குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
சர்ச்சைக்குரிய அவன்ட் கார்ட் நிறுவனத்தின் ஆலோசகர்களாக கடமையாற்றிய காரணத்தினால்தான் முன்னாள் கடற்படைத் தளபதிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதாக ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் கடற்படைத்தளபதிகள் கடற்படையில் கடமையாற்றிய காரணத்திற்காக அவர்கள் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு அழைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை எனவும் கடற்படைத் தளபதிகள் ஓய்வு பெற்றுக்கொண்டதன் பின்னர் குறித்த நிறுவனத்தின் ஆலோசகர்களாக கடமையாற்றியிருந்தனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடற்படைத் தளபதிகள் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் அதிருப்தி வெளியிட்டிருந்தமைக்கு பதிலளிக்கும் வகையில் வசந்த சமரசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு, குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு ஆகியனவற்றின் சுயாதீனத்தன்மைக்கு களங்கம் ஏற்படும்வகையில் ஜனாதிபதி கருத்து வெளியிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த அரசாங்க ஆட்சிக்காலத்தின் போது இடம்பெற்ற ஊழல் மோசடிகள் , தற்போதைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் மோசடிகள் தொடர்பிலும் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி இதுவரையில் கேட்டதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.