தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்
இரவு நேர கேளிக்கை விடுதி சம்பவம் தொடர்பிலான குற்றத்தை ஜனாதிபதி பாதுகாப்பப் பிரிவினர் ஏற்றுக்கொள்ள உள்ளதாக ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதியின் புதல்வர் தஹாம் சிறிசேன உள்ளிட்ட தரப்பினர் அண்மையில் கொழும்பில் அமைந்துள்ள இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு இந்த தாக்குதல் சம்பவம் குறித்த சீ.சீ.ரீ.வி கமராக காட்சிகளும் வெளியிடப்பட்டிருந்தன.
இந்த சம்பவம் தொடர்பிலான பொறுப்பினை விரைவில் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் சில உத்தியோகத்தர்கள் ஏற்றக்கொள்ள உள்ளதாகவும் அவர்கள் விரைவில் காவல் நிலையத்தில் சரணடைய உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கேளிக்கை விடுதியின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் நடவடிக்கை காரணமாக ஆத்திரமடைந்து தாக்கியதாக குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கூற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்துடன் தஹாம் சிறிசேனவிற்கு தொடர்பு கிடையாது என அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் குற்றம் சுமத்தியுள்ளது. தஹாம் சிறிசேனவிற்கு பாதுகாப்பு வழங்கி வந்த ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு உத்தியோகத்தர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் எனவும் இந்த சம்பவத்துடன் ஜனாதிபதியின் புதல்வருக்கு தொடர்பு கிடையாது என கேளிக்கை விடுதியின் முகாமையாளர் கூறிய போதிலும், முகாமையாளர் சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் அந்த இடத்தில் பிரசன்னமாகியிருக்கவில்லை என குறித்த ஆங்கில ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக பிரதி ஊடக அமைச்சர் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.
1 comment
<<>>
நல்லாட்சியிலும் காட்சிகள் மாறுகின்றன? இச் சம்பவமானது, பல கோணங்களிலும் ரகர் வீரர் தாஜூடீனின் கொலை சம்பவத்தை ஒத்ததாக இருக்கின்றது? அன்றைய ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர் மற்றும் போலீஸ் உத்தியோகத்தர்கள் உட்படச் சில பாதுகாப்பு அதிகாரிகளின் தலையீட்டுக்கு, ‘திரு. மகிந்த ராஜபக்ஷவின் பிள்ளைகளின் நடவடிக்கைகள்’, துர்ப்பாக்கிய நிலைமை காரணமாக அமைந்தமையை மறுக்க முடியாது!
இந்நாள் ஜனாதிபதியின் மகன் இத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பு பட்டிருப்பதனை, ‘பாதுகாப்பு வீரர்கள் பொறுப்பேற்பதென்பதுடன்’, உறுதிப் படுத்தப்படுகின்றது? அப்பாவிப் பாதுகாப்புத் தரப்பினர் தண்டிக்கப்படுவதென்பது, ‘திரு. மகிந்த ராஜபக்ஷவின் வீழ்ச்சிக்கு அவரே காரணமாகவிருந்தார்’, என்ற படிப்பினையை மறந்தமையையே காட்டுகின்றது! தனது மகனின் தப்புக்குத் துணை(?) போகும் ஜனாதிபதிக்கு, எதிர்காலத்தில் பல தப்புக்களுக்கும், முறைகேடுகளுக்கு துணை போக வேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்குமென்பதை மறுக்க முடியாது?
ஆக, ‘திரு. ரணில் விக்கிரமசிங்கவுக்கு இவை வரப்பிரசாதமாக அமையப் போகின்றன’, என்பதே
உண்மை! ஆட்சியாளர்களுக்கு, ‘தறுதலைப் பிள்ளைகள்’, இல்லாதிருப்பதும் வரப்பிரசாதம் போலும்? மனுநீதிகண்ட சோழ மன்னனை ஜனாதிபதி நினைவுறுத்திப் பார்ப்பாரானால், தீர்வென்பது வெகு தொலைவில் இல்லை? சிந்திப்பாரா?