்தத் தவறுகளையும் பின்நோக்கிப் பார்க்க வேண்டும். நாங்கள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சரியாக சந்தர்ப்பங்களைப் பாவித்திருக்கின்றோமா? இன்று நிலை நிறுத்தப்பட்டிருக்கின்ற இந்தச் சிறிய அதிகாரம் கொண்ட மாகாண சபையைக் கூட நாங்கள் சரியாகப் பயன்படுத்துகின்றோமா? ஆதலால் கிடைத்த அரசியலாக இருக்கலாம், அது மாகாண சபையாக இருக்கலாம், எமக்குக் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை, இன்றைக்குச் சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது, அந்தச் சந்தர்ப்பத்தை நாங்கள் பாவித்து, எந்த விடயத்திலும் ஓர் பரிணாம வளர்ச்சி உண்டு. மனித இனமே ஓர் பரிணாம வளர்ச்சியின் ஒரு கட்டத்தில் இன்று இருக்கின்றான். மனிதனே ஹோமோ சேப்பியன்ஸ் என்று சொல்லப்படுகின்ற பரிணாம வளர்ச்சியின் ஓர் அம்சம். வரலாறுகளும் ஓர் பரிணாம வளர்ச்சி. இந்தப் பரிணாம வளர்ச்சியில் நாங்கள் எங்களிற்குக் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு எங்களை மேலும் செழுமைப்படுத்தி மேலே செல்லக்கூடிய ஓர் ஆக்க பூர்வமான செயற்பாடுகளில் நாங்கள் இறங்க வேண்டும்.’

இடையில் குறுக்கீடு. அவர்கள்  ஒலிவாங்கியில் கதைக்காததால்; பேச்சாளரிற்கு அவர்கள் என்ன கூறுகின்றார்கள் என்பது கேட்கவில்லை குறுக்கிடுகின்றார்கள் என்பது மட்டுமே தெரியும்.

‘நாங்கள் செய்கின்ற எல்லாவற்றையும் மூடிமறைத்து ….. (உரை தெளிவில்லை) நாங்கள் செய்த பிழைகள், அரசியல் ரீதியான தவறுகளை நாங்கள் ஏற்று…. ஏன் கை தட்டுகின்றீர்கள்? ….. (உரை தெளிவில்லை) ஜனநாயகமல்ல. மாற்றுக் கருத்தையும் கேட்டு ஏற்கக் கூடிய ஆற்றல் எமக்கு வேண்டும். உண்மையான கருத்துக்களைக் கேட்பதற்கு வலிமை எமக்கு வேண்டும்.  ஏன் எமக்கு கஸ்ரமாக இருக்கின்றது?’

இவ்வுரையை முற்றாகக் கேட்டவர்களிற்குப் புரியும் நான் “நாங்கள்” என்று எனது உரையில் தொடர்ச்சியாகக் கூறியது தமிழ் மக்களையே அன்றி ஈ. .பி டி. பி. கட்சியை அன்று. ஈ. பி. டி. பி. தொடர்பாக நான் எனது உரையில் எதுவும் குறிப்பிடவில்லை. நான் குறிப்பிட்டது தமிழ் மக்கள் வரலாற்றுத் தவறு இழைத்துள்ளனர். தொடர்ந்தும் கிடைக்கும் சந்தர்ப்பங்களை நழுவவிட்டு வரலாற்றுத் தவறுகள் இழைக்காமல் திருந்த வேண்டுமென்பதனையே.

உரையில் எங்கேயாவது “எனது கட்சி” ,  “ஈ. பி. டி. பி.” அல்லது “மன்னிப்பு கோருகின்றேன்” என்ற சொற்களை நான் பாவித்ததாக அக் கட்டுரையை எழுதியவர் நிரூபிப்பாராயின் நான் எனது அரசியல் செயற்பாடுகளில் இருந்து முற்றாக விலகி இருக்க தயாராக உள்ளேன் என்பதனை இவ் ஊடகங்கள் வாயிலாக கூறிவைக்க விரும்புகின்றேன்.

சி. தவராசா

எதிர்கட்சி தலைவர்

வடக்கு மாகாண சபை

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More