171
இலங்கை முழுவதையும் கெடும் வரட்சி வாட்டி வதைக்கிறது. வரட்சி நீடித்தால் மின்சார விநியோகம் தடைப்படுதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வட கிழக்குப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடுமையான வரட்சி காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டில் வடக்கில் ஏற்பட்ட கடுமையான வரட்சி போன்ற தொரு நிலமையே மீண்டும் வடக்கு மற்றும் கிழக்கில் ஏற்பட்டுள்ளது. இந்த வரட்சி எதுவரை தொடரும் என்பதே மக்கள் அச்சம்?
வடக்கு மாகாணத்தில் வரட்சி காரணமாக மக்கள் குடிநீருக்குப் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் முதலிய மாவட்டங்கள் இயல்பிலேயே வெப்பம் கூடிய மாவட்டங்கள். இந்த நிலையில் வரட்சி காரணமாக வெப்ப அதிகரிப்பால் பலரும் நீர் வரட்சியுடன் தொடர்புடைய நோய்களுக்கு ஆளாகியுள்ளனர். இதேவேளை குளங்கள் வற்றி வறண்ட நிலையில் காணப்படுகின்றன. கால்நடைகள் தண்ணீர் இன்றி தாகத்தில் தவிப்பதுடன் புற்தரைகள் கருகிய நிலையில் அவை பசியில் அலைகின்றன.
கிளிநொச்சிக் குளத்திலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குளத்தின் நீர் அடிநிலைக்குச் சென்றுள்ளது. இன்னும் சில நாட்கள் வரட்சி நீடித்தால் குளம் முற்றாக வற்றிவிடும் அபாயம் உள்ளது. மழையின்றி நிலம் வறண்டுபோனதன் காரணமாக நீண்ட காலத்து பயன்தரு மரங்கள் பட்டுப் போயுள்ளன. வட்டக்கச்சி போன்ற பகுதிகளில் தென்னை மரங்கள் வாடிக் காணப்படுகின்றன. அக்கராயன், அமைதிபுரம், பொன்னகர், சாந்தபுரம், மணியங்குளம், எட்டாங்கட்டை போன்ற பகுதிகள் வரட்சியில் துடிக்கின்றன.
வரட்சி காரணமாக பண்ணையாளர்களின் பால் விற்பனை பாதித்துள்ளது. மாடுகளுக்கு ஒழுங்கான வகையில் நீர் மற்றும் புல் ஆகாரமின்றி அவற்றின் பால் உற்பத்தி வீழச்சியடைந்துள்ளது. இதன் காரணமாக அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மழை பிந்தியதன் காரணமாக வடகிழக்கில் பெரும்போகப் பயிர்ச் செய்கை பிந்தியுள்ளது. இதுவரையில் விதைப்பு நடவடிக்கைகள் இடம்பெறவில்லை. அத்துடன் அரிசி விலையும் அதிகரித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் வடக்கில் அக்டோர் மாத ஆரம்பத்திலேயே மழை அதிகரித்தது. இதேவேளை இந்த வருடம் சித்திரை மாதத்தில் வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்ட போதும் தற்போது கிணறுகள், வாய்க்கால்கள், குளங்கள் வற்றி வறண்டு காணப்படுகின்றன. இதேவேளை கடுமையான வறட்சியின் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று கடும் மழை பெய்துள்ளது. கடுமையான வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்கள் மழை வீழ்ச்சி கண்டு மகிழந்தனர்.
வடக்கில் சில பகுதியில் கடந்த மூன்று நாட்களாக மழை பெய்யும் அறிகுறி இலேசாக தென்ம்பட்டும் மழை பெய்யவில்லை. இதனைக் கண்டு மக்கள் ஏமாற்றமுற்றனர். கிழக்கின் ஏனைய பகுதிகளிலும் வடக்கிலும் மழை வீழ்ச்சி தாமதம் ஆகும் நிலையில் மனிதர்கள் மற்றும் கால்நடை முதலிய உயிரினங்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுவதுடன் விவசாய உற்பத்திகள் மற்றும் மின்சாரம் முதலிய விநியோகங்களிலும் பாதிப்புக்கள் ஏற்படும் என அஞ்சப்படுகிறது. எப்போது வானம் மழையைப் பொழியும் என்று காத்திருக்கின்றனர் மக்கள். எப்போது முடியும் இந்தக் கோடையின் ஆட்சி?
Spread the love