குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் வெளியிட்ட கருத்தினால் ஆளும் கட்சிக்குள் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவினர், நிதி க் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் மற்றும் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு ஆகியன தொடர்பில் அண்மையில் ஜனாதிபதி கருத்து வெளியிட்டிருந்தார். இந்த கருத்து தொடர்பில் ஆளும் கட்சியின் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மட்டுமன்றி பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களும் அதிருப்தியடைந்துள்ளனர்.
ஜனாதிபதியின் கருத்துக்கு ஆளும் கட்சியில் ஒரு தரப்பினர் ஆதரவினை வெளியிட்டுள்ள அதேவேளை, மற்றுமொரு தரப்பினர் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். புதிய அரசியல் சாசனமொன்று உருவாக்கப்பட உள்ள நிலையில் ஜனாதிபதி இவ்வாறான கருத்து வெளியிட்டமை ஆளும் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் இந்தக் குழப்ப நிலைமை உள்ளுராட்சி மன்ற அரசியல்வாதிகள் வரையில் வியாபித்துள்ளதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.