குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சம்சுங்க் கெலக்ஸி நோட் 7 ரக செல்லிடப்பேசியில் தீப்பிடிப்பதாக தகவல் பரவி உள்ளதனைத் தொடர்ந்து சம்சுங்க் கெலக்ஸி நோட் 7 ரக செல்லிடப்பேசிகளை விமானங்களில் எடுத்து செல்ல அமெரிக்கா தடை விதித்துள்ளது. குறித்த சம்சுங்க் கெலக்ஸி நோட் 7 ரக செல்லிடப்பேசி படுக்கை அறையில் தானாக தீப்பிடித்து எரிந்ததாக அமெரிக்காவின் கொண்டக்கியை சேர்ந்த ஒருவர் முறையிட்டுள்ளார். மேலும் இன்னுமொருவர் விமான பயணத்தின் போது செல்லிடப்பேசியில் இருந்து புகை வந்ததாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்ததனைத் தொடர்ந்து அமெரிக்க போக்குவரத்து துறை அத்தகைய செல்லிடப்பேசிகளை பயணிகள் விமானங்களிலோ அல்லது அவர்களது பொதிகளிலோ எடுத்து செல்லக்கூடாது என ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது இன்று முதல் அமுலுக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. சம்சுங்க் கெலக்ஸி நோட் 7 ரக செல்லிடப்பேசிகளை உற்பத்தி செய்வதை இந்த வாரம் முதல் நிரந்தரமாக நிறுத்துவதாக சம்சுங்க் நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.