குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்புப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஸி டயஸ் விக்ரமசிங்க தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 19ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களில் ஒன்றான இந்தக் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக தில்ருக்ஸி கடமையாற்றி வருகின்றார். அண்மைக் காலமாக நிறுவனம் தொடர்பில் சில தரப்பினர் வெளியிட்டு வரும் கருத்துக்களால் அதிருப்தி அடைந்துள்ள தில்ருக்ஸி கடுமையான நெருக்கடிகளிலும் சிறந்த முறையில் சேவையாற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், கடற்படையின் முன்னாள் தளபதிகள் நீதிமன்றிற்கு அழைக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் கடுமையான விமர்சனங்களை லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு மீது வெளியிட்டிருந்த நிலையில் தில்ருக்ஸி டயஸ் விக்ரமசிங்க பெரும்பாலும் இன்னும் சில தினங்களில் தனது பதவியை ராஜினாமா செய்வார் என அரசாங்க உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில தரப்பினர் நிறுவனம் பற்றி பிழையான அர்த்தப்படுத்தல்களை மேற்கொள்வதாக அதிருப்தி வெளியிட்டுள்ள தில்ருக்ஸி கடுமையான சவால்களுக்கு மத்தியில் லஞ்ச ஊழல் மோசடிகளை தடுத்து வரும் நிலையில் இவ்வாறான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதனால், பதவி விலகுவதாக அரசாங்கத்தின் அதி முக்கியமான தலைவர்களில் ஒருவரிடம் அறிவித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது