குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
வழக்குகளை துரிதப்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள விசேட நீதிமன்றங்கள் மீது தமிழ் அரசியல் கைதிகள் விரக்தியுற்றுள்ள நிலையில், தமது விரக்திக்கான காரணங்களை தெளிவுப்படுத்தி ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு நேற்று கடிதம் அனுப்பியுள்ளனர்.
31 பேரின் கையொப்பத்தோடு சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தினூடாக அனுப்பட்டுள்ள மேற்படி கடிதத்தின் பிரதி எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி., சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சுவாமிநாதன், அரச கருமமொழிகள், தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன், நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக் ஷ, பிரதமர் நீதியரசர் ஸ்ரீபவன், சட்ட உதவி ஆணைக்குழுவின் செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது
சாதாரண நீதிமன்றங்களைப்போன்றே விசேட நீதிமன்றமும் வழக்கு விசாரணைகளை இழுத்தடிக்கின்றது. குறிப்பாக மீண்டும், மீண்டும் தவணைகளே வழங்கப்படுகின்றனவே தவிர வழக்கு முடிவுக்கு வருவதாக இல்லை. அத்துடன் , அரச தரப்பு சாட்சியங்கள் உண்மைக்கு புறம்பானவையாக இருக்கின்றன. இவை தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்படி பல விடயங்களாலேயே சிறப்பு நீதிமன்றம்மீத தமக்கு விரக்தியேற்பட்டுள்ளது என விரக்திக்கான காரணத்தை கடிதத்தில் தமிழ் அரசியல் கைதிகள் தெளிவுப்படுத்தியுள்ளனர் என்று அரசியல் கைதிகளை விடுதலை செயவதற்கான தேசிய அமைப்பு தெரிவித்தது.
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு நல்லாட்சி அரசு காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். விசேட நீதிமன்றங்கள் ஆமைவேகத்தில் செயற்படாது துரிதமாக இயங்க வேண்டும். அவ்வாறு இல்லையேல், விரக்தியுற்றிருப்பவர்கள் நீதிமன்ற நடவிக்கையைப் பகிஷ்கரிக்ககூடும் என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.